’நானே ஃபேஸ்புக்கை துவக்கினேன், நடந்தவற்றுக்கும் நானே பொறுப்பேற்கிறேன்’- மார்க் ஜக்கர்பர்க் 

1

கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா தகவல் மீறல் பிரச்சனை காரணமாக கடந்த சில மாதங்கள் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சோதனையானதாக இருந்து வருகிறது. #டெலிட்ஃபேஸ்புக் எனும் இணைய இயக்கம் துவங்கி, வழக்குகள், விசாரணைகள் என ஃபேஸ்புக் பல முனைகளில் சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. இவற்றுக்கு எல்லாம் உலகம் ஃபேஸ்புக் கேப்டன் மார்க் ஜக்கர்பர்கிடம் இருந்து பதிலை எதிர்பார்க்கிறது.

இந்நிலையில், ஏப்ரல் 11 ம் தேதி அமெரிக்க செனெட் சபையில் எரிசக்தி மற்றும் வர்த்தக நிலைக்குழு முன் மார்க் ஜக்கர்பர்க் ஆஜரானார். அப்போது அவர் தனது வழக்கமான உடையை தவிர்த்து, கோட் சூட் அணிந்திருந்தார். 33 வயதாகும் ஜக்கர்பர்க் செனெட் சபையில் முதல் முறையாக ஆஜராகி பதில் அளித்தார். உறுப்பினர்கள் அவரிடம் கடுமையான கேள்விகளை கேட்டனர்.

முன்கூட்டியே தயாரித்து வந்திருந்த அறிமுக குறிப்பில் அவர் ஃபேஸ்புக்கில் நிகழ்ந்தவற்றுக்கு பொறுப்பேற்று மன்னிப்புக்கோரினார்.

"இது என் தவறு. இதற்காக மன்னிப்பு கேட்கிறேன்,” என்று குறிப்பிட்டுருந்த ஜக்கர்பர்க், ‘நான் ஃபேஸ்புக்கை துவக்கினேன், அதை நானே இயக்கி வருகிறேன். இங்கு நடந்தவற்றுக்கு நானே பொறுப்பு,” என்று கூறினார்.

ஃபேஸ்புக்கை நல்லெண்ண நோக்கமும், இலட்சிய நோக்கமும் கொண்ட நிறுவனம் எனக்கூறிய ஜக்கர்பர்க், நிறுவனத்தின் நோக்கம் நல்லது செய்வது மற்றும் மக்களிடையே தொடர்பு ஏற்படுத்துவது என குறிப்பிட்டு, ஹார்வி சூறாவளி மற்றும் #மிடூ இணைய இயக்கங்களில் இந்த கருவி நல்லவிதமாக பயன்படுத்தப்பட்டவிதம் பற்றி விளக்கினார். 70 மில்லியன் சிறு வணிகர்கள் தங்கள் வர்த்தகத்தை வளர்த்துக்கொள்ள ஃபேஸ்புக் உதவுவது பற்றியும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும் இவை போதாது என்று கூறியவர், நடந்தவற்றுக்கு மன்னிப்பு கோரினார்.

"இந்த கருவிகள் தீய நோக்கிலும் பயன்படுத்தப்படுவதை தவிர்க்க நாங்கள் போதுமானவற்றை செய்யவில்லை என இப்போது தெளிவாகிறது. பொய்ச்செய்திகள், தேர்தல்களில் வெளிநாடுகளின் தலையீடு, துவேஷ கருத்துக்கள் மற்றும் தகவல் மீறல் ஆகியவை இதில் அடங்கும். எங்கள் பொறுப்பு குறித்த பரந்த பார்வையை கொண்டிருக்கவில்லை. இது தவறு. இதற்காக வருந்துகிறேன்,” என்று ஜக்கர்பர்க் தெரிவித்தார்.

தனது அறிக்கையில் மட்டும் அல்லாமல், கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதும் தங்கள் பொறுப்பு குறித்த பரந்த பார்வையை கொண்டிருக்கவில்லை என ஒப்புக்கொண்டார்.

பொறுப்பேற்பு

“கருவிகளை உருவாக்குவதற்கான பொறுப்பு மட்டும் அல்ல, அவை நல்லவிதமாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யும் பொறுப்பும் அனைவருக்கும் இருக்கிறது. எல்லா மாற்றங்களையும் நிறைவேற்ற காலமாகும். ஆனால் இதை சரி செய்வதில் உறுதியாக இருக்கிறேன்,” என்றார்.

இந்த பிரச்சனை தொடர்பாக அவர் தெரிவித்த முக்கியமான கருத்துக்களில் ஒன்று, கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனம், தகவல்களை அகற்றிவிட்டதாக கூறிய போது அதை அப்படியே நம்பியது தான் தாங்கள் செய்த தவறு என அவர் குறிப்பிட்டதாகும். ஆனால் கடந்த மாதத்தில், அவ்வாறு கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் தகவல்களை அகற்றவில்லை என தெரியவந்த பிறகு ஃபேஸ்புக் நிறுவனம் கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு இத்தகைய தவறுகள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

2014 ல் மேற்கொண்ட பெரிய அளவிலான மாற்றங்கள் இத்தகைய தவறுகள் நடக்காமல் தடுக்கும் நோக்கம் கொண்டவை என்று குறிப்பிட்ட ஜக்கர்பர்க் இவை போதுமானவதாக அமையவில்லை என்று தெரிவித்தார். ஃபேஸ்புக்கை தான் இயக்கும் வரை ஆலோசகர்கள் மற்றும் டெவல்லப்பர்கள் இதை மீறி நடக்க அனுமதிக்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.

எனினும் தனது அறிக்கையின் முடிவில், தரவுகள், அவற்றின் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான சவால்கள் குறித்த முக்கிய கேள்வியை அவர் எழுப்பினார். 

“நாங்கள் செய்வதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன். இந்த சவால்களை எதிர்கொள்ளும் போது, மக்கள் தொடர்பு கொள்ள உதவுவது மற்றும் உலகில் நல்லவிதமான குரல் கொடுப்பதற்கான வாய்ப்பாக அமைவதை பின்னோக்கி பார்ப்போம். இன்று நாம் விவாதிக்கும் விஷயங்கள் நமது சமூகத்தில் ஃபேஸ்புக் தொடர்பானவை மட்டும் அல்ல, அவை அனைத்து அமெரிக்கர்களுக்கான பிரச்சனைகள் மற்றும் சவால்கள்,” என்றும் அவர் தெரிவித்தார்.

ஆங்கிலத்தில்: தன்வி துபே |தமிழில்: சைபர்சிம்மன்