இலவச தொலைதூர கல்வி திட்டம் மூலம் நகர்புற, கிராமப்புற மாணவர்களுக்கு உதவிடும் தளம்!

0

தொலைதூரக் கல்வி கற்பது தொடர்பான தீர்வுகளை வழங்கி கற்றலை சுவாரஸ்யமாக்கும் நோக்கத்துடன் 25 வயதான சுனில் ஷர்மா 2012-ம் ஆண்டு ’ஈஸிசிக்‌ஷா’ (EasyShiksha) நிறுவினார்.

ஈஸிசிக்‌ஷா ஸ்டார்ட் அப் போன்று தோன்றினாலும் அது ஒரு கல்வி நிறுவனமாகவே செயல்படுகிறது. ஒருவரது கல்வி பட்டப்படிப்புடன் முடிந்துவிடுவதில்லை என்பதால் ஈஸிசிக்‌ஷா உங்களுக்கு ஆர்வமான பகுதியில் நீங்கள் படிப்பைத் தொடர உதவுதுடன் உங்களது செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு உங்களது பணி வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கவும் வழிகாட்டுகிறது,” 

என்கிறார் கணிணி அறிவியல் பாடத்தை சிறப்புப் பாடமாக தேர்வு செய்த பிடெக் பட்டதாரியான சுனில். இன்றைய டிஜிட்டல் உலகில் மாணவர்கள் தங்களது கல்லூரிப் படிப்புத் தொடர்பான தகவல்களையும் போட்டி தேர்வுகளுக்கு தயார்படுத்திக் கொள்வதற்கான பாடத் தொகுப்புகளையும் ஆன்லைனில் பெறுகின்றனர். அத்துடன் கல்வி நிறுவனங்கள் குறித்த நிகழ்நேர தகவல்களையும் ஆன்லைனில் பெறுகின்றனர்.

ஈஸிசிக்‌ஷா வாயிலாக பயனர்கள் ஆயிரக்கணக்கான கல்வி நிறுவனங்களையும் அதன் பாடங்கள், ஆசிரியர்கள், வசதிகள், வேலைவாய்ப்பு விவரங்கள் போன்றவற்றை ஆராய்ந்து மேற்படிப்பிற்குத் தகுந்த நிறுவனத்தை தேர்வு செய்துகொள்ளலாம். மேலும் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் தங்களது பாடங்கள் குறித்து விளம்பரம் செய்யவும் இந்தத் தளம் வாய்ப்பளிக்கிறது. அத்துடன் பல கல்வி நிறுவனங்களின் பத்திரிக்கை வெளியீடுகளும் இதில் இடம்பெறும். இதில் பள்ளியில் மாணவர் பதிவு, ஸ்காலர்ஷிப் வாய்ப்புகள், தேர்வு முடிவுகள், வேலை வாய்ப்புகள் போன்ற தகவல்களை குறிப்பிட்ட இடைவெளியில் வெளியிடப்படும்.

இந்த போர்டலை ஒரு மாதத்திற்கு 50,000-க்கும் அதிகமானோர் பார்வையிடுவதாகவும் ஒவ்வொரு 30 நாட்களில் 20 சதவீத புதிய பயனர்கள் இணைவதாகவும் இந்தக் குழுவினர் தெரிவித்தனர்.

துவக்கம்

ஹாக்ஸ்கோட் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முயற்சியான ஈஸிசிக்‌ஷா ஒவ்வொருவருக்கும் சிறப்பான கல்வி கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் துவங்கப்பட்டதாகும். கல்வி சார்ந்த இந்தத் தளம் கல்வியாளர்களுக்கும் கல்வி கற்போருக்கும் கல்வியை எளிதாக்க விரும்புகிறது.

சுனில் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர் என்பதால் கல்வி கற்பதில் பல்வேறு சவால்களைச் சந்தித்தார். சிறிய நகரம் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தாங்கள் தேர்வு செய்வதற்கு பல்வேறு வாய்ப்புகள் இருப்பது தெரிவதில்லை. இது குறித்த போதுமான விழிப்புணர்வு அவர்களிடையே இல்லை.

”இந்தியாவில் திறமைகள் அதிகளவு உள்ளது. எனினும் திறமைசாலிகள் தங்களை நிரூபிப்பதற்கான சிறப்பான தளத்தை அணுக சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தடைகள் இருப்பதை நான் உணர்ந்தேன்,” என்றார்.

நிதி நெருக்கடி, தகவல்கள் இல்லாத நிலை, நவீன கால கல்விப் பிரிவு குறித்த வழிகாட்டல் இல்லாத நிலை போன்ற காரணங்களால் குழந்தைகள் வழக்கமான சிந்தனைகளில் புதைந்துள்ளனர். இதனால் அவர்களது திறன்களுக்கு ஏற்றவாறான முறையான கல்வி பெறுவதில்லை என்கிறார் சுனில்.

எனவே சுனிலுக்குக் கல்வித் துறையில் செயல்படவேண்டும் என்கிற உந்துதல் ஏற்பட்டது. அனைத்து குழந்தைகளுக்கும் தகவல்கள் வழங்கப்படவும் உலகளவில் இருக்கும் பல்வேறு வாய்ப்புகள் குறித்து வழிகாட்டவும் விரும்பினார்.

பன்னாட்டு நிறுவன பணியை 2012-ம் ஆண்டு துறந்து ஈஸிசிக்‌ஷா நிறுவினார். இது ஜெய்ப்பூரைச் சேர்ந்த நிறுவனமாகும்.

”இன்றைய இணைய உலகில் கல்வி போர்டலின் உதவியுடன் கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாணவராலும் வாய்ப்புகள் குறித்து தெரிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு மாணவருக்கும் தரமான கல்வி கிடைக்கப்படவேண்டிய உரிமை உள்ளது என நினைக்கிறோம்,” என்றார்.

போர்டல்

ஆரம்பத்தில் ஈஸிசிக்‌ஷா இந்தியா முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான கல்லூரிகள் குறித்த தகவல்களை பயனருக்கு அளித்து வந்தது. மெல்ல மெல்ல இந்த போர்டல் கல்வி, வேலை, பணிவாழ்க்கைக்கான வாய்ப்புகள் ஆகியவற்றை மாணவர்களும் பெற்றோரும் தேர்ந்தெடுக்க உதவும் கருவிகளை (tools) வழங்கும் தளமாக மாறியது. 

இந்த வலைதளம் ஆறு ஆண்டுகளாக கீழ்கண்ட விதங்களில் செயல்படுகிறது:

1. கேரியர் ஹெல்பர் : இது மாணவர்கள் தங்களது பணிவாழ்க்கைக்கான வாய்ப்புகளை தெரிந்துகொள்ள உதவுகிறது. அவர்கள் தங்களது பலம், ஆர்வம், திறன் போன்றவற்றைக் கண்டறிய உதவுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு தொழில்கள் குறித்த தகவல்களை வழங்குகிறது. பணி வாழ்க்கைக்கு உதவும் இந்த திட்டமானது ஐக்யூ தேர்வு, அடிப்படை தேர்வு, மேம்பட்ட தேர்வு, உளவியல் ஆய்வு ஆகிய நான்கு சோதனைகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.

2. EasyShiksha மேகசின் : 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இது ஈஸிசிக்ஷா வலைதள போர்டலின் முன்வடிவம் (prototype) ஆகும். ஆய்வறிக்கைகள், வாய்ப்புகள், கல்வி உலகின் அவ்வப்போதைய புதிய தகவல்கள், கட்டுரைகள் என கல்வித் துறை தொடர்பான அனைத்துத் தகவல்களையும் பயனருக்கு அளிக்க விரும்புகிறது. தற்சமயம் இந்தப் பத்திரிக்கை டிஜிட்டல் வடிவில் உள்ளது. அச்சிடப்பட்ட வடிவம் விரைவில் வெளியாக உள்ளது. இரண்டாவது எடிஷனுக்கான பணிகளில் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

3. கேம்பஸ் அம்பாசிடர் : இந்த திட்டம் கல்லூரிகளுடனும் அதன் நிகழ்வுகளுடனும் நிறுவனங்கள் இணைந்திருக்க உதவுகிறது. இந்த முயற்சி உலகளவிலான தளத்தில் தங்களது கல்லூரியை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள் தங்களது எண்ணங்களை பகிர்ந்துகொண்டு கற்றலை மேம்படுத்திக்கொள்ள இந்தத் திட்டம் உதவும். ஈஸிசிக்ஷா நிகழ்வுகளை தங்களது வளாகத்தில் நிர்வகிக்கும் பொறுப்பும் இந்த அம்பாசிடர்களுடையதாகும்.

4. தொலைவழிக் கல்வி ஆன்லைன் கோர்ஸ்கள் : மாணவர்கள் நேரடியாக வகுப்பிற்கு செல்லாமல் தங்களது அறிவை மேம்படுத்திக்கொள்ள உதவும் 50 தொலைதூரக் கல்வி இலவச ஆன்லைன் வகுப்புகள் குறித்த தகவல்களை வழங்குகிறது. ப்ரோக்ராமிங், டிஜிட்டல் ஃபோட்டோகிராஃபி, சமையல், சாஃப்ட்வேர் டெஸ்டிங் போன்றவை இந்த வகுப்புகளில் அடங்கும்.

5. இலவச ஆன்லைன் தேர்வு : ரயில்வே, எஸ்எஸ்சி, வங்கி தொடர்பான பணிகள் போன்ற பல்வேறு அரசுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இந்தக் குழுவினர் ஆதரவளிக்கின்றனர். இந்த இலவச ஆன்லைன் தேர்வில் பயனர்கள் ஒரு குறிப்பிட்ட பாடத்தில் தங்களது திறன் மற்றும் அறிவை சோதித்துப் பார்க்கலாம்.

வணிக மாதிரி

ஈஸிசிக்‌ஷா பயனர்களுக்குக் கல்வித் துறை தொடர்பான தகவல்களை இலவசமாக வழங்குகிறது.

பைஜூஸ், கான் அகாடமி போன்ற வலைதள போர்டல்கள் இதே போன்ற சேவை அளித்து வந்தாலும் ஒரே தளத்தில் பல்வேறு சேவைகளை வழங்குவதே ஈஸிசிக்‌ஷாவின் தனித்துவம் என்கிறார் சுனில். கல்லூரி தேடல்கள், ஆன்லைன் வகுப்புகள், ஆன்லைன் தேர்வுகள், பணி வாழ்க்கைக்கான வழிகாட்டல் என பல்வேறு தகவல்களை ஒரே வலைதளத்தில் பெறலாம்.

பார்ட்னர்ஷிப் அடிப்படையிலான வருவாய் மாதிரியுடன் ஈஸிசிக்ஷா 2015-ம் ஆண்டு ஒரு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. எக்லிப்ஸ் எஜுகேஷன், ஃப்யூச்சர் ஸ்கோப், ஃபேர் எக்சிபிஷன் ஆர்கனைசர்ஸ், ஏக்யூடி, எச்டிஎஃப்சி க்ரெடிலா, இண்டியன் எஜுகேஷன் காங்கிரஸ் போன்றோர் இவர்களது பார்ட்னர்கள்.

எதிர்காலம் திறன் பயிற்சியை சார்ந்துள்ளது

நலந்தா, தக்‌ஷசீலா போன்ற பழம்பெறும் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் இருந்தாலும் ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களைத் தவிர தற்போது செயல்படும் பிற பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நடைமுறைக் கல்வியிலும் திறன் மேம்பாட்டிலும் கவனம் செலுத்துவதில்லை. பள்ளி அளவிலான கல்வியிலும் திறன் மேம்பாடு சார்ந்த பாடங்கள் எதுவும் இல்லை. நடைமுறை சாராத கோட்பாடு ரீதியான அறிவிலேயே முக்கியக் கவனம் செலுத்தப்படுகிறது.

வழக்கொழிந்த பாடதிட்டம் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாகும். பள்ளி மற்றும் கல்லூரி பாடதிட்டம் மேம்படுத்தப்படவில்லை. தொழில் துறை தேவைகளுக்கு ஏற்றவாறு கல்லூரி பாடதிட்டம் இருக்கவேண்டும். நமது கல்வி முறையில் ஆராய்ச்சி சார்ந்த திட்டம் எதுவும் இல்லை. நமது பல்கலைக்கழங்களில் இருந்தும் கல்லூரிகளில் இருந்தும் படைப்பாற்றல் திறன் கொண்டவர்களை உருவாக்கவேண்டும். இந்தியாவில் பணியை உருவாக்குபவர்கள்தான் தேவையே தவிர பணியைத் தேடுபவர்கள் அல்ல,” என்றார்.

திறன் சார்ந்த இலவச ஆன்லைன் தொலைதூரக் கல்வி திட்டம் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் மூலம் மாணவர்களுக்கு அதிகாரமளித்து படிக்கும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறார் சுனில். ஈஸிசிக்‌ஷா சமீபத்தில் மொபைல் சார்ந்த செயலியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

2017-ம் ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான் டிஜிஃபெஸ்ட்-டில் ’முன்னணி 25 ஸ்டார்ட் அப்களில் ஒன்றாக ஈஸிசிக்‌ஷா தேர்வானது.

ஆங்கில கட்டுரையாளர் : ஸ்ருதி கேடியா | தமிழில் : ஸ்ரீவித்யா