ஒவ்வொரு இந்தியப் பெண்ணையும் ஆத்திரமடையச் செய்யும் ஐந்து விஷயங்கள்! 

2

டெல்லி பல்கலைக்கழக கேம்பஸில் இருக்கும் ஒரு சிறிய கடையில் நின்றிருந்தேன். இருபது வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் சிகரெட் வாங்குவதற்காக அந்த கடையில் நின்றார். கடைக்காரர் அந்த இளைஞரிடம் புகைப்பிடிப்பதை நிறுத்திவிடுமாறு அறிவுரை வழங்கினார். அத்துடன் அவர் அறிவுரையை நிறத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். மாறாக அந்த இளைஞரிடம் அவருக்கு திருமணம் நடந்தால் வரப்போகிற மனைவி அவரது புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்திவிட வலியுறுத்த வாய்ப்புள்ளதா என்றால் இன்றைய பெண்களே புகைப்பிடிக்கிறார்களே என்று அங்கலாய்த்துக்கொண்டார். சிறிது நாட்கள் கழித்து அதே பகுதியில் ஒரு கல்லூரி மாணவி பான் கடைக்கு சிகரெட்டுக்கு பயன்படுத்தும் ’ரோலிங் பேப்பர்’ கேட்டு வந்தார். இதைப் பார்த்த ஒரு டெல்லி அங்கிள் ஒரு பெண் இப்படி நடந்து கொள்கிறாரே என்று வருத்தப்பட்டார். அந்தப் பெண் கடந்து சென்றுவிட்டாலும் சமூகத்தின் மோசமான நிலை குறித்து வசைபாடுவதை மற்றவர் கேட்கவேண்டியுள்ளது.

சமூகம் ஒன்றிணைந்து செயல்பட பெண்கள்தான் பாதுகாவலர்களாக இருக்கிறார்கள் என்றும் தீய செயல்களில் ஈடுபடுவது ஒருவரின் தனிப்பட்ட முடிவாக அல்லாமல் ஒழுக்கத்தை குலைக்கும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் சமூகம் அதன் பாதுகாவலர்களுக்கு அவர்களைப் பற்றிய கொச்சையான ஜோக்குகள், கீழ்த்தரமான கருத்துக்கள், அவமரியாதை போன்றவற்றையே வெகுமதியாக அளிக்கிறது. இன்றளவும் இந்தியப் பெண்களை கவலைக்குள்ளாக்கும் ஐந்து விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கண்ணிமைக்காமல் உற்றுபார்ப்பது...

வெளியில் வந்து வீதியில் கால்வைத்ததும் விலங்குகளைப் பார்ப்பது போலவே தாங்கள் பார்க்கப்படுவதாக எந்த இந்தியப் பெண்ணும் சற்றும் தயங்காமல் ஒப்புக்கொள்வார்கள். உற்றுபார்க்கப்படுவதையும் ஒழுக்கமற்ற பார்வையையும் தவிர்க்கமுடியவில்லை. அவர்கள் பார்வையில் எந்தவித வேற்றுமையும் இருக்காது. அதாவது நீங்கள் பர்கா அணிந்திருக்கலாம் அல்லது ஷார்ட்ஸ் அணிந்திருக்கலாம், இந்தியனாக இருக்கலாம் அல்லது வெளிநாட்டவராக இருக்கலாம். எப்படியிருந்தாலும் யாராக இருந்தாலும் முறைத்துப் பார்க்கின்றனர்.

பெண்களை எப்படி உற்றுப்பார்ப்பது என்பதை கற்றறிய ஆண்களுக்கு ஏதேனும் ரகசிய பள்ளி இருக்கிறதா என்ன? - மான்வி கக்ரூ, ட்வீட், நவம்பர் 29, 2016

ஜிம்மில் இருக்கும் இந்திய ஆண்கள் பெண்களை பின்தொடர்பவர்களாகவே இருக்கிறார்கள். பெண்களும் வொர்க் அவுட் செய்யலாம். தயவு செய்து அவர்களை முறைத்துப் பின்தொடராதீர்கள்.Pree, ஆகஸ்ட் 27, 2016

இந்திய ஆண்களைப் போல வேறு யாரும் பெண்களை மோசமாக முறைத்துப் பார்க்க மாட்டார்கள். நன்றாக கண் இமைக்காமல் உற்று நோக்கும் விதம் உங்களது DNA-வையே படிக்க முயற்சிப்பது போல இருக்கும். - poet in a mirror, அக்டோபர் 20, 2015

இதை எப்படி தடுப்பது? நாமும் அவர்களை முறைத்துப் பார்ப்பது சில சமயம் உதவினாலும் எப்போதும் அது பலனளிக்காது. பெரும்பாலான பெண்கள் ஆண்கள் தங்களைப் பார்ப்பதைத் தவிர்த்துவிட்டு அவர்களது வேலையில் ஈடுபடத்தொடங்கிவிடுகிறார்கள். இருப்பினும் இந்த நடவடிக்கை அதிக வெறுப்பையே அளிக்கும்.

இந்திய ஆண்கள் முறைத்துப் பார்த்தால் நீங்களும் அதே போல் கண்ணிமைக்காமல் எதிர்க்கும் வகையில் அவர்களது வக்கிர பார்வை அகலும்வரை உற்று பாருங்கள். -Annaliese, நவம்பர் 1, 2015

மாற்ற முடியாத ஒரே மாதிரியான நம்பிக்கைகள்

மாடர்னாக இருப்பது, மது அருந்துவது, புகை பிடிப்பது, பார்டிக்குச் செல்வது, ஆண்களுடன் சுற்றுவது போன்ற செயல்களில் ஈடுபடும் பெண்கள் ’ஒழுக்கமற்றவர்கள்’, ’வரைமுறையற்றவர்கள்’ என்றே முத்திரை குத்தப்படுகின்றனர். சமூகப் பொறுப்புள்ள ஒழுக்கமான பெண்கள் பாரம்பரியம் நிறைந்தும், பண்போடும், வீட்டுக்குள்ளேயே அடங்கியும் இருக்கவேண்டும். அவ்வாறு இல்லையெனில் வெட்கபடத்தக்கதாகவே பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் சௌந்தர்ய க்ரீம் குறித்த பதஞ்சலி விளம்பரம் ஒளிபரப்பப்படுகிறது. இதில் இரு சகோதரிகள். ஒருவர் மேக்அப் போட்டு மேற்கத்திய உடையணிந்து மாடர்ன் பெண் போல இருப்பார். இவருடைய தோல் மோசமாகவும் அழகற்றதாகவும் குறைபாட்டுடனும் காணப்படுகிறது. அவரது சகோதரி போல பாரம்பரிய வாழ்க்கை முறைக்கும் சௌந்தர்ய க்ரீமுக்கும் மாறிய பிறகு அவரது நிலைமை மாறிவிடுகிறது.

ஒரு பெண் சிகரெட் வாங்கும்போது இந்திய ஆண்கள் பார்க்கும் விதம் மோசமானது. என் போக்கில் விட்டுவிடுங்கள். எனக்கு என்ன வேண்டுமோ அதைச் செய்துகொள்கிறேன். -Jackie Osassin, அக்டோபர் 6, 2015

இந்திய திரைப்படத் துறையிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. பெண்கள் கவர்ச்சியாக திரையில் தோன்றினால் பரவாயில்லை. ஆனால் கதாநாயகன் தனது அம்மாவின் கண் முன்னால் நிறுத்துவதற்கு ஏற்றவாறான பெண்ணையே திருமணம் செய்துகொள்வார். காக்டெயில் திரைப்படத்தில் தீபிகா படுகோனின் கதாபாத்திரம் நினைவிருக்கிறதா? எந்த ஆணும் ஒரு பெண்ணை சுலபமாக கேர்ள்ஃப்ரெண்ட் என்று சொல்லிக்கொள்ள முன்வரும்போது குடும்பத்தின் ஒரு அங்கமாக மாற்றுவதில் மட்டும் ஏன் அந்த உற்சாகம் காணப்படுவதில்லை. இது மட்டுமல்ல இப்படி பல உதாரணங்கள் உள்ளன.

பழி சுமத்துவது

ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாலோ, தாக்கப்பட்டாலோ அல்லது துன்புறுத்தப்பட்டாலோ ஏதோ ஒரு விதத்தில் அந்தப் பெண்ணும் காரணம் என்றே இந்திய சமூகத்தில் நம்பப்படுகிறது. அந்தப் பெண்ணின் நடத்தை, அணுகுமுறை, நடவடிக்கை அல்லது அவரது உடை போன்றவைதான் காரணம் காட்டப்படுகிறது. வெவ்வேறு விதமான கொடூரங்கள் இழைக்கப்பட்டாலும் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தப்பட்ட பெண்தான் தனக்கு நேர்ந்த பிரச்சனையை வரவழைத்துக்கொண்டதாக சித்தரிக்கப்படுகிறது. ஆனால் இப்படிப்பட்ட நிலைபாடு பச்சிளம் குழந்தைகளுக்கு எப்படி பொருந்தும்?

இந்திய தாக்குதல்களைப் பொருத்தவரை பாதிக்கப்பட்டவரை குறைகூறுவதில் நீங்களும் சீற்றம் கொள்ளவில்லையெனில் பிரச்சனையில் உங்களது பங்கும் உள்ளது என்றே பொருள்படும். -Jen Langton, ஜனவரி 4, 2017

பெண்களின் கருத்துக்கு எதிராக ஆண்கள் கருத்து தெரிவிப்பது

பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்களை உடலளவில் மட்டுமல்லாது அறிவு சார்ந்தும் உயர்த்திகாட்டுகிறது ஆணாதிக்கம் நிறைந்த இந்திய சமூகம். இதுதான் பெண்களின் கருத்துக்கு எதிரான ஆண்களின் கருத்துகளுக்கு அடிப்படைக் காரணம். ஆண்கள் தங்களை உயர்வாக நினைத்துக்கொள்வதால் எப்படிப்பட்ட சாதனைகளை புரிந்த பெண்களாக இருந்தாலும் உயர்ந்தவர்களான தாங்கள்தான் அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று ஆண்கள் நம்புகின்றனர்.

திருமணம் குறித்த ஜோக்குகள்

திருமணம் குறித்து வரும் அனைத்து ஜோக்குகளும் பெண்களை மையப்படுத்தியே இருக்கிறது. சமூக ஊடகங்களில் திருமணம் குறித்தும் திருமணமான ஆண்களின் நிலை குறித்தும் எண்ணற்ற ஜோக்குகள் வலம் வருகிறது. அவற்றை முற்றிலும் அகற்ற வேண்டிய நேரமிது.

சமூக உணர்வுடன் திருமணம் குறித்த ஜோக்குகளை அப்டேட் செய்யவேண்டும் -Alka R, பெப்ரவரி 12, 2017

இது ஆண்களை சாடுவதற்கோ அல்லது அனைத்து ஆண்களையும் சுட்டிக்காட்டுவதற்கோ அல்ல. உண்மையில் வேடிக்கையாக இருக்கும் ஜோக்குகள் எங்களுக்கு புரியும். ஆனால் எல்லையை மீறக்கூடாது. பாதிக்கப்பட்டவரை குறைகூறுவதும் பெண்களின் கருத்துக்கு எதிராகவே ஆண்கள் கருத்து தெரிவிப்பதும் தடுக்கப்படவேண்டும். பெண்களுக்கு தேர்வு செய்யும் உரிமை உள்ளது. அவ்வாறு இல்லை என்று ஆணையிடுபவர்கள் தங்களுடைய மனநிலையை கட்டாயம் சரிசெய்து கொள்ளவேண்டும்.

ஆங்கில கட்டுரையாளர் : தன்வி துபே