சிறு கிராமத்தில் ஹிந்தி வழியில் படித்த சுரபி, ஐஏஎஸ் உட்பட பல தேர்வுகளில் ரேன்க் உடன் வெற்றிக் கண்ட ஊக்கமிகு கதை! 

0

மத்திய பிரதேசம் சத்னா மாவட்டத்தில் உள்ள அம்தரா கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் சுரபி கவுதம். இவர் 2016 சிவில் சர்வீஸ் பரிட்சையில் 50-வது ரேன்க் எடுத்து சாதனை படைத்துள்ளார். 

சுரபியின் தந்தை மைஹர் சிவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும், தாயார் சுசிலா கவுதம் ஆசிரியராகவும் பணியில் உள்ளனர். சுரபி படிப்பில் எப்போதும் சுட்டி. பன்னிரண்டாம் வகுப்பில் 93.4% எடுத்தார், அப்போது தான் கலெக்டர் ஆக ஆசைப்பட்டார். தன் கனவை நோக்கி தீவிரமாக உழைத்தார், வெற்றியும் கண்டார். 

சுரபியின் கிராமத்தில் போதிய வசதிகள் இல்லை, நல்ல ஆசிரியர்கள் கூட அந்த இடத்திற்கு வருவதில்லை. படிக்க புத்தகங்கள் கிடைக்காமல் பலமுறை தெரு விளக்கில் படித்துள்ளார். 

பள்ளி முடித்த சுரபி, பொறியியல் நுழைவுத்தேர்வு எழுதினார். அதில் நல்ல மதிப்பெண் பெற்று. அரசுக் கல்லூரியில் சேர்ந்தார். எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவில் போபாலில் சேர்ந்து, பல்கலையில் தங்கப் பதக்கத்தோடு தேர்ச்சி பெற்றார். 

கல்லூரிக்கு பின் பாபா அட்டாமிக் ரிசர்ச் செண்டரில் விஞ்ஞானியாக ஒரு வருடம் பணிபுரிந்தார். GATE, ISRO, SAIL, MPPSC, Delhi Police, மற்றும் FCI என்று பல தேர்வுகள் எழுதி எல்லாவற்றிலும் நல்ல மதிப்பெண்கள் எடுத்தார். 2013-ல் IES தேர்வில் அகில இந்திய அளவில் முதல் ரேன்க் பெற்றார். 2016-ல் தன் கனவு பணியான கலெக்டர் ஆக IAS தேர்வில் 50-வது ரேன்க் எடுத்தார் சுரபி.  

“என் பெற்றோர்கள் என்னுடன் எப்போதும் ஆதரவாக இருந்தனர். அவர்களே எனக்கு பெரிய ஊக்கம். நான் வெளியில் ட்யூஷன் சென்று படித்ததில்லை, எல்லாம் நானே படித்து பெற்ற மதிப்பெண்கள்,” என்கிறார் சுரபி. 

தனக்கு ஆங்கில் மொழி மட்டுமே சவாலாக இருப்பதாக கருதுகிறார் சுரபி. ஹிந்தி வழியில் பள்ளிப் படிப்பை முடித்ததால் ஆங்கில மொழியில் படிப்பது கடினமாக உள்ளதாக கருதினார். ஆனாலும், தன் முயற்சியை இருமடங்காக்கி ஆங்கிலத்தில் பாடங்களை படித்து கல்லூரியில் தீவிரமாக உழைத்தார். கல்லூரி முதல் ஆண்டிலேயே நல்ல மதிப்பெண் பெற்றதற்காக விருதும் பெற்றார்.

சுரபி எதிர்கொண்ட எல்லா தேர்வுகளிலும் முதல் முறையிலேயே வெற்றி கண்டுள்ளார். அவரின் கிராமத்தில் ஒரு சூப்பர் ஸ்டாராக அவரை எல்லாரும் பார்க்கின்றனர். அவளின் கிராமத்து குழந்தைகள் சுரபியை முன்மாதிரியாகக் கொண்டு படிப்பில் ஆர்வம் காட்டியும் வருகின்றனர்.

கட்டுரை: Think Change India


Related Stories

Stories by YS TEAM TAMIL