வீட்டுக் கணினியில் எத்தீரியம் மைனிங் செய்யும் சுந்தர் பிச்சையின் 11 வயது மகன்! 

காகித நோட்டுகளை விட எதீரியம், பிட்காயின் போன்ற க்ரிப்டோ கரன்சிகள் பற்றி நன்கு அறிந்துள்ளார் பிச்சையின் மகன்.

0

நியூயார்க் டைம்ஸ் டீல்புக் கருத்தரங்கில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர்பிச்சை தனது பதினோறு வயது மகன் கிரண் பிச்சை தான் வீட்டில் உருவாக்கிய கம்ப்யூட்டரில் எத்தீரியம் க்ரிப்டோ கரன்சியை மைனிங் செய்வதாக குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், 

”கடந்த வாரம் என் மகனுடன் இரவு உணவு வேளையில் பிட்காயின் குறித்து உரையாடினேன். நான் பேசுவது பிட்காயின் அல்லாத எத்தீரியம் குறித்தது என என் மகன் தெளிவுப்படுத்தினார். பதினோறு வயதான அவர் அதை மைனிங் செய்வதாகவும் தெரிவித்தார்,” என்றார்.

சுந்தர் பிச்சை தொழில்நுட்பத்திற்கு அடிமையாவது குறித்தும் குழந்தைகள் கம்ப்யூட்டர், மொபைல் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தும் நேரத்தை குறைப்பதன் அவசியம் குறித்தும் பேசியதாக பிசினஸ் இன்சைடர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சுந்தர் பிச்சை நாட்டின் பணமுறையைக் காட்டிலும் எத்தீரியம் குறித்து அதிகம் புரிந்துகொண்டுள்ள தனது மகனுக்கு பேப்பர் பணத்தின் செயல்பாடுகளை விவரித்ததாக கூறினார். 

அவர் மேலும் கூறுகையில், “என் மகனிடம் வங்கி முறை குறித்தும் அதன் முக்கியத்துவத்தையும் விளக்க வேண்டியிருந்தது. அது ஒரு சிறந்த உரையாடலாக அமைந்தது,” என்றார்.

கிரண் மட்டுமல்லாது கடந்த ஜுலை மாதம் கூகுளின் இணை நிறுவனரான செர்கி பிரின் தன்னுடைய மகனுடன் எதீரியம் மைனிங் செய்ததாக குறிப்பிட்டார் என சிசிஎன் தெரிவிக்கிறது.

அவர் கூறுகையில், “சுமார் ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என் மகன் கேமிங் பிசி வேண்டும் என்று சொன்னார். கேமிங் பிசி இருக்குமானால் நாம் க்ரிப்டோகரன்சி மைனிங் செய்யவேண்டும் என்று கூறினேன். எனவே அதில் எத்தீரியம் மைனர் அமைத்தோம். சில டாலர்களை ஈட்டவும் செய்தோம்,” என வேடிக்கையாக குறிப்பிட்டார்.

கட்டுரை : THINK CHANGE INDIA