சாலைவிளக்குகளை ஸ்மார்ட்டாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஸ்டார்ட் அப்!

0

கடந்த ஆண்டு மே மாதம் வரை யுடோபியாடெக் உருவாக்கும் திட்டம் கோத்ரெஜ் க்ரூப் ஊழியர்களான ஆயுஷ் ஜெயின் மற்றும் ஷஷாங்க் ஷாவின் மனதளவிலேயே இருந்து வந்தது. அதன் பிறகு பொறியியல் படிப்பை ஒன்றாக படித்த இவ்விருவரும் அந்த திட்டத்திற்கு வடிவம் கொடுத்தனர்.

ஆயுஷ் மற்றும் ஷஷாங்குடன் அவர்களுடன் படித்த மற்றொரு நபரான மித்தேஷ் பஜாரியா என்கிற மென்பொருள் பொறியாளர் இணைந்துகொண்டார். இணையதளம் சார்ந்து செயல்படும் வெளிப்புற விளக்கை உருவாக்குவதில் இவர்கள் அனைவருக்கும் இருந்த ஆர்வம் யுடோபியாடெக் உருவாக வழிவகுத்தது. அதற்கு முன்பு இந்தியாவின் சாலை விளக்குகள் சந்தை, இணைக்கப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் நகர்புற வளர்ச்சியில் அதன் தாக்கம் ஆகியவை குறித்த ஆய்விற்காக சுமார் ஓராண்டு செலவிட்டனர். 

இந்தியாவில் ஒவ்வொரு இரவும் 30 மில்லியன் சாலை விளக்குகள் போடப்படும் நிலையில் அவை மனித தலையீட்டுடனே நிர்வகிக்கபடுகிறது. இதனால் பழுதைக் கண்டறிதல் மற்றும் சீரமைத்தல், மின் திருடு, தேவையற்ற பயன்பாடு போன்றவை ஏற்படுகிறது. 

“இந்தப் பகுதியில் வெகு சில இந்திய நிறுவனங்களே செயல்படுகிறது. தேவை இருப்பினும் இதற்கான தீர்வுகள் பொதுவானதாகவே இருந்தது. அத்துடன் விழிப்புணர்வும் குறைவாகவே இருந்தது,” என ஆயுஷ் யுவர்ஸ்டோரியுடன் பகிர்ந்துகொண்டார்.

யுடோபியாடெக் தீர்வு காணவேண்டிய பிரச்சனையைக் கண்டறிந்தது. இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட சமயத்தில் சாத்தியக்கூறுகள் நிறைந்த 8 முதல் 10 க்ளையண்டுகளையும் சந்தித்தனர். இவர்கள் முக்கிய தீர்வை மெருகேற்றினர். வெளிப்புற விளக்குகளை ஐஓடி தொழில்நுட்பம் கொண்டு நிர்வகித்தல் மற்றும் தானியங்கிமயமாக்கல் என்பதே அந்த தீர்வாகும்.

இது எவ்வாறு செயல்படுகிறது?

ஆயுஷ் விவரிக்கையில்,

“சாலை விளக்குகளின் ஜங்ஷன் பாக்ஸில் ஒரு சாதனைத்தை நாங்கள் பொருத்துவோம். அதன் பின்னர் மென்பொருளின் உதவியுடன் மின் அடிச்சுவடுகள் சேகரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு தரவுகள் ஆய்வு செய்யப்படும். எனவே விளக்குகளை ரிமோட் உதவியுடன் எரியவைக்கவும் அணைக்கவும் முடியும் என்பதுடன் அலாரத்துடன் தானியங்கிமயமாக்கவும் முடியும். இது மின் பயன்பாட்டை 10-15 சதவீதம் குறைப்பதுடன் மின் பழுதுகளை கண்டுபிடிக்கும் திறனை மேம்படுத்தி அடுத்தகட்ட நடவடிக்கையை துரிதப்படுத்துகிறது.

யுடோபியாடெக் இரண்டு வகையில் தீர்வுகளை வழங்குகிறது. ஒன்று விளக்குபெட்டிகளில் பொருத்தப்படும் ஹார்டுவேர் ப்ராடக்ட். மற்றொன்று க்ளையண்டிற்கு சேவையாக வழங்கப்படும் பிரத்யேக தேவைக்கேற்ப உருவாக்கப்படும் தரவு கண்காணிப்பு மென்பொருள் மற்றும் மொபைல் செயலி.

மென்பொருள் தரவுகளை வரைபடமாகவும் நிகழ்நேர அடிப்படையிலும் வழங்குவதால் முடிவெடுக்கும் திறன் மேம்படுத்தப்படுகிறது. எலக்ட்ரீஷியன்களும் லைன்மேன்களும் அலாரம், எச்சரிக்கை, நினைவூட்டல் ஆகியவற்றை தங்களது போனில் அமைத்துக்கொள்ள செயலி உதவுகிறது.

”மின்சேவை தடைபட்டால் உடனடியாக எச்சரிக்கை அனுப்பப்படுவதை எங்களது செயலி உறுதிசெய்யும்,” என்றார் ஆயுஷ்.

யுடோபியாடெக் உருவாக்கியிருக்கும் ஹார்டுவேர் ப்ராடக்ட் ஸ்மார்ட் டைம் ஸ்விட்ச் என்று அழைக்கப்படுகிறது. விளக்கு பெட்டியில் எந்தவித கட்டமைப்பு மாற்றமும் தேவைப்படாது என்பதே இந்த சாதனத்தின் தனித்துவமான அம்சமாகும். 

”பில்போர்டிலோ அல்லது வெளிப்புற விளக்கிலோ STM-ஐ தனியாக இணைத்துக் கொள்ளலாம். கூடுதலாக இணைத்துக்கொண்டு தீர்வை பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது,” என்றார் ஆயுஷ்.

வணிக ரீதியான அறிமுகம் மற்றும் திட்டங்கள் 

இந்த ஸ்டார்ட் அப் ஸ்மார்ட் டைம் ஸ்விட்ச் வசதியை மார்ச் மாதம் 2018-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் வாயிலாக காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளது.

மும்பையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஸ்மார்ட் நகரமான பல்லவா சிட்டியில் முதல் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த முதல் சோதனை முயற்சிக்குப் பிறகு நவி மும்பையில் ரிலையன்ஸ் கார்ப்பரேட் பார்க், தானேவில் ஹிராநந்தனி எஸ்டேட், ஐஐடி மும்பை, என்ஐடி ராய்பூர், ஐஎஸ்பி ஹைதராபாத் ஆகிய இடங்களில் சோதனை முயற்சி தொடர்ந்தது. சன்ரைஸ் பப்ளிசிட்டி என்கிற மிகப்பெரிய பில்போர்ட் விளம்பர ஏஜென்சியும் இணைந்துகொண்டது.

ஆறு மாதங்களுக்குள்ளாகவே ஸ்மார்ட் டைம் ஸ்விட்ச் சுமார் 2,000 சாலைவிளக்குகள் மற்றும் வெளிப்புற விளக்குகளை கட்டுப்படுத்தத் துவங்கியது. ஒவ்வொரு சாதனமும் ஒரு பகுதியில் 30-40 விளக்குகளை நிர்வகிக்கும் திறன் கொண்டது என்று இந்த ஸ்டார்ட் அப் தெரிவிக்கிறது. தற்சமயம் வளாகங்கள், சாலைகள், ஹவுசிங் சமூகங்கள், தனியார் பூங்காக்கள் போன்றவற்றை இலக்காகக் கொண்டுள்ளது. 

”ஏனெனில் அரசுப் பிரிவை எங்களால் அணுக முடியாது,” என்றார் ஆயுஷ்.

யுடோபியாடெக் தனது தயாரிப்பை தென்கிழக்கு ஆசிய பகுதி துவங்கி சர்வதேச சந்தையில் விற்பனை செய்வதற்காக ஹைதராபாத்தில் உள்ள ஏசிஎஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது. மாநில நெடுஞ்சாலை திட்டங்களுக்காக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் ஆலோசனை நடத்தி வருகிறது. அதே போல் இந்தியாவின் பழமையான மற்றும் மிகப்பெரிய பொழுதுபோக்கு பூங்காவான ஜீ க்ரூப்பால் இயக்கப்படும் EsselWorld நிறுவனத்துடனும் சீரமைப்பு திட்டத்திற்காக ஆலோசனை நடத்தி வருகிறது.

2018-ம் ஆண்டு இறுதிக்குள் இந்த ஸ்டார்ட் அப் 20,000 விளக்குகளை கட்டுப்படுத்தவும் மும்பையைத் தாண்டி செயல்படவும் விரும்புகிறது என்றார் ஆயூஷ்.

சோதனை முயற்சி மேற்கொண்ட நிறுவனங்களிடம் இருந்து அதிகளவிலான நீண்ட கால ஆர்டர்களை உருவாக்கியுள்ளோம். 150 சாதனங்கள் முன்னரே புக் செயப்பட்டுள்ளது. மூன்று சாதனங்கள் பேங்காக் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக வளாகங்களையும் தொழிற்சாலைகளையும் கொண்ட பகுதிகளான மும்பை, டெல்லி, குஜராத், தெலுங்கானா ஆகிய நான்கு முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்துகிறோம்.

சுற்றுச்சூழல் ஆதரவு

”மும்பையைச் சேர்ந்த தொழில்நுட்ப ஆக்சலரேடரான ஜோன் ஸ்டார்ட் அப்ஸ் இண்டியா மற்றும் பல்லவா ஆக்சலரேட்டர் (ஜோன் ஸ்டார்ட் அப்ஸின் பார்ட்னர்ஷிப்புடன் லோதா க்ரூப்பால் அமைக்கப்பட்ட நிறுவனம்) ஆகிய நிறுவனங்களின் ஒரு பகுதியாக செயல்படுவதால் யுடோபியாடெக் நிறுவனம் நேரடியாக முக்கிய வாடிக்கையாளர்களை அணுகும் வாய்ப்பு கிடைத்துள்ளது,” என்றார் ஆயுஷ்.

”பி2பி ஸ்டார்ட் அப்பிற்கு முதல் க்ளையண்டைப் பெறுவது எப்போதும் கடினமானதாகும். க்ளையண்ட் பெரிய நிறுவனமாக இருக்கும் பட்சத்தில் சவால்களும் அதிகமாவே காணப்படும். எங்களது பல்லவா சோதனை முயற்சி வாடிக்கையாளர்களைப் பெற உதவியது. அத்துடன் வளர்ச்சி சுழற்சியையும் குறைத்தது,” என்றார் ஆயுஷ்.

பல்லவா ஆக்சலரேடர் யுடோபியாடெக் நிறுவனத்தை மஹாராஷ்டிராவின் ரியல் எஸ்டேட் பிரிவில் பிரபலமான லோதா க்ரூப்புடன் இணைத்தது மட்டுமின்றி அதன் பொறியாளர்களிடம் இருந்து கிடைத்த கருத்துகள் இறுதி வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு அதன் தயாரிப்பை மாற்றியமைக்கவும் உதவியது.

ஜோன் ஸ்டார்ட் அப்ஸ் இயக்குநரான அஜய் ராமசுப்ரமணியம் யுவர்ஸ்டோரியிடம் குறிப்பிடுகையில்,

“விலை, திட்டங்கள் வழங்குதல், பி2பி ஐஓடி நிறுவனர்களுடன் வழிகாட்டல், முதல் பெரிய வாடிக்கையாளர்களை பெறுதல் போன்றவற்றில் யுடோபியாடெக்கிற்கு உதவியது பல்லவா. இதுவே மற்ற பெரிய வாடிக்கையாளர்களைச் சென்றடைய வழிவகுத்தது. ஒரு சில நகரங்களில் உள்ள கூடுதல் டவுன்ஷிப்கள், கார்ப்பரேட் பூங்காக்கள் போன்றவற்றுடன் யுடோபியாடெக்கை இணைத்து வருகிறோம்,” என்றார்.

க்ளையண்ட், தொழில்நுட்ப ஆக்சலரேட்டர்கள் என இரு பிரிவினருக்கும் ஒன்றாக ஆர்வத்தை ஏற்படுத்தும் யுடோபியாடெக்கின் சிறப்பம்சம் எப்படி?

அஜய் கூறுகையில், “இது ஸ்மார்ட் நகரங்களின் பயன்பாடுகளுக்கு உகந்த எளிதான ப்ராடக்ட் திட்டமாகும். உடனடியாக பொருத்தப்படும் விதத்திலும் மின்சார பயன்பாட்டிற்கான செலவை குறைக்கும் விதத்திலும் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கும் விதத்திலும் இதன் தீர்வு அமைந்துள்ளது,” என்றார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பாதையில்…

மோடி அரசாங்கம் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குவதில் தீவிரம் காட்டும் நிலையில் யுடோபியாடெக் சரியான நேரத்தில் சரியான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவின் ஸ்மார்ட் சாலை விளக்குகள் சந்தை 2022-ம் ஆண்டில் 1.8 பில்லியன் டாலரை எட்டும் என இன்ஃபோஹோலிக் ரிசர்ச் தெரிவிக்கிறது. சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் ஸ்மார்ட் வீடுகளாக மாறி விரைவான நகரமயமாக்கலால் வளர்ச்சி அதிகரித்து வருவதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

அந்த அறிக்கையில்,

இந்தியாவில் ஸ்மார்ட் சாலை விளக்குகள் ஆரம்ப நிலையிலே உள்ளது. அடுத்த இரண்டாண்டுகளில் விரைவாக வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட் சாலை விளக்குகளை புதிதாக நிறுவும் திட்டம் 2015-ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவின் நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் சாலை விளக்குகளை மாற்றுவதற்கான பல்வேறு திட்டங்களும் அடுத்து வரும் ஆண்டுகளில் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் யுடோபியாடெக் மட்டுமே இந்தப் பிரிவில் செயல்படும் ஒரே ஸ்டார்ட் அப் அல்ல. சாலை விளக்குகளுக்கான க்ளௌட் சார்ந்த வயர்லெஸ் சிஸ்டமான கோவாவைச் சேர்ந்த Tungsta, டெல்லியைச் சேர்ந்த Li-Fi ஸ்டார்ட் அப்பான வேல்மென்னி ரிசர்ச் & டெவலப்மெண்ட் போன்றவை வெளிப்புற விளக்குகள் சந்தையில் செயல்படும் பிற நிறுவனங்களாகும்.

எனினும் ஏற்கெனவே இருக்கும் கட்டமைப்பை மாற்றாமல் தனியாக பொருத்தப்பட்டு தீர்வளிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் யுடோபியாடெக் சிறந்து விளங்குகிறது என்கிறார் ஆயுஷ். 

“இது எளிதாக பயன்படுத்தக்கூடியது. வெறும் முப்பது நிமிடங்களில் இதை பொருத்தி விடலாம்,” என்றார்.

இதுவரை சுயநிதியில் இயங்கும் இந்நிறுவனம் ஏழு உறுப்பினர்கைக் கொண்டுள்ளது. இந்த ஸ்டார்ட் அப்பிற்கு கிடைக்கும் உறுதியான ஆர்டர்கள் திருப்திகரமாகவே உள்ளது என்பதே இவர்களது கருத்தாகும். இணை நிறுவனரான ஆயுஷ் குறிப்பிடுகையில், “இந்த ஆண்டு இறுதியில் சீட் நிதிச்சுற்றை எதிர்நோக்குகிறோம். மூலோபாய கூட்டணிகளை (strategic partnerships) எதிர்நோக்கியுள்ளோம். அரசாங்கத்தையும் அணுகியுள்ளோம்,” என்றார்.

ஆங்கில கட்டுரையாளர் : சோஹினி மிட்டர் | தமிழில் : ஸ்ரீவித்யா

Related Stories

Stories by YS TEAM TAMIL