தடைகளைத் தகர்த்தெறிந்து சாதிக்கும் அம்மாக்கள்!

0

சமூகத்தின் அனைத்து நிலையிலும் உள்ள அம்மாக்களை நாம் போற்றி வணங்குகையில் தங்களது நிலையை எட்டுவதற்காகத் இவர்கள் எதிர்கொண்ட அனைத்துத் தடங்கல்களையும் தகர்த்தெறிந்த சாதாரண பெண்கள் சிலர் மீதும் வெளிச்சம் பாய்ச்சுவோம்.

இவர்கள் தங்களது குழந்தைகளுக்கு சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் நோக்கத்துடன் வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்து சவால்களையும் துணிச்சலுடனும் மன உறுதியுடனும் எதிர்கொண்டு செயல்படுகின்றனர்.

ஷோபா - ஆட்டோ ஓட்டுநர், மைசூரு

”ஒரு பெண் என்பவள் டீ பேக் போன்றவர். அதை வெந்நீரில் போடும் வரை அது எவ்வளவு திடமானது என்பது உங்களுக்கு தெரியாது,” என்றார் எலினோர் ரூஸ்வெல்ட்.

ஷோபாவின் கணவருக்கு மூளையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டபோது ஷோபாவின் வாழ்க்கையே மாறிப்போனது. அவரது மகள் சிறு குழந்தை. குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வருவாய் ஈட்டுவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை.

”என் அப்பா மருத்துவமனையில் எனக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுத்தார். இரவுநேரப் பணி இருந்ததால் எனக்கு சிரமமாக இருந்தது. பெங்களூருவில் பெண் ஓட்டுநர்கள் இருப்பதைக் கண்ட என் உறவினர் சிலர் ஆட்டோ ஓட்ட பரிந்துரைத்தனர். அப்படித்தான் நான் ஓட்டுநர் ஆனேன்,” என்றார்.

தற்போது 42 வயதாகும் ஷோபா பத்தாண்டுகளுக்கும் மேலாக நகரில் ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த இரண்டாண்டுகளாக தனது வாகனத்தை ஓலா தளத்துடன் இணைத்துள்ளார். வாழ்க்கையில் பல மாறுதல்கள் ஏற்பட்டது.

”நான் ஆட்டோ ஓட்டத் துவங்கியபோது ஒரு பெண்ணாக இந்தத் துறையில் செயல்படுவது கடினமாக இருந்தது. குடும்பத்தின் தேவைகள் அனைத்தையும் என் வருவாயை மட்டுமே கொண்டு பூர்த்தி செய்தாக வேண்டும். இரவு வெகு நேரம் கழித்து செல்லும் பயணங்களையும் வெகு தூரம் செல்லும் பயணங்களையும் தவிர்க்கவேண்டியிருந்ததால் குறைவான வருவாயே ஈட்ட முடிந்தது. ஆனால் ஓலாவுடன் இணைந்த பிறகு எளிதாக வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். என் வருவாயும் மும்மடங்காக அதிகரித்தது,” என்றார்.

14 வயதான அவரது மகள் தன் அம்மாவை நினைத்து பெருமையடைகிறார். ”அப்பா இல்லாத குறையே தெரியாமல் வளர்த்தேன். நானே அம்மாவாகவும் அப்பாவாகவும் இருந்து வருகிறேன். தனியாக அவரை வளர்த்து வருவதைக் கண்டு பெருமையடைகிறார். அவருக்காக நான் மிகப்பெரிய கனவுகள் கொண்டுள்ளேன். அவர் நன்றாக படித்து அவருக்கு விருப்பமான பணியைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என விரும்புகிறேன்,” என்றார்.

சௌம்யா – ஆட்டோ ஓட்டுநர், மைசூரு

சௌம்யா பட்டப்படிப்பை முடித்த பிறகு எம்பிஏ படிக்க விரும்பினார். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. அவரது ஆங்கிலத் திறன் சிறப்பாக இல்லாததுதான் அதற்குக் காரணம் என என்னிடம் தொலைபேசி வாயிலாக தெரிவித்தார்.

பதிலுக்கு அவரது ஆங்கிலத் திறன் சிறப்பாகவே உள்ளதாக நான் குறிப்பிட்டபோது அவர் புன்னகைத்தார்.

”மேடம், என்னுடைய ஆட்டோவில் பயணம் செய்பவர்களிடம் ஆங்கிலம் பேசி கற்றுக்கொண்டிருக்கிறேன்,” என்றார். அவரது குரலில் ஒருவிதமான பெருமையுடன்கூடிய தொனியை உணரமுடிந்தது.

26 வயதான இவர் பல ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டு வருகிறார். கடந்த ஒன்பது மாதங்களாக ஓலா நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுகிறார். 

“என்னுடைய அப்பா ஆட்டோ ஓட்டுநர். சிறு வயதிலேயே ஆட்டோ ஓட்ட கற்றுக்கொண்டேன். நான் படித்துக்கொண்டிருந்தபோதே என்னுடைய குடும்பத்திற்கு கூடுதல் வருவாய் ஈட்டித் தர பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டியுள்ளேன்,” என்றார்.

அவருக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தை பிறந்த பிறகு முழு நேரமாக ஆட்டோ ஓட்ட ஓராண்டு காத்திருந்தார். ”ஓட்டுநராக இருப்பதால் நெகிழ்வான பணி நேரம் கிடைக்கிறது. இந்த வசதி வழக்கமான 9 மணி முதல் 5 மணி வரையிலான பணியில் கிடைக்காது. என்னுடைய மகனை பார்த்துக்கொள்ளவும் என்னுடைய வசதிக்கேற்ப சவாரிகளை ஒப்புக்கொள்ளவும் முடிகிறது,” என்றார்.

சௌம்யா ஒரு நாளில் 10-12 சவாரிகள் மேற்கொள்கிறார். சுமார் 120 கிலோமீட்டர் பயணிக்கிறார். சில சமயங்களில் பயணிகள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை எனில் மகனையும் உடன் அழைத்துச் செல்கிறார். ”என்னுடைய குடும்பம் எனக்கு ஆதரவளித்து ஊக்கமளிக்கிறது. நெகிழ்வான பணி நேரம் என்பதால் முழு நேரமாக ஆட்டோ ஓட்டும் பணியை மேற்கொள்ள என்னுடைய மாமியார்தான் எனக்கு பரிந்துரை செய்தார்,” என்றார் சௌம்யா.

அவரது மகன் வளர்ந்து அவரது பாதையையே பின் தொடர்ந்தால் அவர் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வாரா? 

இதற்கு நடைமுறைக்கேற்றவாறு சிந்தித்து பதிலளிக்கும் சௌம்யா,

 ”நீ தவறான செயலில் ஈடுபடாத வரை நீ மேற்கொள்ளும் பணி எதுவாக இருந்தாலும் அதை கௌரவமாக செய் என என் அப்பா எப்போதும் கூறுவார்,” என்றார்.

ஒவ்வொரு அம்மாவைப் போலவே சௌம்யா தனது குழந்தைக்காக பெரிய கனவுகளுடன் உள்ளார். 

”அவருக்கு சிறப்பான கல்வி வழங்க விரும்புகிறேன். எப்போதும் அவருக்கு நல்ல அம்மாவாக இருக்கவே விரும்புகிறேன்,” என்றார்.

மகாலஷ்மி – கேப் ஓட்டுநர், பெங்களூரு

மகாலஷ்மி தனது குடும்பத்தின் நிலையை மேம்படுத்த விரும்பினார். மூன்றாண்டுகளுக்கு முன்பு வேலை வாய்ப்பு குறித்து ஆராய்ந்தபோது ஓலா நிறுவனத்தின் பணி வாய்ப்பு குறித்து அறிந்தார்.

நெகிழ்வான பணி நேரமும் சௌகரியமும் அவர் ஓலாவின் ஓட்டுநராக தனது பயணத்தைத் துவங்க வழிவகுத்தது.

அவரால் தனது குடும்பத்திற்கு வசதியான வாழ்க்கையை அளிக்க முடிகிறது. அத்துடன் ரெசிடென்ஷியல் பள்ளியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவரது இரண்டு குழந்தைகளின் படிப்புத் தேவைகளையும் அவரால் பூர்த்தி செய்ய முடிகிறது.

”வெறும் இல்லத்தரசியாக மட்டுமே இருக்க நான் விரும்பவில்லை. வெளியில் சென்று ஏதேனும் சொந்த முயற்சியில் ஈடுபட விரும்பினேன். கேப் ஓட்டுவதால் நான் சுதந்திரமாக உணர்கிறேன். சௌகரியமான உணர்வும் ஏற்படுகிறது,” என்றார்.

மகாலஷ்மிக்கு இரண்டு குழந்தைகள். அவரது மகளின் வயது 12. மகனின் வயது 10. பெங்களூருவின் கே ஆர் புரம் பகுதியில் வசிக்கிறார்.

“என் குழந்தைகள் நல்ல பள்ளியில் படிக்கிறார்கள். அவர்கள் வளர்ந்து பெரியவர்களானதும் கேப் ஓட்டுநராக அவர்கள் பணிபுரிய நான் விரும்பவில்லை. அவர்கள் மருத்துவர்களாகவோ பொறியாளர்களாகவோ ஆகவேண்டும் என விரும்புகிறேன். அவர்களுக்கு சிறப்பான வாழ்க்கை அமையவேண்டும்,” என்றார்.

வாடகைக்கு விடுவதற்காக மேலும் ஒரு கார் வாங்கவேண்டும் என்பதற்காக சேமித்து வருகிறார். ”வாழ்க்கை சிறப்பாக உள்ளது. என் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை நினைத்து மகிழ்கிறேன்,” என்றார்.

ஆங்கில கட்டுரையாளர் : ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில் : ஸ்ரீவித்யா