'ஒய் திஸ் கொலைவெறி' பாடலை போல டிஜிட்டல் உலகில் ப்ராண்டை பரவலாக்கும் முன்னோடி நிறுவனம்!

0

ஒரு நள்ளிரவு தொலைப்பேசி அழைப்பில்தான் எல்லாம் தொடங்கியது. திரைப்பட பாடல் ஒன்று கசியவிடப்பட்டத் தகவல், சோனி மியூசிக் தெற்குப் பிரிவிற்கு வந்தது. அந்தக் குறிப்பிட்ட பாடலை கசியவிடப்பட்டத்தைத் தடுப்பது சாத்தியமில்லை என்பது தெளிவானது. அந்தச் சூழ்நிலையை சமாளிக்க புதிய வைரல் வியூகம் தேவைப்பட்டது. அந்தப் புதிய யுக்தியை உருவாக்க வேண்டிய பொறுப்பில் இருந்த 'ஜேக் இன் தி பாக்ஸ் வேர்ல்டுவைடு' (Jack in the Box Worldwide) ஏஜென்சி நிறுவனம், அந்தப் பாடலின் அதிகாரப்பூர்வ பதிவு ஒன்றை உருவாக்கி இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் வெளியிட தீர்மானித்தது.

அந்நிறுவனத்தின் டிஜிட்டல் குழுவின் ஒட்டுமொத்த வலிமையையும், படக்குழுவின் உழைப்போடும் சேர்ந்து வெளியிடப்பட்ட அந்தப் பாடல், ஒரே இரவில் அதிரடி வெற்றி பெற்றது. 45 நாட்களிலே அப்பாடல் 2011-ல் உலகில் அதிகளவில் பார்க்கப்பட்ட, பதிவிறக்கம் செய்யப்பட்டப் பாடல் பட்டியலில் முதன்மை இடத்தைப் பிடித்தது.

அந்தப் பாடலைப் பிரபலப்படுத்த நியமிக்கப்பட்ட 'ஜேக் இன் தி பாக்ஸ்' என்ற சமூக ஊடகப் பிரிவை உள்ளடக்கிய 'தி 120 மீடியா கலெக்டிவ்' நிறுவனம் ஒட்டுமொத்தமாக 3 மாத அனுபவமே கொண்டது. "ஒரு கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்வரை சாமர்த்தியமாக செயல்பட்டோம். அதன் பிறகு நடந்தது எதுவும் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. நாங்கள் ஒரு ரூபாய்க் கூட செலவழிக்கவில்லை, ஆனால், ஃபேஸ்புக்கில் 20 சதவீதம் மக்களை அந்தப் பாடல் சென்றடைந்தது" என்கிறார் அதன் நிறுவனரும், சி.இ.ஓ.வுமான, 40 வயது ரூபக் சலுஜா.

களம் இறங்கிய தருணம்

இந்தியாவில் டிஜிட்டல் ஹவுஸ் துறையில் ஆரம்ப கட்டத்தில் இறங்கிய முன்னோடி நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழ்ந்து, இன்று ஒரு முழு நேர ஒருங்கிணைந்த சந்தைப்படுத்தும் நிறுவனமாக செயல்படும் 'தி 120 மீட்யா கலெக்டிவ்' (The 120 Media Collective) தன் பயணத்தில் பல ஏற்றத் தாழ்வுகளை கண்டிருக்கிறது. தூதரக அதிகாரியின் மகனாக வளர்ந்து, சந்தைப்படுத்தும் துறையில் அதிகளவு அனுபவம் இல்லாதபோது, ஒரு சந்தைப்படுத்தும் நிறுவனத்தை கட்டமைத்து உருவாக்குவது என்பது, ரூபக்கிற்கு வழக்கத்திற்கு மாறான பாதைத் தேர்வுதான்.

சர்வதேச குடியுரிமை பெற்றவரான ரூபக் ஒரு டீஜேவும் கூட. யங் & ரூபிகம், புடாபெஸ்ட், ஒகில்வி & மாதெர் ஆகிய சந்தைப்படுத்தும் நிறுவனங்களில் சில காலம் வேலை செய்த பிறகு எம்.பி.ஏ. படித்த ரூபக், சுயமாக ஏதேனும் செய்யத் தொடங்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்திருக்கிறார்.

"2004 மிகச் சிறப்பான வருடம். சர்வதேச அளவில் இந்தியா கவனிக்கப்பட்டது. வாழ்க்கையின் பெரும்பான்மையையும் வெளிநாடுகளிலேயே கழித்த இந்தியனாக, சீனாவைப் போலவே இந்தியா பார்க்கப்படுவதை கவனித்தேன்" என்கிறார் ரூபக்.

இந்தியாவின் நகரங்களைப் பற்றி, ரூபக் புரிந்துக்கொள்ள உதவியது மும்பையாகத் தான் இருந்திருக்கிறது. அந்நகரின் ஆற்றலில் இருக்கும் துறுதுறுப்பும், கலகங்களில் கூட மிளிரும் அழகும் அவரை ஈர்த்தது. அதனால், அவர் தன் தொழில்முனைவைத் தொடங்க மிகச் சரியான இடமாக மும்பை இருக்கும் எனத் தீர்மானித்தார். அதன் விளைவாக, 2006 ஆம் ஆண்டு வேறு மூன்று துணை நிறுவனர்களுடன், வணிக தயாரிப்பு நிறுவனமாக 'பேங் பேங் ஃபிலிம்ஸ்' தொடங்கப்பட்டது. அவருடைய துணை நிறுவனர்கள் தற்போது வேறு தொழில்முனைவுகளில் இயங்குகின்றனர்.

தகர்த்தெறிந்த தடைகள்

விளம்பரப்படுத்துதல் துறையும், தயாரிப்புத் துறையும் வெகு நெருக்கமாக இயங்கும் ஒரு நாட்டில், விளம்பரத் துறையில் பின்புலம் கொண்ட ஒருவர், பொழுதுபோக்கையும் ஊடகத்தையும் பின்பற்ற 'பேங் பேங்' போன்றொரு நிறுவனத்தைத் தொடங்குவதை விட வேறு சிறப்பான வழி இருந்திருக்காது என உணர்கிறார் ரூபக்.

இயக்குனரை மையமாக வைத்து இயங்கும் தயாரிப்பு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் சந்தையில், இயக்குனர் வெறும் இயக்குனராக மட்டுமல்லாமல், வணிக ரீதியான முடிவுகள் செய்யும் நபராகவும் இருக்கிறார். படைப்பாற்றலுக்கு பற்றாக்குறை இல்லாத போதிலும், இத்துறையில் ஒரு வெளிப்படைத்தன்மை இல்லை என்கிறார் ரூபக்.

உதாரணமாக, ஒரு தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து எவரேனும் ஒரு விலைமதிப்புப் பட்டியல் (Quote) கோரினால், அவர்களிடம் ரூ.72,00,000 போன்ற ஒட்டுமொத்த எண்ணிக்கை மட்டுமே தரப்படுகிறது. எந்த வேலைக்கு எவ்வளவு செலவு என்று பகுத்துச் சொல்லப்படுவது இல்லை. ஏன் அவ்வளவு தொகை என்பதற்கான உரிய விளக்கமும் அளிக்கப்படுவது இல்லை. இந்த மாதிரியான விலைமதிப்புப் பட்டியல்களை கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்வதை ஒரு நியதியாகவே ஏஜென்சிகள் கடைபிடிப்பதுதான் இதில் உச்சபட்ச வியப்பு என்று அடுக்கினார்.

புதிய சிறகுகளை உருவாக்குதல்

ஒரு வித்தியாசமான அணுகுமுறையை முன்வைக்கும் ரூபக் "மற்ற நிறுவனங்களில் இருந்து மாறுபட்டு, நாங்கள் அதிகளவிலான விவரங்களை கொடுக்க ஆரம்பித்தோம். இந்த அணுகுமுறை வாடிக்கையாளர்களைக் கவர்ந்தது. தொழில்ரீதியாக சிறப்பாக மேம்பட்ட முறையில் இயங்கினோம். எங்களோடு இணைந்து பணிபுரியத் தயாராக இருக்கும் இந்திய இயக்குனர்கள் அறிமுகம் இல்லாததால், சர்வதேச திறமைகளை கொண்டுவந்தோம்" என்கிறார்.

நான்கு வருடங்களில் 'பேங் பேங் ஃபிலிம்ஸ்' இந்தியாவின் மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றானது. அதற்கு, அவர்கள் ஒரு நிறுவனமாக மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்க வேண்டியிருந்தது. அவர்களுடைய முதல் திருப்புமுனை, 2009 மற்றும் 2010-ஆம் ஆண்டு ப்ரியங்கா சோப்ரா நடித்த நோக்கியா விளம்பரம். "யாரோடெல்லாம் பணிபுரிய வேண்டும் என கனவு கண்டிருந்தோமோ, அவர்கள் எல்லோரும் எங்களைத் தேடி வரத் தொடங்கினர். அது அவ்வளவு சுலபமாக ஒன்றும் நடக்கவில்லை. நாங்கள் வெளியாட்களாய் இருந்தாலும், நம்பகத்தன்மையை உருவாக்கிய பிறகு, அதை யாராலுமே அசைக்க முடியவில்லை” என்கிறார்.

தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருந்ததில் நிறைவில்லாத ரூபக், 2008-ல் தொடங்கிய டிஜிட்டல் அலையில் குதித்து உள்ளடக்க பகுதியை (content space) பரவலாக்க தீர்மானித்தார். "டிஜிட்டல் ஊடகத்தின் சிறப்பான முடிவுகளைப் பெற, செயல் திட்டமும், படைப்பும், தயாரிப்பும் ஒரே கூரையின் கீழ் இருக்க வேண்டும். வெறுமனே ஒரு காரியத்தை செயல்படுத்தும் நிறுவனமாக இருந்த நாங்கள், திட்டமிட்டு செயல்படும் நிறுவனமாக உருமாற வேண்டியிருந்தது" என்கிறார்.

ஒரு கருப்பொருளை உருவாக்குதலில் மட்டுமின்றி, அதைப் பரவலாக்கவும், விநியோகிக்கவும், பிறரை அதில் ஈடுபடுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று உணர்ந்தனர். அவர்களுடைய முதல் ஒருங்கிணைந்த சந்தைப்படுத்தும் பிரச்சாரம் பூமா பிராண்டிற்காக செய்த்து. அதற்கு பிறகு, பல வாடிக்கையாளர்கள் வந்து சேர்ந்தனர். அந்த வரலாற்று சிறப்புமிக்க 'கொலைவெறி' வீடியோ சம்பவமும் அபோதுதான் நடந்தது.

வெற்றிக்கான பாதை அமைத்தல்

ஆனாலும், அதுவுமே ஒரு போதுமான லாபகர வணிக மாதிரியை படைக்கவில்லை என்று அவர்கள் உணர்ந்தனர். நிதியின் அடிப்படையில் பார்க்கும்போது, பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லாமல் இருந்தது. எங்கள் நிறுவனம், பல முதன்மையாளர்களோடு, முற்றிலும் வேறுபட்ட முதிர்ச்சியான நிலையை அடைந்திருந்தது. நாங்கள், விளையாட்டுப் பிள்ளைகள் இல்லை என்பதை தெளிவாக உணர்ந்தோம். ஒன்று அல்லது இரண்டு லட்சம் மதிப்பிலான வேலைகள் ஒத்து வரவில்லை என்பதையும் புரிந்துக் கொண்டோம்.

அதனால், டிஜிட்டலுக்கான ஊடகக் கருவிகள் கொள்முதல் செய்யும் சேவையையும் சேர்த்துக் கொண்டோம். அதை தொழில்நுட்பத்தோடு சேர்த்துக் கொண்டோம் வலிமையான டிஜிட்டல் பிராண்டுகளை தொழில்நுட்பத்தின் உதவியோடு கட்டமைக்கலாம் என்பதே இதற்குக் காரணம். இன்று, இந்தியாவில் முன்னணியில் இருக்கும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் நிறுவனங்களில் ஜேக் இன் தி பாக்ஸும் ஒன்று" என்கிறார் ரூபக்.

வருடத்திற்கு 60 கோடி ரூபாய் லாபம் ஈட்டுவதாய் சொல்கிறது ரூபக்கின் குழு. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை 27-ல் இருந்து ஏழாக குறைத்தது வழக்கமில்லாத ஒரு முடிவுதான். ஏழு வாடிக்கையாளர்கள் மட்டுமே இருந்தாலும், டிஜிட்டல் மீடியாவின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இறுதி வரை ஒன்றிணைந்து செயல்படுவதில் ஆர்வம் காட்டுபவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் அதற்கான காரணம். சமூக ஊடகத்தில் வேரூன்றி இருக்கும் பல நிறுவனங்கள், டிஜிட்டலுக்கு மூன்னேறிக் கொண்டிருக்கின்றன என்கிறார் ரூபக்.

“அதைப் புரிந்துகொள்வதில் ஓர் இடைவெளி இருப்பது உண்மை. பிராண்ட்களைப் பற்றியும், அவை வழங்குபவை பற்றியும் தீர்க்கமான புரிதல் தேவைப்படுகிறது. ஓர் ஒருங்கிணைந்த டிஜிட்டல் ஊடகச் சூழலை அமைக்க, வணிகம் மற்றும் சந்தைப்படுத்துதல் எப்படி இயங்குகிறது என்று புரிந்துகொள்ள வேண்டும்.

மேம்பாடுகள்

2013-ன்போது, தங்கள் குழுவை வேறுபடுத்திக் காட்டுவதே ‘கருப்பொருளும், உள்ளடக்கமும்’ தான் என்பதை உணர்ந்திருக்கின்றனர். தாங்கள் ஒரு நம்பத் தகுந்த கருப்பொருள் நிறுவனமாக இருக்க வேண்டுமெனவும், பிராண்டுகளை தடுப்பதன் மூலமாக ஏஜென்சியின் வலைக்குள் விழக் கூடாது எனவும் விரும்பினர்.

அதனால், ரூபக்கின் குழு, தாரா ஷர்மா ஷலுஜாவின் நிகழ்ச்சியின் இணை-தயாரிப்பில் ஈடுபட்டனர். பிராண்டுகளில் கவனம் செலுத்தாத கதைகளுக்கான கண்டண்ட் குழுக்களை வடிவமைத்த, ரூபக்கின் நிறுவனத்திற்கு, இன்று பல கிளைகள் இருக்கின்றன. அவை, தி 120 மீடியா கலெக்டிவ் என்னும் தலைமை நிறுவனத்தின் கீழ் இயங்குகின்றன. தி 120 மீடியா கலெக்டிவ் நிறுவனம் - தொலைக்காட்சி, அச்சு, இணையம் மற்றும் பிராண்டுகளுக்கான மொபைலும், அல்லது சொந்த ஐ.பி.யிலும் கவனம் செலுத்துகின்றன. பேங் பேங் என்னும் தயாரிப்பு நிறுவனமும், ஒருங்கிணைந்த சந்தைப்படுத்துதலில் இயங்கும் ஜேக் இன் தி பாக்ஸ் நிறுவனமும், 2015-ல் உருவாக்கப்பட்ட ஸ்னைப்பர் மற்றும் சூப்பர்ஃப்ளை என்னும் நிறுவனமும் இவற்றில் அடங்கும். கேலிஸ்டா கேபிட்டல் என்னும் நிறுவனத்திலிருந்து தி 120 மீடியா கலெக்டிவிற்கு வெளிப்புற முதலீடு கிடைத்தது. இது, செயல்பாடுகளை விரிவுபடுத்தவும், கட்டமைக்கவும் உதவியது.

பேங் பேங்-ன் வளர்ச்சி

“இன்று, பேங் பேங் ஃபிலிம்ஸ், ஒரு ப்ரீமியம் தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. அது அதிக விலைக் கொண்டதாகவும், வளைந்துக் கொடுக்காததாகவும் தெரியலாம். பிராண்டுகள் விளம்பரப்படங்களைத் தவிர்த்து, நூற்றுக்கணக்கான வீடியோ கன்டென்டெடுகளை தயாரிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், தயாரிப்பில் ஒரு வித்தியாசமான அணுகுமுறை வேண்டும். பேங் பேங் விரைவில் அதன் மதிப்பை இழந்துவிடும் எனப் பட்டது. அதனால் பிறந்தது தான் "ஸ்னைப்பர்" என்கிறார் ரூபக்.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகக் கூடிய பெரிய பட்ஜெட் விளம்பரங்களை மட்டுமின்றி, குறைந்த பட்ஜெட் வீடியோ உள்ளடக்கங்களையும் தரத் தொடங்கினோம். அதாவது, வழக்கமான ஊடக சேனல்களைத் தாண்டி இந்தத் துறையில் பல அடித்தளங்களை அமைத்தோம்.

“பேங் பேங் முழுவதுமாக மறைந்துவிடவில்லை. அது, இந்தியாவில் படமாக்கப்படும் சர்வதேச படங்களுக்கான தயாரிப்பு சேவைகளுக்கான பிராண்டாக மாறியிருக்கிறது” என்கிறார் ரூபக். ஸ்னைப்பர் மூலமாக, பிராண்டுகளுடன் நேரடியாக பேசி, குழுவிற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது.

விநியோகத்தை கையாளும் எண்ணத்தோடு 2015-ல் 'சூப்பர்ஃபளை' என்னும் மற்றொரு பிராண்டையும் நிறுவினார் ரூபக். மக்களுடனும், படைப்பாளிகளுடனும் அவர்களது படைப்பை டிஜிட்டல் வீடியோ தளத்தில் இயங்கும் பல சேனல் இணையமாக இருக்கிறது. ஏப்ரல் வரையில் 75 சேனல்களை நிர்வகித்த குழு, 2016 மார்ச் மாதத்திற்குள் 200 சேனல்களை நிர்வகிப்பதைக் குறிக்கோளாக வைத்திருக்கிறார்.

ரூபக்கும் அவர் குழுவும் பிராண்டுகளுக்கு பார்வையாளர்கள் அமைக்கும் வேலையும் செய்கிறார்கள். “நாங்கள் ஒரிஜினல் கன்டென்டையும் படைக்கிறோம். நாங்கள் உள்ளடக்கம், மற்றும் பிராண்டுகள் கட்டமைப்பதன் மூலமாக, பார்வையாளர்களை படைப்பதாகவும், உருவாக்குவதாகவும் நம்புகிறோம். ஒன்பது வருடங்களில், கன்டென்டை சிதைக்காமல், அதன் மூலமாக நாங்கள் ஈடுபாட்டை உருவாக்க பயின்றிருக்கிறோம். இப்போது, ஒரு மூன்றாம் நிலை தளத்தில் அவற்றை விநியோகிக்காமல், நேரடியாக எங்கள் தளங்களிலேயே விநியோகிப்போம்” என்கிறார் ரூபக்.

இன்றைய பிராண்டுகள் நேரடியாக ‘ஏஐபி ஆஃப் தி வர்ல்டு’ போன்ற உள்ளடக்க படைப்பாளர்களை, கன்டென்ட் உருவாக்கவும், பார்வையாளர்களுடன் கலந்துரையாடவும் அணுகுகிறார்கள். சூப்பர்ஃப்ளை அந்த மாதிரியை நோக்கியே பயணிப்பதாய் ரூபக் நம்புகிறார். ஆனால், டிஜிட்டல் ஊடகம் பாரம்பரிய ஊடக அமைப்புகளால் அல்லாமல், தேர்வு செய்யும் பார்வையாளர்களை சார்ந்து தான் வளர்கிறது எனும் ரூபக்கின் குழு, கடந்த நிதி ஆண்டில் மட்டும் 60 கோடி ரூபாய் ஈட்டியிருக்கிறது!

இணையதள முகவரி: 120MediaCollective

ஆக்கம்: சிந்து கஷ்யப் | தமிழில்: ஸ்னேஹா