வங்கிகளில் அதிகரிக்கும் வைப்புநிதி- கட்டுமானத் தொழில் வளர்ச்சிக்கு உதவிடும் வழிகள்! 

0

மத்திய அரசின் 500 ,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் நாட்டின் அமைப்பு சாரா தொழிலில் மிக முக்கிய பங்கு வகிக்கும் கட்டுமானத் துறைப் பணிகள் தடையின்றி நடைபெறுவதில் தொய்வு ஏற்பட்டுளள்து.

தமிழக அரசின் கட்டுமான நல வாரியத்தின் அறிக்கையின்படி 10,11,184, பேர்கள், இத்துறையில் தொழிலார்களாக பதிவு செய்துள்ளனர். இவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மேற்கூறிய அறிவிப்பின் விளைவால் கட்டுமானத் துறையின் வேலை வாய்ப்புகள் பெருகுதல் வேண்டும் மற்றும் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் அமைதல் வேண்டும் .

பிரதமர் எடுத்துள்ள நடவடிக்கையின் காரணமாக நாடுமுழுவதும் உள்ள வங்கிகளில், பொதுமக்களிடமிருந்து 5 இலட்சம் கோடி ரூபாய் வைப்பு நிதியாக பெறப்பட்டுள்ளது. இந்நிதியில் குறிப்பிட்ட அளவு,  நிரந்தர வைப்பு நிதியாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது . இவ்வாறு பெற்றுள்ள நிதியினை வங்கிகள் கட்டுமானத் துறைக்கு கடனாக வழங்கும்பட்சத்தில் இத்துறையானது சிறப்பான வளர்ச்சியை  எட்டும். 

தமிழக அளவில் கட்டுமானத்  துறையில் ஈடுபட்டுள்ள 10 இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் தங்களின் வேலைவாய்ப்பினை உறுதி செய்துகொள்ள முடியும். மென்மேலும் இத்துறையில் வேலைவாய்ப்புகள் பெருகுவதற்கு இது வழிவகுக்கும். கட்டுமானத் தொழிலில் உள்ள வாய்ப்புகள் வழியாக நமது நாட்டில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மிக முக்கியமான அடிப்படை தேவை நல்லதொரு இருப்பிடமாகும். அந்த இருப்பிடத்தை தற்போதுள்ள குடும்ப நபர்களின் எண்ணிகைக்கு ஏற்ப சிறந்த குடிநீர் மற்றும் கழிப்பிட வசதியுடன் விரிவுபடுத்தி கட்டுவது ஒரு நல்லமுயற்சியாகும். இவற்றை நடைமுறைபடுத்த அதற்கான செலவின தொகையை கடனாக வழங்க வேண்டும்.

ஆனால் நடைமுறையில் அடித்தட்டு மக்களுக்கு வங்கிகள் கடன் அளிப்பது இல்லை. வங்கிகள் கடன் வழங்க எதிர்பார்க்கும் வருமான சான்றிதழ், சிறுவியாபாரம் என்றால் தணிக்கையாளர் அறிக்கை, விவசாயி என்றால் அவர்களின் கடந்த கால வங்கி நடவடிவக்கைகள் போன்ற ஆவணங்களை இவர்களால் சமர்பிக்க முடியவில்லை. இதனால் வங்கிகளில் கடன் அவர்களுக்கு கிடைப்பது இல்லை .

ஆனால் National Housing Bank (தேசிய வீடு கட்டும் வங்கி ) அனுமதி பெற்று கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் அமைப்பு சாரா தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு அவர்களின் வருமானம் மற்றும் கடந்த காலங்களில் அவர்கள் பெற்ற கடனை திருப்பி செலுத்திய விதத்தை அடிப்படையாக வைத்து கடன் கொடுக்கிறார்கள். அத்தகைய தகவல்களை Hi-Mark, Equifax, போன்ற Credit Bureau நிறுவனங்கள் தருகின்றனர். இத்தகைய கடன் வழங்கும் திட்டம் தனியார் நிறுவனங்களால் மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் கடன் வாங்கியவர்கள் கடனை முறையாக செலுத்தி வருகிறார்கள்.

தனியார் நிறுவனங்களால் நகர்புறத்தில் வசிக்கும் மக்கள், ’பிரதம மந்திரி அவாஸ் யோஜனா’ (Pradhan Manthri Awas Yojana- PMAY ) வீடுகட்டும் திட்டத்தின் மூலம் வீடுகட்டுபவர்கள் பெறுகின்ற ரூ 6 இலட்சம் கடனில் மானியமாக 6.5% ( Credit linked Subsidiary Scheme ) கிடைக்கின்றது. இவ்வாய்ப்பானது கிராமப்புற ஏழை மக்களுக்கும் வழங்கப்பட்டால் அவர்களின் அடிப்படைத் தேவையும் பூர்த்தி அடையும், மற்றும் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுக்கலாம்.

இத்தகைய மக்கள் ஏற்கனவே நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் (Micro Finance Institution) மூலம் பெற்ற கடன்களை 100% சரியாக திருப்பி செலுத்தி உள்ளர்கள். தற்சமயம் வங்கிகள் மக்களிடம் பெறுகின்ற நிதியினை வீடு கட்டும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இதனை இந்நிறுவனங்கள் வழியாக கடனாக அளித்தால் சிறப்பாக இருக்கும். பெரிய தொழில் நிறுவனங்ககளுக்கு கடன் வழங்கி ஏற்பட்ட வாராக்கடன் (NPA ) போன்ற இழப்புகள் இதில் மிக மிக குறைவாக இருக்கும்.

இதனால் கட்டுமானத்  துறையில் வேலைவாய்ய்ப்புகள் நேரிடையாகவும் மற்றும் அதனோடு தொடர்புடைய வேலைவாய்ப்புகள் மின்இணைப்பாளர் (Electrician), குழாய் அமைப்பவர் (Plumber), சிறிய வியாபார நிறுவனங்கள் போன்றவர்களுக்கான வேலை வாய்ப்புகள் பெருகும். பணப்புழக்கம் அதிகமாகி கிராமப்புற மக்கள் பயன் பெறுவர் .

(கட்டுரையாளர்கள்: ஜெரால்டு மற்றும் இன்பராஜ் 20 ஆண்டுகளுக்கு மேலாக சமூக ஆர்வலரகளாக உள்ளனர். நுண்கடன் வழங்கும் நிறுவனத்துடன் இணைந்து பணி செய்கின்றனர். கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் அவர்களது சொந்த கருத்துக்கள். இதற்கு தமிழ் யுவர்ஸ்டோரி பொறுப்பேற்காது.)