'இனி ஒரு விதி செய்வோம்' என்று சமூக களத்தில் இறங்கிய திருப்பூர் கவிதா!

2

பாரதி கண்ட புதுமைப் பெண் இவளே... பாரதி கண்ட புதுமைப் பெண்ணின் குணநலன்களான நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள், திமிர்ந்த ஞானச் செருக்கு! என அனைத்தும் கொண்டவராக இருப்பவர் கவிதா ஜெனார்தனன். அது மட்டுமின்றி, ஆதரவற்ற மக்களுக்கு உதவுவது என்று பல நற்குணங்களுடன் சேவைகள் பல புரிந்து திருப்பூரில் வலம் வருகிறார் கவிதா. 

“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி.”

”நான் எழுந்தேன், நான் சாப்பிட்டேன், நான் வேலைக்கு போனேன், நான் வீடு திரும்பினேன், நான் உறங்கினேன் என்று வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்த சமூகம், பிறருக்காக ஒரு நொடி கூட வாழவோ, அவர்களை நினைக்கவோ தவறுகிறது, நான் என்று இந்த சமூகத்தில் வாழ்வதை விட, நாம் என்று அனைவரிடத்திலும் அன்புகாட்டி வாழ்வதே சிறந்த வாழ்க்கை முறை என்று நான் கருதுக்கிறேன்,” என்று தொடங்கினார் கவிதா.

யார் இந்த கவிதா??

கோயம்புத்தூரில் பிறந்து, பள்ளி மற்றும் பொருளாதார பட்டப்படிப்பை முடித்து, ஃபேஷன் டிசைனராக பணிபுரிந்து வந்தார். பிறருக்கு உதவி செய்து வாழ வேண்டும் என்ற தனது தந்தையின் அறிவுரைபடி, ஆதரவற்ற மக்களுக்கு சேவை செய்யத் தொடங்கினார். திருமணம் முடித்து திருப்பூருக்கு குடிபெயர்ந்த இவர் அங்கும் தன் சேவையை தொடர்ந்தார்.

ஐ.ஏ.எஸ் அதிகாரியாக மக்களுக்கு சேவை செய்வது தான் இவரின் ஆசை, ஆனால் சில கால மாற்றங்களால் அந்தத் துறையை தேர்ந்தெடுக்க இயலவில்லை. தன்னிச்சையாக பிறருக்கு உதவ முடியும் என்று முடிவு எடுத்தார். அதன்படி இன்றளவும் காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் ஆதரவற்று சாலை ஓரங்களில் தங்கி இருக்கும் மக்களுக்கு உணவளித்து உதவி வருகிறார் கவிதா.

மேலும் பேசுகையில்-

”உணவு மட்டுமின்றி உடுத்த உடை, காலணிகள், என என்னால் முடிந்த உதவியை செய்து வருகிறேன். என்னுடைய சேவை மனப்பான்மையை புரிந்து, திருமணத்திற்கு பிறகும் என்னுடன் இணைந்து ஆதரவற்ற மக்களுக்கு உதவி செய்தும், எனக்கு தோள் கொடுத்து பக்கபலமாக இருக்கிறார் எனது கணவர் ஜனார்த்தனன்,” என்கிறார்.

திருமணத்திற்கு முன்பு வரை சிறியளவில் தான் மக்களுக்கு உதவி செய்து வந்தேன். எனக்கு ஊக்கம் கொடுத்து, கிட்டத்தட்ட திருப்பூர் முற்றிலும் வாழும் ஆதரவற்ற மக்களுக்கு உதவி செய்ய வழிவகுத்தார் என தன் கணவரின் உந்துதல் பற்றி கூறினார்.

கவிதா ’இனி ஒரு விதி செய்வோம்’ என்ற இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த சேவைப் பணியை அதன் மூலம் கவனித்து வருகிறார். 

”நான் இப்படி உதவி செய்வதால் எனக்கு என்ன பயன் உண்டாகிறது ?? என்று என்னிடம் பலர் கேட்டதுண்டு. பயன்களை எதிர்ப்பார்த்து சேவை செய்வது எந்த விதத்தில் சேவயாகும் என்று எனக்கு தெரியவில்லை,” என்கிறார்.

நான் வாழும் இந்த சமூகத்தில் என்னோடு இணைந்து வாழும் ஆதரவற்ற சகோதரர், சகோதரிகளுக்கும், ஆதரவற்று வாழும் முதியோர்களுக்கும் என்னால் முடிந்த உதவியை செய்து வருகிறேன். இது போன்ற உதவி செய்ய மனிதநேயமும், அனைவரையும் சக மனிதனாக ஏற்கும் மனப்பக்குவமும் இருத்தலே போதும் என்று நான் கருதுகிறேன்.

மேலும் நம்மை இந்த உலகில் பெற்று எடுத்து, வளர்த்து ஒரு நிலைக்கு ஆளாக்கிய தாய், தந்தைக்கு நாம் என்ன செய்தோம்?? என்ற கேள்வியை தனக்கு தானே கேட்டு கொண்டால் போதும். நாடோடியாக ஆதரவற்றவர்களாக இந்த சமூகத்தில் யாரும் இருக்கமாட்டர்கள், என்று நினைக்கிறேன்.

இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயான கவிதா, அவர்களிடம் பிறருக்கு உதவி செய்து வாழ வேண்டும், பெண்களை மதித்து சம உரிமை கொடுத்து வாழ வேண்டும் என்ற கருத்தை கூறி வளர்க்கிறார்.

ஃபுட் பேன்க் திட்டம்

திருப்பூர் சுற்றி மூன்று இடங்களில் ஃபுட் பேன்க் (food bank) எனும் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தினார். ஃபுட் பேன்க் (food bank) என்பது குளிர்சாதன பெட்டி, அந்த பெட்டியில் யார் வேண்டுமானாலும் பிறருக்கு உதவ எண்ணினால், அதில் உணவுப் பொருட்களை வைக்கலாம். அந்த உணவு பொருட்கள் ஆதரவற்ற மக்களுக்கு போய் சேரும். 

மேலும் திருப்பூர் சுற்றி உள்ள பல இடங்களில் இந்த ஃபுட் பேன்க் திட்டத்தை இனி ஒரு வீதி செய்வோம் இயக்கம் அமல்படுத்தப் போகிறது.

திருப்பூர் மருத்துவமனைகளில் மருத்துவம் பார்க்க வரும் நோயாளிகளுக்கு பழங்கள், ரொட்டிகள், என உடலுக்கு வலிமை தரும் உணவுப் பொருட்களை வாங்கித் தருகிறோம். மேலும் நோயாளிகளை பார்க்க வருவோர்களுக்கு மாஸ்க்(mask), க்ளவுஸ் (gloves) போன்ற பாதுகாப்பு பொருட்களையும் அளித்து வருகிறோம். 

குழந்தையை பெற்று எடுக்க வரும் கர்ப்பிணி பெண்களுக்கும், உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கும் முதியோர்களுக்கும் சாப்பிட ஆரோக்கியமான உணவு அளித்து வருகின்றனர். கோயம்புத்தூரில் உள்ள கேன்சர் மருத்துவமளையில் உள்ள குழந்தைகளுக்கு வரைப்படம் வரைய புத்தகம், பொம்மை புத்தகம் வாங்கி கொடுத்து வருகிறார்கள்.

பொருளாதார காரணங்களால் பள்ளிப் படிப்பை தொடர முடியாத குழந்தைகளை கண்டு அறிந்து, அவர்கள் படிப்பை தொடர உதவி வருகிறோம். தான் சம்பாதிக்கும் அனைத்து பணத்தையும், இந்த சேவைக்காகவே செலவு செய்து வருகிறார் கவிதா.

என்னை பொறுத்தவரை இந்த உலகில் கடைசி மனிதன் வாழும் வரை மனிதநேயமும் உடன் இருக்கும். இது போன்ற சேவைகளை நிறைய பேர் செய்ய முன்வர வேண்டும் என்பதே எனது விருப்பம்.

இவர் திருப்பூர் அருகே உள்ள சிறு கிராமத்தை தத்தெடுக்க உள்ளார். முதற்கட்டமாக அங்கு வாழும் மக்களுக்கு மருத்துவ முகாம் நடத்தி உள்ளனர். அங்கு வாழும் மக்களுக்கு தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் சாலை சீரமைத்து, குப்பை தொட்டிகள் அமைத்து வருவது போன்ற உதவிகள் செய்ய உள்ளார்கள். மேலும் அங்கு வாழும் குழந்தைகளுக்கு தற்காப்பு கலைப் பயிற்சி தர உள்ளார்கள்.

இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்தும், பிறருக்காக பயந்து நம் ஆசைகளை துறந்து வாழாமல், நமக்காகவும் நம் ஆசைகளுக்காகவும் வாழ வேண்டும். போன்ற கருத்துக்களை அந்த குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க உள்ளோம்.

கவிதாவிற்கு சிறந்த சமூக ஆர்வலர் போன்ற பல விருதுகள் பல தொண்டு நிறுவனங்களில் இருந்தும், கல்வி அமைப்புகளிலிருந்தும் வழங்கப் பட்டுள்ளது. இவர் தற்போது முழுநேரமாக இந்த சேவையில் இறங்கி உள்ளார். அண்மையில் குமாரபாளயத்தில் ‘அன்புச்சுவர்’ ஒன்றை எழுப்பியுள்ளார். இதில் அவரவர்களுக்குத் தேவையில்லாத பொருட்களை வைத்துவிட்டால், இல்லாதோர் அதை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இது தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள இரண்டாவது அன்புச்சுவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வாழ்த்துக்கள் பாரதி கண்ட புதுமை பெண்ணே, உன் பணி தொடரட்டும்!