கைகள் இல்லாமல் ட்ரைவிங் லைசன்ஸ் பெற்ற முதல் இந்தியர் விக்ரம்!

0

இண்டோரைச் சேர்ந்த விக்ரம் அக்னிஹோத்ரி ஒரு மின்சார ஷாக் விபத்தில் தன் இரு கைகளையும் ஏழு வயதாக இருந்த போது இழந்தார். அப்போதில் இருந்து தன் கால்களை பயன்படுத்தி வேலைகளை செய்ய பழகினார். கைகள் கொண்டு செய்யும் அனைத்தையும் தன் கால்களால் செய்தார் விக்ரம். அதனால் மற்றவர்கள் செய்வதில் தன்னால் முடியாதது ஏதும் இல்லை என்ற அளவில் வாழ்ந்தார். நல்ல பள்ளியில் படித்து, முதுகலை பட்டத்தை பெற்றார். இப்போது ஒரு கேஸ் ஏஜென்சி நடத்துகிறார். அதைத்தவிர ஊக்கம் தரும் பேச்சாளாராகவும் இருக்கிறார். 

விக்ரம் தன்னால் முடியாதது எதுவும் இல்லை என்ற தன்னம்பிக்கை கொண்டவர். மூன்று ஆண்டுகளுக்கு முன்புவரை தன்னால் எல்லாம் சாத்தியம் என்று நினைத்தபோது, வண்டியில் செல்ல பிறரை நாடவேண்டி இருந்ததை அவர் விரும்பவில்லை. தானே காரை ஓட்டிச்செல்ல வேண்டும் என்றும் முடிவெடுத்து வண்டியை கால்களில் ஓட்ட கற்றுக்கொண்டார். இது பற்றி டைம்ஸ் ஆப் இந்தியா பேட்டியில் பேசிய அவர்,

“நான் முன்பு ஒரு முழுநேர ட்ரைவரை வைத்திருந்தேன். ஆனால் அத்தியாவசிய தேவைகளுக்கு எப்போதும் ஒருவரை நம்பி இருப்பதை நான் விரும்பவில்லை,” என்றார்.

விக்ரம் ஒரு ஆட்டோமேடிக் கியர் உள்ள கார் வாங்கினார். தானே அந்த காரை ஓட்ட கற்றுக்கொண்டார். கால் இல்லாத அவருக்கு ட்ரைவிங் கற்று தர எந்த ஒரு பயிற்சி மையமும் தயாராக இல்லை. ஆனால் அதனால் துவண்டுவிடாமல், வீடியோக்களின் உதவியோடு கார் ஓட்ட கற்றுக்கொண்டார் விக்ரம்.

கார் ஓட்ட கற்றுக்கொண்டாலும், சட்டப்படி ஆர்டிஓ-வால் அவருக்கு ட்ரைவிங் லைசன்ஸ் வழங்க அனுமதி இல்லை. ஆனால் இதை அப்படியே விட விக்ரம் விரும்பவில்லை. சட்டம் தன்னைப் போன்றவருக்கு உதவும் வரை ஓயாமல் போராடினார். கோர்ட் வரை இதை எடுத்துச் சென்று வாதாடினார் விக்ரம். முயற்சிக்கு பலனாக லைசன்ஸ் கிடைத்தது. அப்போதில் இருந்து 22 ஆயிரம் கிமி தூரம் தன் காரில் பயணித்து விரைவில் லிம்கா புக் ஆப் ரெகார்டில் இடம் பெறவுள்ளார்.

விக்ரம் வைடல் ஸ்பார்க் நல அமைப்பில் தலைவராக இருக்கிறார். இதன் மூலம் ஊக்கம் தரும் பயிற்சி, பயிற்சி பட்டறைகள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்துகிறார். பள்ளிக் குழந்தைகள் முதல் கார்பரேடில் பணிபுரிபவர்கள் வரை எல்லாருக்கும் பயிற்சி அளிக்கின்றனர். 

விக்ரம் நீச்சல் மற்றும் கால்பந்து விளையாடவும் செய்வார். இவை எல்லாம் அவரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரின் ஆதரவோடு சாத்தியமாகியுள்ளது. டெய்லி மெயில் பேட்டியில் பேசிய விக்ரம்,

“எப்போதும் ஊக்கம் தந்து, ஆதரவுக்கரம் நீட்டும் மனிதர்கள் என்னைச் சுற்றி உள்ளது என் அதிர்ஷ்டம். எனக்கு கைகள் இல்லை என்று நான் எப்போதுமே வருத்தப்பட்டதில்லை. என்னை யாரும் கிண்டல், கேலி செய்ததில்லை, எப்போதும் ஊக்கப்படுத்தியுள்ளனர்.” 

கட்டுரை: Think Change India