ஐஐஎம் பட்டதாரி கரிமா, பிஹாரில் பின் தங்கிய கிராமக் குழந்தைகளுக்காக தொடங்கிய பள்ளிக்கூடம்!

0

நம் நாட்டில் தற்போது பின்பற்றப்படும் கல்வி முறையிலிருந்து மாறுபட்ட முறையில் நலிந்த குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியளிக்கும் பயணத்தை மேற்கொண்டுள்ளார் 28 வயதான கரிமா விஷால். ’தேஜாவூ ஸ்கூல் ஆஃப் இன்னோவேஷன்’ பிஹாரின் முசாபார்பூரில் 2014-ம் ஆண்டு நிறுவப்பட்டது. மூன்று தூண்களைக் கொண்ட கல்வி முறையை இது பின்பற்றுகிறது.

எப்படித் துவங்கியது?

கரிமா பிஹாரின் செல்ரா நகரத்தைச் சேர்ந்தவர். பொறியியல் படிப்பை மனிப்பால் தொழில்நுட்ப கல்வி நிலையத்திலும் ஐஐஎம் லக்னோவில் எம்பிஏ வும் முடித்தார். 

”இன்றைய சமூகத்தில் கல்வியின் முக்கியத்தும் குறித்து நன்கறிந்ததால் என்னுடைய தந்தை என்னையும் என் உடன்பிறந்தவர்களையும் மேல் படிப்பு படிக்க ஊக்குவித்தார். என்னுடைய நகரத்தில் பட்டபடிப்பு முடித்த முதல் பெண் நான்தான். இதனால் குழந்தைகளின் கல்விக்கு உதவுவதை நானும் என்னுடைய பெற்றோரும் தார்மீக கடமையாகவே கருதினோம்.”

2011-ல் கரிமா புவனேஸ்வரிலுள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது அவரது வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தை உணர்ந்தார். பள்ளிக்கு செல்லாத சில குழந்தைகளை அருகாமையில் கண்டார். இந்தக் குழந்தைகள் சென்று படிக்க அருகில் எந்த பள்ளியுமில்லாததால் கல்விக்கான வாய்ப்பே இல்லாமல் இருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தார். மேலும் இந்தக் குழந்தைகள் குஜராத் மாநில சமூகத்தினர் என்பதால் ஒரியா வழி கல்வியளிக்கும் அரசு பள்ளியில் சேர்ந்துகொள்ள முடியவில்லை.

இந்த குழந்தைகளுக்கு உதவும் வகையில் கணிதம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய பாடங்களை மாலை நேரத்தில் கிட்டத்தட்ட முப்பது மாணவர்களுக்கு வகுப்பெடுத்தார். பெற்றோர்களில் ஒருவர் அவரது வீட்டின் ஒரு அறையை வகுப்பிற்காக ஒதுக்கிக்கொடுத்தார். குழந்தைகளுடனான அனுபவம் குறித்து கரிமா பேசுகையில்,

“இந்தக் குழந்தைகளுக்கு நான் உதவ நினைத்தேன். பெற்றோருக்கு மொழி ஒரு தடையாக இருந்ததால் உதவ முடியாத நிலையில் இருந்தனர். ஆனால் குழந்தைகள் நன்றாக ஹிந்தி பேசினார்கள். பெற்றோர் தங்களது குழந்தைகள் படிப்பதைக் காட்டிலும் வேலைக்குச் செல்வதையே விரும்பியதால் முதலில் வகுப்புகளுக்கு அனுப்பவே தயங்கினர். இறுதியில் அவர்கள் உற்சாகமாக எங்களுக்கு ஆதரவளித்தனர்.”

புவனேஸ்வரிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றலாகி செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டபோது அவரது வகுப்புகள் முடிவிற்கு வரப்போவதை உணர்ந்தார். தனது முயற்சிகள் பலனற்று போகக்கூடாது என்கிற எண்ணத்தில் கரிமா குறைந்த கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளில் பெரும்பாலான குழந்தைகளை சேர்த்தார்.

தேஜாவூ ஸ்கூல் ஆஃப் இன்னோவேஷன்

புவனேஷ்வரிலிருந்த குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தபின் தன்னுடைய முயற்சியை தொடர நினைத்தார். தற்போது வசித்து வரும் பீஹாரின் முசாபார்பூருக்கு இடம் பெயர்ந்தார். கல்வித் துறையில் தொடரும் ஆசையுடன் கரிமா அந்நகரத்தில் ஒரு பள்ளியை திறக்க முடிவெடுத்தார். நகரத்திலும் மாநிலத்திலுமுள்ள பல பள்ளிகளை கவனித்தலில் பள்ளியின் புத்தகப் படிப்பிற்கு முக்கியத்துவமளிக்கிறார்கள். குழந்தைகளின் ஆளுமை மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மிகக் குறைந்த முக்கியத்துவமே அளிக்கப்படுவதால் ஒரு புதிய அணுகுமுறையை உருவாக்க முடிவெடுத்தார்.

அப்போது உருவானதுதான் Dejawoo School of InnovationDéjà vu மற்றும் woo ஆகிய வார்த்தைகளின் கலவைதான் தேஜாவூ (Dejawoo). இதில் Déjà vu என்றால் தற்போதைய சூழலை ஏற்கெனவே அனுபவித்த ஒரு உணர்வை தருவது என்று பொருள்படும் (பள்ளியின் சூழலும் குழந்தைகளின் வீட்டைப் போன்ற உணர்வைத் தருவதால் ஏற்கெனவே இந்த இடத்திற்கு வந்த ஒரு உணர்வை குழந்தைகளுக்கு அளிக்கும்). Woo என்றால் மகிழ்சியான உணர்வு என்று பொருள்படும். கரிமா பள்ளி குறித்து பேசுகையில், 

“கல்வியை மட்டும் அளிப்பது இந்த பள்ளியின் நோக்கமல்ல. ஆளுமை, புதுமையான கலாச்சாரம் மற்றும் கருத்து சுதந்திரம் போன்றவற்றை அளிப்பதுதான் எங்கள் நோக்கம். எங்கள் பள்ளி பலரது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு தூணுக்கும் பல புதுமையான உத்திகளை செயல்படுத்துகிறேன். மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள் அடங்கிய எங்களது குழு பள்ளியின் நோக்கத்தை அடைய உதவுகின்றனர்.”

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆகியோர் இவர்களது கல்வி முறையின் மூன்று தூண்கள் என்கிறார் கரிமா. குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மூன்று தூண்களிலிருந்தும் சமமான பங்கு அளிக்கபடுவதுதான் இவர்களின் கல்வி முறையாகும். திருமணத்திற்குப் பின் பணிக்குச் செல்லாத உயர்கல்வி படித்த பெண்களை இவர்களது பள்ளியில் பணியிலமர்த்துகிறார்கள். இது போன்ற ஆசிரியர்களுக்கு வகுப்புகள் முடிந்த பின் தினமும் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் வரை பயிற்சியளிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ப்ரொஃபஷனல் ஆசிரியர்களும் உள்ளனர். இந்த முயற்சியினால் சமூகத்தில் பயன்படுத்தாமல் புறக்கணிக்கப்பட்ட திறமைகள் முறையாக பயன்படுத்தப்படும். இதனால் தனிநபர்கள் மட்டுமல்லாமல் சமூகமும் பலனடையும்.

இரண்டாவது தூண் குறித்து பேசும்போது, “பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகும் உலகெங்கும் உள்ள பாடங்களை ஆய்வு செய்த பிறகும்தான் மாணவர்களுக்கான பாடதிட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வகுப்புகளுக்கும் செயல்பாடு சார்ந்து கற்கும் முறையே ஊக்குவிக்கப்படுகிறது. ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மையுடையவர்கள் என்பதால் ஒவ்வொரு குழந்தையிடமும் தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. லண்டனின் பால் எச் ப்ரூக்ஸ் பப்ளிஷிங் கம்பெனி வடிவமைத்த ASQ (Age Stage Questionnaire) பயன்படுத்தி குழந்தையின் மனம், உடல் மற்றும் உளவியல் சார்ந்த வளர்ச்சியை கண்காணிக்கிறோம். குறிப்பிட்ட பலவீனத்தை கண்டறிந்து அதில் கவனம் செலுத்துகிறோம்.” 

”மொத்தத்தில் குழந்தையின் உடல் மற்றும் மூளையின் சாப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர் பகுதிகளை கவனித்துவருகிறோம்” 

குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கும்போது ஒரு அடிப்படை உண்மையை உணரமுடிந்தது. குழந்தைகள் பள்ளியில் நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரைதான் செலவிடுகிறார்கள். அதிக நேரம் செலவிடுவது வீட்டில் என்பதால் அவர்களது மனப்போக்கும் கற்றலில் வளர்ச்சியின் விகிதமும் அங்குதான் அதிகம் உறுதிப்படுத்தப்படுகிறது என்பதை உணர்ந்தார் கரிமா. பெற்றோர்களுக்கு அவ்வப்போது பள்ளியிலிருந்து பயிற்சியளிக்கப்படும். குழந்தை நல மருத்துவர்கள், பிசியோதெரபிஸ்ட் மற்றும் பல்வேறு நிபுணர்களின் கெஸ்ட் லெக்சர்களை குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பள்ளி ஏற்பாடு செய்கிறது.

இணையதளம், இமெயில், மொபைல் போன்றவற்றை பயன்படுத்தும் திறனை பெற்றோர்கள் பெற்றிருக்கின்றனர். தரமான கல்வி கிடைக்கப்படாத பெற்றோர்களும் கல்வி அறிவே இல்லாத பெற்றோர்களும் நிறைந்த சமூகத்தில் ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்த இந்தப் பள்ளி விரும்புகிறது. இந்தப் பள்ளி ஆரம்ப நிலை மாணவர்களுக்கே தற்போது கற்றுக்கொடுக்கிறது. இதில் அனைத்து வகையான பின்னணியிலிருந்தும் வரும் 100 மாணவர்கள் உள்ளனர். பள்ளிக்கான இடத்தையும் உள்கட்டமைப்புச் செலவுகளையும் கரிமாவும் அவருக்கு மிகவும் ஆதரவாக உள்ள அவரது புகுந்த வீட்டினரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். மிகக் குறைந்த கட்டணமாக 800 ரூபாயை பள்ளி வசூலிக்கிறது. இதுவும் பெற்றோரின் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு குறைக்கப்பட்டுள்ளது.

எதிர்கால திட்டம்

”இதே மாதிரியை பிஹாரின் மற்ற உட்புற பகுதிகளிலும் செயல்படுத்தி என்னால் இயன்றவரை கல்வி தரத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளேன்” என்கிறார் கரிமா.

மேலும், ”இந்த முயற்சி குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கும் உந்துதல் அளிக்க விரும்புகிறேன். சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புபவர்கள் விரைவாக தங்களது கனவை நோக்கி செயல்பட வேண்டும்.”

ஆங்கில கட்டுரையாளர்: ஹேமா வைஷ்ணவி