கிராமங்களுக்கு தொலை மருத்துவத்தை கொண்டு செல்லும் முன்னோடி டாக்டர். இந்து சிங்

0

பனாரஸ் அருகே உள்ள காசிபூர் கிராமத்தைச்சேர்ந்த மீனா சர்மா நிறைமாத கர்பிணியாக இருந்த போது உயிருக்கே ஆபத்தாக முடியக்கூடிய உடல் நலக்கோளாறை எதிர்கொண்டார். நல்ல வேளை தொலைமருத்துவத்தின் உதவியால் மருத்துவ பரிசோதனைகள் உடனடியாக நடத்தப்படு அவருக்கான சிகிச்சை தீர்மானிக்கப்பட்டது. அடுத்த 2 மணி நேரத்தில் பனாரசில் இருந்து மருத்துவர்கள் விரைந்து வந்து சிகிச்சை அளித்து தாய் மற்றும் சேயை காப்பாற்றினர்.

மருத்துவ பாலம்

இந்த தொலை மருத்துவ வசதியை ஜி.வி.மெடிடெக் (G.V.Meditech) வழங்கி வருகிறது. காசிபூரைச்சேர்ந்த மகப்பேறு வல்லுனரான டாக்டர்.இந்து சிங் பனாரஸ் பகுதி மக்களுக்கு மருத்து வசதியை அளிப்பதற்காக 1992 ல் சிறிய அளவில் மகப்பேறு மற்றும் குழந்தை நல மையமான ஜி.வி.மெடிடெக்கை துவக்கினார்.” நானும் என கணவரும் இப்பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் காசிபூர் மற்றும் மிர்சாபூர் மக்கள் மீது நேசம் கொண்டிருந்தோம். இங்குள்ள மக்கள் தேவையில்லாமல் பயணம் செய்வதை தவிர்ப்பதற்காக இரண்டு செயற்கைகோள் மையங்களை துவக்கினோம். கிராமங்களில் பெண்கள்,குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் தனித்து விடப்படுவது பிரச்சனையாக இருந்தது. அவர்களை பனாரசுக்கு சிகிச்சைக்கு அழைத்து வர யாரும் இல்லை” என்கிறார் ஜி.வி.மெடிடெக் நிறுவனரான டாக்டர். இந்து சிங்.

நகரமயமாக்கல் காரணமாக பனாரஸ் போன்ற சிறுநகரங்களில் அருகே உள்ள கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் வேலை தேடி நகரங்களுக்கு வருவதால் கிராமங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தனித்து விடப்படுகின்றனர். சிகிச்சை தேவைப்படும் நேரங்களில் அவர்களை அழைத்து வர முடியாத நிலை இருக்கிறது.

தொலை மருத்துவ வசதி

இதற்கு தொலை மருத்துவம் மூலம் தீர்வு வழங்கி வரும் ஜி.வி.மெடிடெக் எல்லா விவரங்களையும் கம்ப்யூட்டர்மயமாக்கி இருப்பதுடன் இணையம் மற்றும் தகவல் நுட்பத்தை பின்பலமாக கொண்டுள்ளது. தொலை மருத்துவத்திற்கான பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கருவிகள், காசிபூரில் உள்ள நோயாளிகளுடன் இணைக்கப்பட்டவுடன் பனாரசில் உள்ள டாக்டர்கள் இ.சி.ஜி , இரத்த அழுத்தம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்கின்றனர். மருத்துவ சிக்கல் இருந்தால் நோயாளிகள் செல்போன் மூலம் டாக்டர்களிடம் இருந்து தொலை மருத்துவ ஆலோசனையை பெறலாம்.

செயற்கைகோள் மையங்களை தவிர ஜி.வி.மெடிடெக் கடந்த 10 ஆண்டுகளில் 150 மருத்துவ முகாம்களை நடத்தியிருக்கிறது. மருத்துவ முகாம்களில் நோயாளிகளை நேரடியாக பார்ப்பது, பின்னர் சிகிச்சை அளிக்கும் போது அது பெரிதும் உதவுகிறது” என்கிறார் இந்து.

இந்த முகாம்களை நடத்த கிராம மக்களே அழைப்பு விடுத்து டாக்டர்களுக்கு சமையல் செய்தும் கொடுக்கின்றனர். அருகே உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் முகாம் நடத்த உதவுகின்றனர். ஒவ்வொரு முகாமிலும் 3,000-4,000 பேரை கவனித்து இலவச மருந்துகள் அளிக்கப்படுகிறது.

ஜி.வி.மெடிடெக், லைஃப்லைன் எக்ஸ்பிரஸ்/ரேகா எக்ஸ்பிரஸ் நடமாடும் மருத்துவமனை ரெயிலை பனாரசுக்கு 3 நாட்களும், காசிபூருக்கு 3 வாரமும் கொண்டு வந்தது. இதில் 28,000 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சவால்கள்

சோகம் என்ன என்றால் மருத்துவ உதவி தேவைப்படும் பலருக்கு அறுவை சிகிச்சைகளுக்கான நிதி உதவி கிடைப்பது சிக்கலாக இருப்பது தான். " டாக்டர்களுக்கு ஊக்கம் அளிப்பது மற்றும் நிதி பெரிய சவாலாக இருக்கிறது. நுண்கடனுக்கு பலர் உதவ தயராக இருந்தாலும் மருத்துவ வசதிக்கு போதிய ஆதரவில்லை. இந்த துறையில் பலன் கிடைக்க 3 ஆண்டுகள் ஆகும் என்பதால் பொறுமை உள்ள முதலீட்டாளர்கள் அவசியம்” என்கிறார் அவர்.

ஜி.வி.மெடிடெக் 65 டாக்டர்கள் மூலம் பனாரசை சுற்றியுள்ள 15 மாவட்டங்களில் சேவை அளித்து வருகிறது. குறிப்பாக உத்தர பிரதேசத்தின் கிழக்கு பகுதி மற்றும் மேற்கு பிகார் , ஜார்கண்ட் ஆகிய பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளாக மருத்துவ வசதி அளித்து வருகிறது. பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். 25,552 குழந்தைகள் பிறக்க உதவியுள்ளனர், 32,452 அறுவை சிக்கிசைகள் செய்துள்ளனர்.

”காசிபூரை சுற்றியுள்ள மக்களுக்கு உதவும் வகையில் மேலும் 4 மையங்களை துவக்க உள்ளேன். இவை மைக்ரோ கிளினிக்காக இருக்கும். ஒரு மருத்துவ ஊழியர் பரிசோதனைகளை மேற்கொண்டு ஆலோசனை அளிப்பார். மருத்துவ சிகிச்சை வசதி இல்லாமல் அல்லது மருத்துவ விழிப்புணர்வு இல்லாமல் யாரும் இறக்க கூடாது என்பதே எங்கள் குறிக்கோள்” என்கிறார் டாக்டர்.இந்து சிங். இந்த மையங்களை நடத்த விரும்புகிறவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

ஜி.வி.மெடிடெக் முயற்சியில் உதவ: http://www.gvmeditech.com/