சென்னை ஓட்டுனர் சேவை நிறுவனம் 'டிரைவர்ஸ்கார்ட்' முதற்கட்ட நிதி பெற்றது!

0

'டிரைவர்ஸ்கார்ட் ' என்பது சென்னையில் இயங்கக்கூடிய ஓட்டுனர் சேவை வழங்ககூடிய நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் முதற்கட்டமாக ஒரு குறிப்பிட்ட நிதியை ah வென்ச்சர்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து பெற்றிருக்கிறது. இந்த நிதி திரட்டலில் சித்தார்த் பன்சாரி, அபூர்வா சலர்பூரியா, சாகேத் அகர்வால் மற்றும் ஆயுஷ் பத்னி, சிலிகான்வேலி முதலீட்டாளர்கள் மற்றும் நமித் அகர்வால் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த தொகையைக் கொண்டு தொழில்நுட்ப விரிவாக்கம், மேம்படுத்தப்பட்ட ஓட்டுனர் சேர்ப்பு மற்றும் பயிற்சி, மார்க்கெட்டிங் மற்றும் குழு உருவாக்கம் (குறிப்பாக அனுபவம் வாய்ந்த பணியாளர்களை வேலைக்கு எடுத்தல்) ஆகியவற்றுக்கு ஒதுக்கியுள்ளார்கள்.

டிரைவர்ஸ்கார்ட் குழு
டிரைவர்ஸ்கார்ட் குழு

டிரைவர்ஸ்கார்ட் பற்றி

டிரைவர்ஸ்கார்ட் நிறுவனம் 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உருவாக்கப்பட்டது. ஐஐஎம் கல்கத்தாவில் பயின்ற முன்னாள் மாணவர் வினித் ஸ்ரீவத்சவா இதைத் துவங்கினார். தற்போது இந்நிறுவனம் பெங்களூரு, மும்பை, புனே, டெல்லி மற்றும் சென்னை ஆகிய ஐந்து நகரங்களில் இயங்குகிறது. 20 பேர் இந்நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள்.

இவர்களின் வலைப்பின்னலில் 200 தொழில்முறை மற்றும் பின்னணி சரிபார்க்கப்பட்ட ஓட்டுனர்கள் இணைந்துள்ளனர். ஒரு நிமிடத்திற்கு இவ்வளவு என்ற அடிப்படையில் கட்டணம் வசூலிக்கிறார்கள். இதனால் எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறோமோ அதற்கு ஏற்ப கட்டணம் செலுத்தினால் போதும். இப்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்சில் இவர்களின் செயலி கிடைக்கிறது. இந்த செயலியின் மூலம் குறிப்பிட்ட நேரத்திற்கு குறிப்பிட்ட இடத்திற்கு ஓட்டுனர் வேண்டும் என்று புக் செய்து கொள்ளும் வசதியை அளிக்கிறார்கள். இதற்காக குழு ஒன்று இயங்குகிறது, அவர்கள் உங்கள் புக்கிங்கினை சரிபார்த்து பொருத்தமான ஓட்டுனரை அனுப்புவார்கள்.

இதுவரை 4000லிருந்து 5000 பேர் வரை இவர்களின் செயலியை தரவிறக்கம் செய்திருக்கிறார்கள். இப்போது மாதத்திற்கு நான்காயிரம் சவாரிகள் வீதம் இவர்களிடம் புக் ஆகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு நாளைக்கு பத்தாயிரம் சவாரி வழங்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளனர்.

"இப்போது ஆயிரம் பேருக்கு பதிமூன்று கார்கள் என்ற வீதத்திலேயே காரின் அளவு இருக்கிறது. கார் வாங்குபவர்கள் எண்ணிக்கை அபரிமிதமாக வளர்வதன் காரணமாக ட்ராபிக் மற்றும் பார்க்கிங் ஆகியவற்றில் நேரம் செலவாகிறது. எங்களின் ஓட்டுனர் சேவையைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்கள் நேரத்தை தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கைக்கு ஒதுக்கி அதனை மதிப்புள்ள ஒன்றாக்க முடியும்". என்கிறார் வினித்.

சவாரி மற்றும் அதற்கு ஆகும் நேரம் ஆகியவற்றை கணக்கிடக்கூடிய தானியங்கிக் கருவியை வைத்திருக்கிறார்கள். இதன்மூலம் பில் தொகை கணக்கிடப்பட்டு ஒரு சவாரி முடிந்ததும் ஓட்டுனர் மற்றும் வாடிக்கையாளருக்கு எஸ்எம்எஸாக அனுப்பப்படுகிறது. பேடிஎம் மூலம் பணம் செலுத்தும் வசதியையும் அளிக்கிறார்கள். இன்ஸ்டாமோஜோ மூலமும் பணம் செலுத்தலாம்.

முதலீட்டாளர் பற்றி

ah வென்சர்ஸ் என்ற முதலீட்டு நிறுவனம் 2010ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்நிறுவனம் இதுவரை 23 நிறுவனங்களில் 75 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறார்கள். இதில் டிரைவர்ஸ்கார்ட் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள நிறுவனங்களும் அடக்கம்.

“டிரைவர்ஸ்கார்ட் நிறுவனத்தால் நாடு முழுவதும் சேவை வழங்கக்கூடிய அளவிற்கு தங்களை விரிவுபடுத்திக்கொள்ள முடியும். டிரைவர்ஸ்கார்ட்டில் இருக்கும் குழுவானது திறமை வாய்ந்த ஒன்றாகும். அவர்களின் செயல்பாட்டுத்தன்மை மற்றும் தொழில் முனைவோருக்கான புத்திக்கூர்மை ஆகியன திறமையான செயல்பாட்டுக்கும் நிறுவன வளர்ச்சிக்கும் வித்திடும்.” என்கிறார் ஹர்ஷத் லகோடி. இவர் ah வென்சர்ஸ் நிறுவனத்தின் நிறுவனராகவும் தலைமை செயல் அதிகாரியாகவும் இருக்கிறார். இந்நிறுவனத்தில் 700க்கும் அதிகமான முதலீட்டாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் துவக்க முதலீட்டாளர்களும் வென்ச்சர் கேப்பிடல்களும் அடக்கம். இவர்கள், எட்-டெக் வென்சர் ஹார்னெஸ் ஹாண்டிடச் என்ற நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் முன்பு முதலீடு செய்து சமீபத்தில் தான் லாபம் எடுத்து வெளியேறினார்கள்.

இந்த துறையின் எதிர்காலம்

இந்தியாவில் கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தற்போது இந்தியாவில் ஆயிரம் பேருக்கு 18 கார் என்று இருக்கிறது. உலகளவில் இந்தியா 160வது இடத்தில் இருக்கிறது. இது 2025ம் ஆண்டில் ஆயிரம் பேருக்கு 35 கார்கள் என்ற அளவில் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குர்கானைச் சேர்ந்த டிரைவர்பட் என்ற நிறுவனம் 25 ஓட்டுனர்களை முழு நேரமாகவும், 80 ஓட்டுனர்களை ஃப்ரீலான்சாகவும் வைத்திருக்கிறார்கள். இவர்களிடம் முழு நேரமாக ஓட்டுனர்களை வேலைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்பது சிறப்பம்சம். இவர்களிடம் தற்போது 1500 பதிவு செய்த பயனர்கள் இருக்கிறார்கள்.

பெங்களூரைச் சேர்ந்த டிரைவ்யூ என்ற நிறுவனம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மலிவு விலையில் சேவை வழங்கக்கூடிய நிறுவனமாகும். இவர்கள் ஜனவரி 2016 வரை ஆறாயிரம் வாடிக்கையாளர்களைக் கொண்டு பதினைந்தாயிரம் சவாரியை பூர்த்தி செய்திருக்கிறார்கள். இந்த வாடிக்கையாளர்களில் அறுபது சதவீதத்தினர் பெண்கள். இந்த நிறுவனம் யுனிடஸ் சீட் ஃபண்ட் என்ற நிறுவனத்திடம் இருந்து ஒரு தொகையை நிதியாக திரட்டி நிறுவனத்தை விரிவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.

இவையெல்லாம் ஒருபுறமென்றால், மும்பை இன்ஸ்ட்யூட் ஆஃப் சாபர் சர்வீஸஸ் என்ற நிறுவனம் இதுபோன்ற டிரைவர்களுக்கான பயிற்சியை அளிக்கிறது. இந்நிறுவனம் 2011ம் ஆண்டு துவங்கப்பட்டது. தற்போது வரை ஆயிரம் ஓட்டுனர்களை உருவாக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இணையதளம் : Driverskart

ஆங்கிலத்தில் : அபராஜிதா சவுத்ரி | தமிழில் : ஸ்வரா வைத்தீ