அம்பேத்கரின் ‘தக் லைஃப்’! 

0

சின்ன வயதில் பள்ளிக்கூடத்தில் தனியே உட்கார வைக்கப்பட்டது, தீண்டத்தகாதவர் என ரிக்‌ஷாவில் இருந்து இறக்கிவிடப்பட்டது, தண்ணீர் குடித்ததற்கு அடிக்கப்பட்டது, சமஸ்கிருதம் கற்றுக்கொள்ள விரும்பியிருந்தும் தன்னுடைய சாதியின் அடிப்படையால் சமஸ்கிருதம் மறுக்கப்பட்டது, பணியிடத்தில் தனக்குக் கீழே வேலை செய்யும் நபர்களால் தீண்டாமைக்கு ஆளானது என அம்பேத்கரை கிளர்ச்சியுறச் செய்ய ஏகப்பட்ட அவமான சம்பவங்கள் அவர் வாழ்வில் நடந்திருக்கிறது. 

சட்டமேதையாகவும், தீண்டாமைக்கு எதிராக பெரும் போர் தொடுத்த தலைவராகவும் போற்றப்படும் அம்பேத்கரின் நினைவு நாளை அடுத்து, அம்பேத்கர் தாக்கப்பட்ட கதைகளையே திரும்பத் திரும்ப பேசுவதை விட, அம்பேத்கர் ஒரு போராளியாக நின்று பேசிய கதைகளை பேசுவது இன்னும் உற்சாகமளிக்கும். 

அம்பேத்கரின் வீரம் பா.ரஞ்சித் திரைப்படங்களில் தலைவர்களாக (கபாலியாகவோ, காலாவாகவோ) வருபவர்களிடம் இருக்கும் வீரத்தை போன்றதாகவே இருக்கும் என்று அடிக்கடி உருவகித்து கொள்வதுண்டு. ஆணித்தரமாக ஒரு விஷயத்தை அடித்து சொல்லிவிட்டோ, ஒரு பேரணியை துணிச்சலாக நடத்திவிட்டோ அம்பேத்கர் நடக்கும் போது அங்கு ஒரு பிண்ணனி இசை ஒலித்து ‘தக் லைஃப்’ (thug life) என்றொரு டைட்டில் வருவதை கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம். 

அம்பேத்கரின் ‘தக் லைஃபில்’ இருந்து சில காட்சிகள்...

Image Courtesy : Ajay Priyan 
Image Courtesy : Ajay Priyan 

1. மஹாத் சத்தியாகிரஹா

1923 ஆம் ஆண்டு, அத்தனை பொது இடங்களுக்கும் தலித்துக்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றொரு தீர்மானத்தை கொண்டு வந்தது – காரணம் அதுவரை பொது நீர்நிலைகளில் இருந்து நீர் எடுக்கவும் தலித்துக்கள் அனுமதிக்கப்படவில்லை, பள்ளிகளிலும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. 1924 ஆம் ஆண்டில் உள்ளூர் முனிசிபாலிட்டி , சவ்டார் குளத்தில் இருந்து தலித்துக்கள் தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம் என்று சட்டம் கொண்டு வந்த பிறகும் கூட அது நடைமுறைபடுத்தப்படாமலேயே இருந்தது. இந்த நிலை மாற, 1927 ஆம் ஆண்டில் ஒரு பொதுக்கூட்டம் நடத்தினார் அம்பேத்கர். அதற்கு அடுத்த நாள், ஏறத்தாழ ஐந்தாயிரம் பேர் சவ்டார் குளத்திற்கு சென்று கை கழுவினார்கள்.

இதைத் தொடர்ந்து சாதி இந்துக்கள் குளத்தில் 108 குடம் புனித நீரை ஊற்றி குளத்தை “ சுத்தப்படுத்தினார்கள். 

மஹாத் முனிசிபாலிட்டி கொண்டு வந்த சட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டது. இரண்டையும் சவாலாக ஏற்றுக் கொண்ட அம்பேத்கர் ’மஹாத் சத்தியகிராஹா சமிதி’ என்றொரு அமைப்பை உருவாக்கினார்.

டிசம்பர் 25 அன்று புதிய சத்தியாகிரஹா ஒன்றை தொடங்கினார். 200 பேரோடு மஹாத்திற்கு புறப்பட்டார். வழியில் ஆயிரம் ஆயிரம் பேர் அவரோடு இணைந்து கொண்டார்கள். அப்போது சவ்டார் குளம் தனியார் சொத்து என்று நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டது. அதன் காரணமாக சத்தியாகிரஹாவை தள்ளிப் போட்டார். ஆனாலும், கல்வியின் அவசியத்தை மேலும் வலியுறுத்தி பேசினார். 

”நாம் எதற்காக போராடுகிறோம்? குடி தண்ணீருக்காகவா? தண்ணீரை குடிப்பதனால் நமக்கு பெரிதாய் எதுவும் கிடைக்கப் போவதில்லை. தண்ணீரை குடிக்க நமக்கிருக்கும் உரிமையை நிலைநாட்டவே நாம் போராடுகிறோம்,” எனப் பேசியிருந்தார். 

2. பெண்களுக்கான சட்டங்கள் :- 

பிரசவக் கால விடுமுறைக்கான மசோதாவும், இந்து கோட் மசோதாவும் சட்டரீதியாக பெண் விடுதலைக்கும், உரிமைக்கும் வலிமை சேர்த்தவை.

இதில், பெண்களுக்கான சொத்துரிமையையும், வரதட்சணை முறையை விமர்சித்தும் இருந்த இந்து கோட் பில், நேருவால் நிராகரிக்கப்பட்டது. காரணம், அது இந்து மதங்களின் நம்பிக்கைக்கு முற்றிலும் முரணாக இருந்தது. ஷ்யாமா பிரசாத் முகர்ஜி போன்ற பழமைவாதிகள் இந்து கோட் பில்லுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். பாராளுமன்றத்தில் இருந்த சரோஜினி கூட அம்பேத்கருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அம்பேத்கர் தன் சட்ட அமைச்சர் பதவியை விட்டு விலகினார். ஆனால், பிறகு 1955-56 ஆண்டுகளில் நேரு இந்த சட்டங்களை அமல் செய்தார்.

பிரசவக் கால விடுமுறையின் அவசியத்தை குறித்து பாராளுமன்றத்தில் பேசிய அம்பேத்கர், 

“பிரசவ கால விடுமுறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஒவ்வொரு நாட்டிலும், அதன் காரணமாக அரசாங்கத்திற்கு ஒரு குறிப்பிட்டத் தொகை அளிக்க வேண்டிய கடமை இருக்கும். ஆனால், ஒரு பெண்ணை வேலைக்கு வைத்திருக்கும் நபர், பெண்ணின் நலனுக்காக செயல்படும் இது போன்ற திட்டங்களில் தனக்கு ஒரு பங்கும் இல்லை என்று விலகுவதை நான் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன். ஏனென்றால், அந்த இடத்தில் ஒரு ஆணை வேலைக்கு வைப்பதைவிட பெண்ணை பணி அமர்த்துவதால் தான் அவருக்கு லாபம் அதிகமாக இருக்கிறது. இதனால், வேலை கொடுக்கும் நபரும் இந்த திட்டத்தில் பங்கேற்க கடமைப்பட்டிருக்கிறார்,” என்று பேசியிருந்தார்.

இன்னமுமே, பெண்களாக இருக்கும் ஒரு காரணத்திற்காக மட்டுமே ஊதியம் குறைவாக கொடுக்கப்படும் ஊர் இது. பெண்ணின் உடல் உழைப்பு குறைவானது என்று தர்க்கம் செய்யும் பிரதேசத்தில், பெண்ணின் உடல் உழைப்பு ஆணின் உடல் உழைப்பை விடவும் உனக்கு அதிக நன்மைகள் கொடுக்கிறது என்று முதலாளிகளை கேள்வி கேட்டவர் அம்பேத்கர். 

3. சட்டத்தை எரிப்பேன்! 

சமகாலத்தில், தங்களை தேசப்பற்றாளர்களாக காட்டிக் கொள்ள விரும்பும் எவரும், தேசிய கீதத்தையோ, சட்டத்தையோ ஒருவர் விமர்சித்தால், அவரை தேச விரோதி என்பது ஒரு டிரெண்டாக இருக்கிறது. சட்டமும், தேசிய கீதமும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அல்ல என்பதை உணராமல் வெறும் பக்தியோடு நாட்டை அணுகுவதன் விளைவு இது.

அரசியலமைப்பு சட்டத்தையோ, மசோதாக்களையோ எரிப்பது குற்றமாக சித்தரிக்கப்படும் இந்தியாவில், தான் பங்காக இருந்து உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தை தானே எரிப்பேன் என்று சொன்னவர் சட்டமேதை அம்பேத்கர். சட்ட சீர்திருத்தம் மட்டுமே ஒரு வலிமையான ஜனநாயகத்தை உருவாக்கும் என்பதாக இதை புரிந்து கொண்டாலும், அம்பேத்கர் சொன்ன விளக்கம், எக்காலத்திற்குமானதாக நிற்கும்.

“இந்த அரசியலமைப்புச் சட்டம் யாருக்கும் ஏற்றதாக இல்லை. ஆனால், நான் தான் அதை வடிவமைத்தேன் என்கிறார்கள். நான் அதை எரிக்கவும் தயாராக இருக்கிறேன். பெரும்பான்மை, சிறுபான்மை என இரண்டு பிரிவுகள் இருப்பதை மக்கள் மறக்கக் கூடாது, ’உனக்கு அங்கீகாரம் கொடுப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது’ என்று சிறுபான்மையினரை நிராகரிக்கக் கூடாது. சிறுபான்மயினரை நோகடிப்பதனால் தான் பெரிய அபாயம் நேரும்,”

என்று அது குறித்து சொல்லியிருந்தார். மேலும், நான்காவது சட்ட திருத்தத்தின் போது இதற்கு விளக்கம் கொடுத்த அம்பேத்கர்,

“சாமிக்கு என்று கட்டிய கோவிலில் பேய் வந்து குடியேறினால், அதை இடிப்பதை தவிர வேற வழியில்லை தானே?” என அரசியலமைப்புச் சட்டம் எப்படி பேய்களுக்கானதாக இருக்கிறது,” என்று பேசியிருந்தார்.

இப்படி,  எந்த சூழலிலுமேயே அடங்கிப் போகாத அம்பேத்கர் போலவொரு மாஸ் ஹீரோவை இனி பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. இந்த நாளிலிருந்து அம்பேத்கரை படிக்கத் தொடங்கினாலும் சரி, முன்னரே தொடங்கியிருந்து இப்போது தீவிரமாகப் படிக்கத் தொடங்கினாலும் சரி – அம்பேத்கரை படிப்போம். எதாவது ஒரு மூலையில் ஒளிந்திருக்கும் நம்முடைய துணிச்சல் கிளர்ந்து எழ, அம்பேத்கரை படிப்போம். 

(பொறுப்புத்துறப்பு: இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் கட்டுரையாளருக்கு சொந்தமானது. இதற்கு யுவர்ஸ்டோரி பொறுப்பேற்காது.) 

வெகுஜன ஊடக மாணவி; பயணங்கள், சினிமா,காதல் மீதெல்லாம் வற்றாத நம்பிக்கை கொண்ட சின்னப் பெண்.

Related Stories

Stories by Sneha