மேட் இன் இந்தியா ‘ப்ரின்ஸ்’ ரோபோ: சென்னை இளைஞரின் அசத்தல் வடிவமைப்பு!

5

நடக்கும் ரோபோ, பேசும் ரோபோ, ஆடும் ரோபோ, தொழிற்சாலை பணிகளில் உதவும் ரோபோ, என்று தினம் தினம் சர்வதேச செய்திகளில் அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஜெர்மனி நாடுகளில் தயார் செய்த விதவித ரோபோக்களை பார்த்து மகிழ்கிறோம். எப்போது இதுபோன்ற பல்திறன் கொண்ட ரோபோக்களை இந்தியர்கள் தயாரித்து உலக அளவில் பிரபலப்படுத்தப் போகிறார்கள் என்ற அவா நம் அனைவருக்கும் உண்டு. சில ஆண்டுகளாக இந்திய மாணவர்களும், பொறியாளர்களும் அவ்வப்போது தங்களின் சொந்த முயற்சியில் ரோபோக்களை தயாரித்தும் வருகின்றனர். இருப்பினும் சமூகத்துக்கு உதவும் மனிதனுடன் பேசி தொடர்பு கொள்ளும் தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோக்கள் இந்தியாவில் அரிது. 

சென்னையை சேர்ந்த இளம் தொழில்முனைவர் தனது குழுவுடன் இணைந்து, இந்திய பாகங்களை முழுமையாக பயன்படுத்தி, ’மேட் இந்தியா’ ரோபோ ஒன்றை தயாரித்து அசத்தியுள்ளனர். ‘ப்ரின்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ரோபோ, அழகாக பேசும், உங்களுக்கு உதவியாக பணிகள் செய்யும், ஒரு நல்ல செல்லப்பிராணியை போல் உலாவரும். சரி இப்படிப்பட்ட ரோபோவை தயாரித்தவர்கள் யார்? அவர்கள் பின்னணி என்ன? இந்த குழுவைப் பற்றி முதன்முதலில் வெளியிடுகிறது தமிழ் யுவர்ஸ்டோரி...

ப்ரின்ஸ் ரோபோ உடன் புருஷோத்தமன்
ப்ரின்ஸ் ரோபோ உடன் புருஷோத்தமன்

புருஷோத்தமன், EPRLABs என்ற நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஒ. இவர்தான் இந்த ரோபோ’வின் பின்னால் இருக்கும் இளைஞர். சென்னையில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர், கம்ப்யூட்டர் சயின்சில் பி.ஈ. முடித்துள்ளார். ஆனால் அதையும் தாண்டி அவருக்கு பொறியியல் துறை மீது அதீத காதல். 

“இந்தியர்களால் அற்புதமான தயாரிப்புகளை உருவாக்கமுடியும் என்று இவ்வுலகிற்கு காட்டவேண்டும்,” என்று தீப்பொறியாக பேசுகிறார். 

முதல் தலைமுறை தொழில்முனைவர் ஆன புருஷோத்தமன், கல்லூரியின் இரண்டாம் வருடத்திலேயே தொழில்முனைவு பயணத்தை தொடங்கியதாக கூறினார். பொறியியல் படிப்பில் செயற்முறையாக எதையும் கற்கமுடியவில்லை என்ற ஆதங்கத்தால், அவர் ஒரு டிவி மெக்கானிக் இடம் பணிபுரியத்தொடங்கினார். பின்னர் சில பிரவுசிங் மையங்கள், பயிற்சி மையங்களிலும் பணிபுரிந்து அனுபவம் பெற்றார். எலக்ட்ரானிக்ஸ் மீது ஆர்வம் கொண்ட புருஷோத்தமன் அதுவே, தான் வருங்காலத்தில் பணிபுரியப் போகும் துறை என்று தீர்மானித்ததாக கூறினார். 

எலக்ட்ரானிக்ஸ் ஆர்வத்தில் தொழில்முனைவர் ஆன கதை

2009 இல் EPRLABs எனும் பொறியியல் துறையை செயல்முறையாக அனுக உதவும் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார் புருஷோத்தமன். பொறியியலில் பட்டம் பெற்ற பின், 2 ஆண்டுகள் சிங்கப்பூர் விடிஓ சீமன்ஸ் நிறுவனத்தில் பணி அனுபவம் பெற்ற பின் தன் சொந்த நிறுவனத்தை தொடங்கியதாக கூறினார். 

“நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் எஞ்சினியரிங் பாடப்பிரிவை எடுத்து செய்த தவறை திருத்திக் கொள்ள நினைத்தேன். சேவைத்துறை தொடர்பான நிறுவனத்தில் நுழைந்தால் நான் ஒரு சாதரண பொறியாளனாக மட்டுமே ஆவேன் என்று புரிந்தது. அதனால் 6 மாத காலம் என்னை தயார் படுத்திக்கொண்டு தயாரிப்புத்துறையில் ஈடுபட முடிவெடுத்தேன். அதாவது என் விருப்பப் பிரிவான எலக்ட்ரானிக்ஸ் துறையில்,” என்றார். 

புருஷோத்தமன் தனது குழுவுடன்
புருஷோத்தமன் தனது குழுவுடன்

பணி அனுபவம் நன்கு சென்று கொண்டிருந்தது என்றாலும், ஒரு கட்டட்தில் இவரது மேலாளர், புருஷோத்தமனை வயதில் இளையவர் என்று கூறி வளர்ச்சி அடையவிடவில்லை என்று தெரிவித்தார். பெரும்பாலான நிறுவனங்கள், நாட்டின் பிரபல கல்வி மையங்களில் பட்டம் முடித்து வருபவர்களை மதிக்கும் அளவிற்கு தன்னை போன்ற தொழில்நுட்பத்தில் வல்லுனர்களாக இருந்தாலும் வாய்ப்புகள் தர மறுப்பதாக குற்றம் சாட்டினார். மாதச் சம்பளமும் அதன் அடிப்படையிலேயே நிர்ணயம் செய்யப்படுவதும் வருத்தமானது என்றார். 

“எனக்கு பல்துறை திறன்கள் இருந்தும் எனக்கு தகுந்த வளர்ச்சி கிடைக்காதது எனக்கு புரிந்தது. அதனால் வாழ்க்கையில் ரிஸ்க் எடுத்து சுயமாக நிறுவனம் தொடங்கி என் திறமையை வெளிப்படுத்த முடிவெடுத்து 24 வயதில் EPRLABs தொடங்கினேன்,” என்றார். 

EPRLABs அளிக்கும் சேவைகள்

சொந்த முதலீடாக ரூ.35000 போட்டு சென்னையில் தொடங்கிய நிறுவனம் இது. ஆரம்பக்கட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ப்ரோகாமர் போர்ட் தயாரித்து பயிற்சிகள் அளித்து வந்தோம். சிறியதாக தொடங்கிய இந்த பணியில் பல மாணவர்கள் இணைந்து நிறுவனம் விரிவடைந்தது. நான் ஒரு தொழில் மாடலை தயாரித்தென், அதில் கிடைத்த நிதியை கொண்டு ரோபோ ஒன்றை டிசைன் செய்ய முடிவெடுத்தேன், என்கிறார் புரோஷத்தமன். 

”நான் என் நிறுவன ஊழியர்களை நண்பர்களை போல நடத்துகிறேன். அதிலும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் ஆர்வமுள்ளவர்களை ஊழியர்களாக எடுத்துக் கொள்வதில் தீவிரமாக இருக்கிறேன். என் ஊழியர்கள்  முழு மனதுடன் என்னுடைய கனவு நினைவாக தங்களின் உழைப்பை அளித்தனர். நான் அதிர்ஷ்டசாலி,” என்றார். 

இந்திய ரோபோ’வை உருவாக்க கண்ட கனவு

பல பொருட்களை தயாரித்தது EPRLABs. வாடிக்கையாளர்கள் விலை மலிவான தயாரிப்புகளையே விரும்புகின்றனர் என்று கூறும் புருஷோத்தமன், பின்பு அதை டெமோ செய்ய கேட்பார்கள் என்றும் கூறினார். 

“எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பில் சீனா மேலோங்கி இருப்பதை அறிந்தேன். அதனால் ரோபோ வடிவமைப்பை தேர்ந்தெடுத்தேன். அவர்கள் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தயாரிப்புத் துறையில் வல்லுனர்கள். ஒரு இந்திய நிறுவனமாக சீனர்களுடன் போட்டி போட, மெக்கானிகல், மென்பொருள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அடங்கிய ஒரு தளத்தை உருவாக்க முடிவெடுத்தேன்.”

சீனர்களின் மென்பொருளின் தரத்தை பற்றி எந்தவொரு தகவலும் இல்லையென்றாலும், இந்தியா மென்பொருள் தயாரிப்பில் வல்லமை படைத்தது என்பதில் சந்தேகமில்லை என்றார் மேலும். ரோபோடிக்ஸ் துறைக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்பதால் அதில் பணிபுரிய தொடங்கினார்கள்.

’ப்ரின்ஸ்’ ரோபோ என்னவெல்லாம் செய்யும்? 

‘ப்ரின்ஸ்’ என்று தனது ரோபோ’வுக்கு பெயரிட்டுள்ளனர் புருஷோத்தமன் மற்றும் குழுவினர். மூன்று ஆண்டுகள் கடுமையான உழைப்பின் பலனே இந்த ப்ரின்ஸ் ரோபோ. ப்ரின்ஸ், ஒரு சமூக ரோபோ, உபயோகமான செல்லப்பிராணியை போல என்கிறார் அவர். வீட்டை சுத்தப்படுத்தி, சமைத்து, பாதுகாப்பு வேலைகள் என்று அனைத்தையும் செய்து, நம்முடன் தொடர்பு கொண்டு இயங்கும் ஒரு அற்புத ரோபோ என்கிறார். அதன் பயன்களை பட்டியலிட்ட அவர்,

* சோஷியல் ரோபோ; பேசுவது, கேட்பது மற்றும் பார்ப்பது என்று அனைத்தையும் செய்யும்

* உதவும் ரோபோ; வீட்டை அற்புதமாக சுத்தம் செய்வது, பாத்திரங்களை கழுவுவது என்று பல வீட்டு வேலைகளை செய்ய உதவும்

* பாதுகாப்புப் பணிகள்; இதில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வீட்டை கண்காணித்து, படங்கள், வீடியோ எடுத்து எதாவது தவறு நடந்தால் உடனே இ-மெயில் அனுப்பிவிடும்

* கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு; ஏசி, வாக்யூம் க்ளீனர், போன்ற இயந்திரங்களை ப்ரின்ஸ் அவ்வப்போது கண்காணித்து, சுத்தம் செய்ய அறிவுறுத்தும். இவை வைஃபை வசதி மூலம் செய்யப்படும்  

* கேளிக்கை; எம்பி3 பாடல்களை போட்டு, அதற்கேற்ப நடனம் ஆடும் 

* கற்பித்தல்; குழந்தைகளுக்கு ரைம்ஸ் மற்றும் மாரல் கதைகளை அதன் போக்கில் சொல்லும்

இத்தனை செயல்பாடுகளை செய்யும் ‘ப்ரின்ஸ்’ ரோபோவை உலகம் முழுதும் சந்தைப்படுத்த திட்டம் வகுத்துள்ளார் புருஷோத்தமன். இதை கூட்டுநிதி மூலம் சாத்தியப்படுத்த முயற்சி எடுக்கப்போவதாகவும் கூறினார். 

நிறுவனத்துக்கு முதலீடு பெற எண்ணங்கள் இருக்கிறதா என்று கேட்டபோது? இதுவரை அந்த எண்ணம் இல்லை என்றும், நிறுவனம் வளர்ச்சி அடைந்தால் அதன் மதிப்பு தானாக வளரும் என்றார். அதன் பின்னர் முதலீடுகள் பற்றி யோசிப்பேன் என்கிறார்.

”உங்களுக்கு குறைவாக வருமானம் கிடைக்கிறது என்பதால் நீங்கள் முட்டாள் என்று அர்த்தம் இல்லை. இந்திய இளைஞர்கள் தங்களின் கனவை, ஆர்வத்தை நோக்கி ஓடவேண்டும். சமூகம், பெற்றோர், உறவினர், நண்பர்கள் எப்படி வேண்டும் என்றாலும் சிந்திக்கட்டும். நீங்கள் உங்கள் இலக்கின் பின் ஓடவேண்டும்,” 

என்று கூறி விடைப்பெற்றார் அந்த துடிப்பான இளைஞர்.