மலிவு விலை பிரெய்லி பிரின்டர்கள்: 14 வயதில் அசத்தல் ஸ்டார்ட்-அப்!

0

தன் பள்ளியின் அறிவியல் கண்காட்சிக்காக பிரெய்லி பிரின்டர் ஒன்றை ஷுபம் பானர்ஜி வடிவமைத்துக் கொண்டுவந்தபோது அவருக்கு வயது 12 மட்டுமே. இன்று, 14 வயது ஷுபம் வழக்கமான பள்ளி செல்லும் மாணவர் அல்ல; தன் நிறுவனத்தின் வளர்ச்சி மீது அக்கறை கொண்ட தொழில்முனைவரும் கூட. முதலீட்டாளர்களுடன் பேச்சு நடத்துவது, பொறியாளர்களுடன் புதுமுயற்சிகளைப் புகுத்துவது என பரபரப்பாக செயல்படுகிறார். பிரைகோ லேப்ஸ் (Braigo Labs) என்ற கலிஃபோர்னியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்பின் சி.இ.ஓ.வான அவரது நிறுவனத்தில், இன்டெல் கார்ப் முதலான தொழில்நுட்ப ஜாம்பவான்கள் எல்லாம் முதலீடு செய்துள்ளன என்றால் பாருங்களேன்.

அன்று ஒருநாள் பள்ளியின் அறிவியல் கண்காட்சி செயல்திட்டத்துக்காக என்ன செய்யலாம் என்று ஷுபம் யோசித்து முடிவெடுத்தபோதுதான் எல்லாமும் ஆரம்பமானது. தன் பெற்றோரிடம் மிக எளிதான கேள்வி ஒன்றைக் கேட்டார் ஷுபம். "பார்வையற்றோர் எப்படி படிப்பார்கள்?". அதற்கு, "கூகுள் பண்ணிப் பார்" என்று சொல்லி அவர்கள் நகர்ந்துவிட்டனர்.

அதன்பிறகு, ஷுபம் தீவிரமாக இணைய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அப்போது, எம்போஸ்ஸர் என்று அழைக்கப்படும் சராசரி பிரெய்லி பிரின்டர் ஒன்றின் விலை 2,000 டாலர்கள் என்பதை அவர் அறிந்துகொண்டார். "அதற்கு அவ்வளவு விலை இருக்கக் கூடாது என்று எண்ணினேன். அதுபோன்ற பிரின்டரை எளிய வழியில் வழங்கிட வழி உண்டு என்பது எனக்குத் தெரியும்" என்று டெய்லி மெயில் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஷுபம் நினைவுகூர்ந்துள்ளார்.

ஷுபம் தனது குறைந்த விலை பிரெய்லி பிரின்டரை உருவாக்க லெகோ பிளாக்ஸ்களைப் பயன்படுத்தியது சுவாரசியமான உத்தி. மேலும், 350 டாலர்கள் மதிப்பில் லேசான எடையுள்ள ஒரு கணினி பிரின்டரை உருவாக்க விரும்பினார். அந்தத் திட்டங்களைச் செயல்படுத்த ஐந்து பொறியாளர்களை வேலைக்கு அமர்த்தினார்.

பிரின்ட் செய்வதற்கு முன்பாக, எலக்ட்ரானிக் சொற்களை பிரெய்லிக்கு மொழியாக்கம் செய்யக்கூடிய டெக்ஸ்டாப் பிரின்டரை அவர் உருவாக்கினார். அதன்மூலம் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் போனில் இருந்து காகிதத்தில் 'மை'க்கு பதிலாக புள்ளிகளை அச்சிடும் யோசனை வெற்றிபெற்றது. இது, இன்றைய உலகில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் கல்வியில் இருக்கும் தடைகளை உடைத்தெறிவது நிச்சயம். "ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்ததும் முதலீட்டாளர்களுடன் சந்திப்பு நிகழ்கிறது" என்று தி கார்டியன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பெருமிதமாகச் சொல்கிறார் ஷுபம்.

தமிழில்: கீட்சவன்