சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷுக்கு பெருகிய மக்கள் ஆதரவின் பின்னணி என்ன?

0

வறண்ட நிலத்தில் பல்லாயிரக்கணக்கான மரங்களை நட்டு பல நூறு உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தியுள்ள சமூக ஆர்வலர், பல விருதுகளை பெற்றுள்ள பியூஷ் மனுஷ், சிறைச்சாலையில் காவலர்களின் சித்தரவதைக்கு ஆளாகியுள்ளது மிகவும் துரதிர்ஷ்டமான ஒன்று. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உயரிய நோக்கோடு, சேலம் மாவட்டத்தை சுற்றி பல நன்மை பயக்கும் பணிகளை செய்துவரும் பியூஷுக்கு மக்கள் மற்றும் ஊடகங்களின் ஆதரவுக் குரல் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. #IStandWithPiyush எனும் ஹேஷ்டேக் மூலம் ட்விட்டர், ஃபேஸ்புக் இல் கடந்த மூன்று நாட்களாக ட்ரென்ட் ஆகியுள்ளது. தேசிய அளவில் இவரைப் பற்றி பலரும் இன்று பேசுகின்றனர். சமூக ஆர்வலர்களும், வழக்கறிஞர்களும் பியூஷுக்கு ஆதரவாக நாம் எல்லாம் இணைய வேண்டும் என்று கூறுவது எதற்காக? அப்படி இவர் என்னவெல்லாம் செய்திருக்கிறார்? தெரிந்து கொள்ளலாம்!

நன்றி: Twitter
நன்றி: Twitter

பியூஷ் மனுஷ் செய்துள்ள பணிகள்

பியூஷ் மனுஷை நன்கு அறிந்தவர்களிடம் சில மணி நேரம் உரையாடினால், தேசத்தின் மீது பியூஷ் வைத்திருக்கும் பற்று, நம்மை வியக்கவைக்கும். சேலத்தில் அவரது பசுமை சாம்ராஜ்யத்தில் நடந்து சென்றால் அவரது உழைப்பு நம் கண்களை குளமாக்கும். பச்சை பசேல் புல் வெளியில், இயற்கை நீர் ஆதரத்தோடு, விலங்குகளுக்கு தொந்தரவின்றி, பயோகாஸ் செடிகளுடன், வேப்பமரம், ரோஸ்வுட், மாமரம், சீதாமரம், பலா, சப்போட்டா மரம், பருத்திப்பட்டு, மற்றும் புன்னை மரங்கள் பூத்தும், காய்த்தும் தொங்குவதை பார்ப்பது கண்களுக்கு விருந்தாக அமையும். இந்த பண்ணை, அண்டை கிராமத்தைச் சேர்ந்த சுமார் 150 பங்குதாரர்களை உரிமையாளராக ஆக்கி சுய காலில் அவர்கள் தொழில் புரிய உதவியுள்ளது. பியூஷ் இவை அனைத்தையுமே, இயற்கையை பாதுகாத்து வளமான எதிர்கால சந்ததியினரை பெற எடுத்துள்ள முயற்சிகள் ஆகும். தன் மண்ணின் மீதும், இயற்கையில் மீதும் வைத்துள்ள அபார பற்றின் வெளிப்பாடாகும். 

நாடு முழுதும் பசுமை வழியை மேம்படுத்த ஒரு ஆர்வலராக பியூஷ் எடுத்துள்ள முயற்சிகள் எண்ணற்றவை. இயற்கைவழி விவசாயத்தை ஆதரித்து, விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பை அளித்து, கிராமம் மற்றும் குடிசைவாழ் தொழில்களை மேம்படுத்த நில ஆக்கிரமிப்பு மாஃபியாக்களின் அச்சுறுத்தல்களையும், அதிகாரவர்கத்தின் மிரட்டல்களையும் மீறி ஓயாது உழைத்து சாதனைகள் பல புரிந்தவர். 

கைதுக்கான சம்பவம்

சேலம் மாவட்டத்தில், முல்லவாடி எனும் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உதவியுள்ள பியூஷ், அங்குதான் பிறந்து வளர்ந்தார். தெற்கு ரயில்வே, மேம்பாலம் கட்டுவதற்காக, இங்குள்ள மக்களை நோட்டீஸ் ஏதுமின்றி காலி செய்யச் சொன்னபோது அவர்களுக்காக போராடி, தகுந்த நஷ்ட ஈடும், மறுவாழ்வும் ஏற்படுத்தித் தந்தவர். அந்த நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் முடிவடையாமலே, அங்குள்ள மக்களை அகற்றும் பணி தொடங்கியதை அவர் கண்டித்துப் போராடினார். 

'சேலம் குடிமக்கள் அமைப்பு' (Salem Citizens Forum SCF), இதன் ஒருங்கிணைப்பாளராக இருந்த பியூஷ், அந்த இடத்தில் போராட்டம் நடத்தினார். காவல்துறை அங்கு வந்ததும் தன் போராட்டத்தை கைவிடவும் ஒப்புக்கொண்டார். ஆனால், ஜூலை 8 ஆம் தேதி, பியூஷ் மீண்டும் அந்த இடத்துக்கு சென்று தன் இரண்டு ஆதரவாளர்களோடு போராட்டத்தை தொடர முடிவெடுத்தார். அங்குள்ள கட்டுமான பணியாளர்கள் பணிகள் செய்வதை தடுத்ததற்காக, பியூஷ் மனுஷ் மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகளை போலீஸ், ஐபிசி இன் கீழ் 'அரசு பணிகளை இடையூறு செய்வது, அரசு பணியாளர்களை அவர்களின் பணிகளை செய்வதிலிருந்து தடுப்பது' போன்ற கிரிமினல் வழக்குகளை பதிவு செய்து கைது செய்தனர். 

ஒரு வாரத்தில் பியூஷின் ஆதரவாளர்கள் வெளியில் விடப்பட்டனர் ஆனால் பியூஷின் பெயில் தள்ளுபடி செய்யப்பட்டது. இது வேண்டுமென்றே செய்யப்பட்டது என்று அவரது நெருங்கிய நண்பர்கள் கூறினர். மேலும் பியூஷ் சிறைக்குள் கடுமையாக தாக்கப்பட்டு, சித்தரவதை செய்யப்பட்டுள்ளார். அவரது வழக்கறிஞர் கூறியதுபடி, பீயூஷை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர். சுமார் 30 பேர் சேர்ந்து கைது செய்யப்பட்ட நாள் முதல் ஒரு வாரத்திற்கு அடித்துள்ளனர். தினசரி பத்திரிகைகள் படிக்கவோ, அவரது மனைவியுடன் பேசவோ அவர் அனுமதிக்கப்படவில்லை. 

சிறைக்கு பின்னால்

இத்தனை சித்தரவதைகளுக்குப் பின்பும் பியூஷ் தன் போராட்டத்தில் இருந்து பின்வாங்க மறுத்துள்ளார். அதிகாரத்துக்கும், கட்டாயத்துக்கும் கீழ் படிய மறுத்து, பின்விளைவுகள் பற்றியும் கவலையில்லாமல் மனதிடத்தோடு இன்றும் மக்களுக்காக நிற்கிறார். பியூஷ் மீது வழக்கு பதிவு என்பது புதிதல்ல. தன்னுடைய கல்லூரி நாட்களில், கல்லூரியின் அமைப்பை எதிர்த்து போராடியதற்காக, கல்லூரி முதல்வரை கொலை செய்ய முயற்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  

2010 ஆம் ஆண்டு, சேலத்தில் உள்ள கஞ்சமலை, இரும்பு தாது பொருட்கள் நிறைந்த பகுதியாக இருந்ததால், அதை எடுக்க முற்பட்ட பன்னாட்டு நிறுவன சுரங்க தொழிலாளர்களை தடுத்து அப்பகுதியை காப்பாற்றியுள்ளார் பியூஷ். அதே வருடம், சட்டிஸ்கர் மாநிலத்தில், மனித உரிமைக்கு எதிரான நடவடிக்கையை கண்டித்து, அமைதி மற்றும் நீதிக்கான பிரச்சார போராட்டத்திற்காக, இவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.  

சமூக நல ஆர்வலராக, கழிவு அகற்றம், பசுமை விவசாயம், வனப்பாதுகாப்பு என பல சமூக பிரச்சனைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் பியூஷ். கடந்த ஆண்டு சென்னை வெள்ளத்தின் போதும் தன்னால் ஆன உதவிகளை புரிய முன்வந்தவர் இவர். 

நாடெங்கும் பொங்கும் ஆதரவு

சமூக ஊடகங்கள் மனுஷுக்கு ஆதரவாக பொங்கி குரல் கொடுக்கத்துவங்கினர். Change.org இல் தொடங்கப்பட்ட மனு பெரும் ஆதரவை பெற்றது. மனித உரிமை போராளிகள் மதுமிதா தத்தா, ராதிகா ராம்மோஹன் போன்றோர் இவருக்கு ஆதரவாக ட்விட்டரில் போர்க்கொடி தூக்கியுள்ளனர். பிரபல சமூக ஆர்வலர் மேதா பட்கர் மனுஷ் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, முதலமைச்சர் ஜெயலலிதா இந்த பிரச்சனையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி கடிகம் எழுதினார். 

இத்தனைக்குப் பின் சேலம் மாவட்ட நீதிமன்றம், பியூஷை பெயிலில் விடுவித்தது, கோவை டிஐஜி (சிறைத்துறை) சேலம் மத்திய சிறைத்துறை அதிகாரிகளுக்கு பியூஷ் மீதான தாக்குதல் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க கேட்டுக்கொண்டுள்ளார். 

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்   

Deputy Editor, tamil.yourstory.com I love to meet new people and hear their stories and put it to words for the world to read.

Stories by Induja Ragunathan