2017: தடைகளை உடைத்து சோதனைகளை சாதனையாக்கிய சிவில் சர்வீஸ் வெற்றியாளர்கள்!

0

‘எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார்                                                         திண்ணியர் ஆகப் பெறின்’.

அதாவது தனது இலக்கில் உறுதியாக இருப்பவர்கள், தங்களது எண்ணத்தின்படியே நிச்சயம் ஒருநாள் வெற்றி பெறுவர் என்பது தான் இந்தக் குறளின் பொருள்.

அந்தவகையில், வறுமை, சமூக புறக்கணிப்பு, ஆங்கிலப் புலமை இல்லாமை என ஆயிரம் தடைகள் எதிர்கொண்டு வந்தாலும், அவற்றை தங்களது மன உறுதியினால் உடைத்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றிக் கனியைப் பறித்த சில மாணவர்களைப் பற்றிய தொகுப்பு இது.

இலக்கியா:

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையைச் சேர்ந்த இலக்கியா சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்தவர். சித்தியின் பராமரிப்பில் வளர்ந்த அவர், கடந்த 2016-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வை எழுதி, அதில் 298-வது ரேங்க் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார். இது அவரது இரண்டாவது முயற்சியிலேயே கிடைத்த வெற்றியாகும்.

ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த இலக்கியா தன்னுடைய வெற்றியை தன் சமூகத்திற்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறார். தங்களது சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலருக்கு இப்படி ஒரு படிப்பு இருப்பதாகவே தெரியவில்லை என்று வருத்தப்படும் அவர், தன் மூலம் பலரும் விழிப்புணர்வு அடைய வேண்டும் என்பதே தன்னுடைய நோக்கம் என்கிறார்.

இவரைப் பற்றி மேலும் படித்து தெரிந்து கொள்ளலாம்...

சரவணன்:

2015-ம் ஆண்டு மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையம் நடத்திய இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வில் தேர்வை மட்டுமின்றி நேர்காணலையும், தமிழ் வழியில் எதிர்கொண்டு தரவரிசைப்பட்டியலில் 366-வது இடத்தை பெற்றவர் தமிழகத்தைச் சேர்ந்த சரவணன்.

ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்தை அடுத்த மயிலம்பாடி கிராமம்தான் சரவணனின் சொந்த ஊர். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சரவணனின் பெற்றோர் கூலித் தொழிலாளர்கள். ஆனால் ஏழ்மையும் வறுமையும் தன்னுடைய வெற்றிக்குத் தடையாக நின்றிட என்றுமே சரவணன் அனுமதித்ததில்லை.

தாய்மொழி வழியில் கல்வி கற்போர்க்கு நல்ல புரிதல் கிடைப்பதால் வெற்றி இலக்கை எளிதில் அடைந்துவிடலாம் என்பதை நிரூபித்துள்ள சரவணனைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள..

கோபால கிருஷ்ணா:

ஆந்திரப்பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்திற்கு அருகிலுள்ள ஒரு ஒதுக்குப்புறமான கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ண ரோனாகி. அப்பாவும் அம்மாவும் தினக்கூலி அடிப்படையில் விவசாயப்பணி செய்து வந்ததால், வீட்டில் வறுமை தாண்டவமாடியது. மின்சார வசதியில்லை, தினமும் 4 கிலோமீட்டர் நடந்து பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை.

இதற்கிடையே தலித் வீட்டு திருமணத்தில் பங்கேற்றதால் கோபாலாவின் குடும்பம் 25 ஆண்டுகள் ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டது. இப்படியாக தான் அனுபவித்த வேதனைகளை தன் வெற்றிக்கு உரமாக்கிய அவர், 2016-ம் ஆண்டு அனைத்திந்திய ரேங்காக மூன்றாம் இடம் எடுத்து ஐஏஎஸ் அதிகாரியாகவேண்டும் என்கிற தனது கனவை நிறைவேற்றிக் கொண்டார்.

வறுமை, சமூகப் புறக்கணிப்பு என பல்வேறு தடைகளைத் தாண்டி வெற்றிக் கனியைப் பறித்த கோபாலாவைப் பற்றி தெரிந்து கொள்ள...

சுரபி:

மத்திய பிரதேசம் சத்னா மாவட்டத்தில் உள்ள அம்தரா கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் சுரபி கவுதம். இவர் 2016 சிவில் சர்வீஸ் பரிட்சையில் 50-வது ரேன்க் எடுத்து சாதனை படைத்துள்ளார். சுரபியின் கிராமத்தில் போதிய வசதிகள் இல்லை, நல்ல ஆசிரியர்கள் கூட அந்த இடத்திற்கு வருவதில்லை. படிக்க புத்தகங்கள் கிடைக்காமல் பலமுறை தெரு விளக்கில் படித்துள்ளார். இதனால் ஆங்கிலம் தான் அவருக்கு பெரிய எதிரியாக பயமுறுத்தியுள்ளது. ஆனால், அதையும் சவாலாக ஏற்றுக் கொண்டு அதனை இலக்கை துல்லியமாக திட்டமிட்டு அடைந்துள்ளார்.

சுரபி எதிர்கொண்ட எல்லா தேர்வுகளிலும் முதல் முறையிலேயே வெற்றி கண்டுள்ளார் என்பது குறிப்ப்பிடத்தக்கது. தற்போது அவரின் கிராமத்தில் ஒரு சூப்பர் ஸ்டாராக சுரபியை எல்லாரும் பார்க்கின்றனர். அம்தரா கிராமத்து குழந்தைகள் சுரபியை முன்மாதிரியாகக் கொண்டு படிப்பில் ஆர்வம் காட்டியும் வருகின்றனர்.

மேலும் சுரபியின் வெற்றிக் கதை தெரிந்து கொள்ள...

ஜெய்கணேஷ்: 

சிவில் சர்வீஸ் தேர்வில் ஆறு முறை தோல்வியுற்று, மனம் தளராமல் ஏழாம் முறை எழுதி அதில் தேர்ச்சி ஆகியுள்ளார் வெயிட்டர் பணியில் இருந்து கொண்டே படித்த ஜெய்கணேஷ். 

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் வேலூர் மாவட்டம் வினவமங்களம் என்ற கிராமத்தில் பிறந்தவர். 2000-ம் ஆண்டு இஞ்சினியரிங் முடித்ததும், வேலை தேடி பெங்களுரு சென்றார். 2500 ரூபாய் சம்பளத்தில் பணிக்கும் சேர்ந்தார். ஐஏஎஸ் ஆனால், ஏழை மக்களின் வாழ்வில் ஏற்றத்தை கொண்டுவரமுடியும் என்று முடிவு செய்து, தன் பணியை ராஜினாமா செய்து, தன் கிராம்த்துக்கே திரும்பச்சென்று ஐஏஎஸ் தேர்வுக்கு படிக்க ஆரம்பித்தார். சென்னையில் கோசிங் மையத்தில் சேர்ந்து படித்துக் கொண்டே, கைச்செலவுக்கு வருமானம் தேவைப்பட்டதால், ஒரு கேண்டினில் பகுதிநேர பணியாக பில் போடுவது மற்றும் சர்வர் பணியும் செய்தார். 

கடுமையாக தயார் செய்து 156-வது ரேன்கோடு ஐஏஎஸ் பாஸ் செய்த ஜெயகணேஷின் விடாமுயற்சி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகமில்லை. இவர் சந்தித்த சவால்கள், தோல்வியை எதிர்கொண்ட விதம் என்று ஜெய்கணேஷின் முழுக் கதையை படிக்க...

மணிகண்டன்:

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள வடக்குமேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது தந்தை நெய்வேலி என் எல் சி ஒப்பந்தத் தொழிலாளி, தாயார் வீட்டு வேலை மற்றும் விவசாயக் கூலி வேலை செய்பவர். தமிழ் வழியில் பள்ளிப் படிப்பை முடித்த மணிகண்டன், கடந்த 2016-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வை தமிழிலேயே எழுதி தமிழிலேயே நேர்காணலையும் எதிர் கொண்டு வெற்றியும் பெற்றுள்ளார்.

குடும்ப வறுமை காரணமாக பகுதி நேரப் பணிபுரிந்து கொண்டே ஐஏஎஸ் தேர்வுக்கு தயார் செய்துள்ளார் மணிகண்டன். தனது அண்ணனின் படிப்பிற்காக தனது படிப்பைத் தியாகம் செய்து பணிக்குச் சென்றுள்ளார் இவரது தங்கை.

வறுமை தனது கனவைத் தின்றுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்து தனது இலட்சியத்தில் வெற்றி பெற்ற மணிகண்டனைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள..

Related Stories

Stories by jayachitra