தேசத்தின் விவசாய முன்னேற்ற பாதையில் - அஜீத் சிங்கின் “ஜெய் ஜவான்,ஜெய் கிஷான்” கோஷம்

ராணுவத்தில் பணியாற்றிய அஜீத் சிங் தற்போது விவசாயிகளுக்காக பணியாற்றுகிறார். அனந்த் சேவைகள் மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் பின்னுள்ள கதை

0

அனந்த் நிறுவனம் விவசாயிகளின் திறன் மேம்பாட்டிற்காகவும் வேலை வாய்ப்பிற்காகவும் பணியாற்றும் ஒரு சேவை நிறுவனம். இதற்காகவே ரோஜ்கார்மெலா.காம் (Rozgarmela.com) என்ற தளத்தை பிரத்யேகமாக உருவாக்கியுள்ளது.இந்நிறுவனம் சமீபத்தில் தான் விவசாய விதைகளுக்கான நிதியை "என்னோவெண்ட்" எனப்படும் தாக்கம் சார்ந்த முதலீட்டு நிறுவனத்திடமிருந்தும்(Ennovent Impact Investment Holding),சமூக புதுமுயற்சிகளுக்கு உதவும் உபயா நிறுவனத்திடமிருந்தும் (Upaya Social Ventures) பெற்றுள்ளது.

எங்களின் முக்கிய நோக்கமே “சமூகத்தின் எல்லா தட்டு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியே” என்கிறார் அனந்த் நிறுவனத்தின் நிறுவனரான அஜீத் சிங். “இதன் பொருள் சில குறிப்பிட்ட அல்லது வரையறுக்கப்பட்ட என்றில்லாத எல்லோருக்குமான” என்பதே. அனந்த் என்ற வார்த்தைக்கு ”முடிவற்ற” “வரையறையற்ற” என்று பொருள்.எங்கள் நிறுவன லோகோ இதை பிரதிபலிக்கிறது. முடிவற்ற ஒன்றின் அடையாளம் (sign of infinity) என்பதே அது.

அஜீத் சிங்கின் ராணுவ வாழ்க்கை கொஞ்சம் சுவாரசியமானது. "அது எனக்கு நிறைய கத்து கொடுத்தது. குறிப்பாக மக்களோடு மக்களாக பணியாற்றுவது, சவாலான பிரச்சினைகளை சமாளிப்பது, பெரிய குழுக்களை நிர்வகிப்பது, நீண்ட தூரம் பயணம் செய்வது. இப்படி நிறைய. இதெல்லாம் எனக்கு ரொம்ப பிடித்திருந்துது” என தன் பழைய நினைவுகளில் மூழ்கினார்.

"ராணுவத்தில் இருந்தபோது நான் சந்தித்த சவால், சுவாரசியமான அனுபவங்களெல்லாம் பின்னாளில் என்னை தயார் படுத்திக்கொள்ள உதவியது. அது தான் நான் இப்போது புதுசாக ஒன்றை முயற்சி செய்ய உதவியது. 1999ல் ரொம்ப கஷ்டமான பகுதிகளில், பிரச்சினைக்குறிய இடங்களில் வேலை பார்த்திருக்கிறேன். எனக்கு நடந்த ஒவ்வொரு புதிய அனுபவமும் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளும் வாய்ப்பாக இருந்தது. குறிப்பாக, ஊருக்குள் இருக்கும் மக்களை சந்திக்க ராணுவம் அனுமதித்தது. அதன்மூலமாக அவர்களின் பிரச்சினையை புரிந்து கொண்டேன்"

ராணுவத்தை விட்டு வெளியேற முடிவு செய்த பிறகு அஜீத்சிங், தான் சந்தித்த வித்தியாசமான மனிதர்களை பற்றியெல்லாம் சிந்தித்தார். அது அவரை தொழில்முறை வளர்ச்சியை நோக்கி தள்ளியது.டெல்லியில் ஒரு டீக்கடையில் அவ்வப்போது சில நண்பர்களை சந்தித்து பேசுவார். இது பற்றி விவாதிப்பார். ”நாங்கள் ஐந்து பேரும் வேவ்வேறு நிறுவனங்களில் நாடு முழுவதிலுமுள்ள கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்காக வேலை பார்த்தோம். நாங்கள் ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு அவர்களுக்காக வேலை செய்தாலும் அதன் முடிவு ரொம்ப சிறியதாக இருந்துது. இது எங்களை விரக்தியடைய செய்தது.”அவர்களிடம் பேசியதிலிருந்து அஜீத் சிங்கின் எண்ணம் வலு பெற்றது. ”ஆரம்பிதத புதுசில் எங்கள் பயணம் மிகவும் கரடுமுரடாக இருந்தது. கடைசியில் நானும் சுரேஷ்குமாரும் மட்டும் தான் மிச்சமிருந்தோம்” என்கிறார்.

கடந்த ஓராண்டில் மட்டும் இவரது குழு பயிற்சிக்கு பிந்தைய பரிசோதனை,மதிப்பீடு,வேலைவாய்ப்பு ஆகிய மூன்று முக்கிய கட்டங்களில் கவனம் செலுத்தியிருக்கிறது. “முதல்கட்டமாக நாங்கள் வேலை கொடுப்பவர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கிறோம், அவர்களிடம் கருத்து கேட்டு என்ன எதிர்பார்க்கிறார்கள் என புரிந்துகொள்கிறோம். எங்கள் விண்ணப்பபடிவத்தை அதற்கு ஏற்ப உருவாக்கினோம். இதன்மூலம் எங்கள் வாடிக்கையாளர்கள் சமகால தகவல்களை உடனுக்குடன் அறிக்கையாக பெற முடிகிறது. இதன் மூலம் வேலைத்திறனை அவ்வப்போது கண்காணித்து மதிப்பீடு செய்ய முடியும். இதை வைத்து தங்கள் ஒட்டுமொத்த திட்டத்தின் திறனை சோதிக்க முடிவதோடு தங்கள் உத்தியை அவ்வப்போது மாற்றிக்கொள்ளவும் முடிகிறது.

இரண்டாவது கட்டமாக மதீப்பீடு (assessment) செய்கிறார்கள்.”நாங்கள் இந்திய வேளாண் திறன்களுக்கான கவுன்சிலோடு இணைந்து (Agriculture Skill Council of India (ASCI) ) பல்வேறு வேலைகளில் ஈடுபடும் விவசாயிகளை அவர்கள் வேலை சார்ந்து மதிப்பீடு செய்கிறோம். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இது மாதிரியான வேலையை செய்வது இந்தியாவிலேயே மிக குறைவான ஆட்கள் தான் உள்ளனர். அதில் நாங்களும் ஒருவர்” என்கிறார் பெருமையாக.

“இதையெல்லாம் தாண்டி எங்கள் மீதான நம்பகத்தன்மையை தக்க வைத்து கொள்வது தான் மிகவும் சவாலாக இருக்கிறது. காரணம் புதுசாக ஆரம்பித்த ஒரு நிறுவனத்தை மக்கள் நம்புவது கடினம். காரணம் சிறிய குழுவை கொண்டு, பெரிய பெரிய யோசனையை சோதித்து பாக்கிறோம். ஆனால் அது தான் அவர்களையும் யோசிக்க வைக்கிறது” என்கிறார். இருந்தாலும் அஜித் சிங்க் படிப்படியாக முன்னேறி நிறுவனத்தின் இரண்டாவது ஆண்டில் லாபகரமான இடத்தை அடைந்திருக்கிறார். அதுவும் முதல் முயற்சியிலேயே தன் புதுவிதமான தொழில்நுட்பத்தாலும், சந்தைபடுத்தும் உத்தியாலும் இதை சாதித்திருக்கிறார்.

இந்த சாதனைகளுக்கெல்லாம் பின்னால் தன் சக நண்பர்களாக பணியாளர்கள் இருந்ததாக தெரிவிக்கிறார். “சில நல்லவர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு குழுவாக வேலை பாக்கும் போது தானாவே நல்லது நடக்கும். எங்கள் குழுவும் அப்படி தான். அனுபவம் வாய்ந்தவர்களும், இளைஞர்களும் ஒரு கலவையாக சேர்ந்து களத்தில வேலை பார்க்கும் போது அங்கு தானாகவே அதிசயம் உருவாகிறது. சொல்லப்போனால் ஆரம்பத்திலிருந்து இன்று வரை ரொம்ப கஷ்டமான காலத்திலேயும், கூட நிற்பதற்கு அற்புதமான அற்பணிப்பு உணர்வு இருந்தால் தான் இது சாத்தியம்” என்கிறார் அஜீத் சிங்.

மாறிவரும் சூழலுக்கு ஏற்ப, அனந்த் நிறுவனம் மீள் தன்மையோடு இருந்திருக்கிறது. ”நாங்கள் காலத்திற்கு தகுந்தவாறு மாறியும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு தொழில்நுட்பத்தில் மாற்றத்தை புகுத்தியதுமே எங்கள் தேவையையும் பங்குதாரர்கள் தேவையையும் பூர்த்தி செய்ய முடிந்தது” என்கிறார்.” இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டியது உங்களால் எவ்வளவு செய்ய முடியும் என்பதற்கும் நீங்கள் எவ்வளவு செய்ய விரும்புகிறீர்கள் என்பதற்கும் இடைபட்ட சமநிலையை உருவாக்குவது தான்” என்கிறார் புன்முறுவலோடு.