’இரண்டே ஆண்டுகளில் 80 கோடி இந்தியர்கள் இணையத் தொடர்புடன் இருப்பார்கள்’- இணைச் செயலர் ராஜீவ் பன்சல்

0

யுவர்ஸ்டோரி நடத்தும் வருடாந்திர நிகழ்வு ‘மொபைல் ஸ்பார்க்ஸ்’ MobileSparks2016புது டெல்லியில் இன்று காலை இனிதே தொடங்கியது. இந்தியன் ஹாபிடாட் மையத்தில் நடைபெறும் இந்த ஒரு நாள் நிகழ்வில், இந்தியாவில் மொபைல் துறை தொடர்பான ஸ்டார்ட்-அப், தொழில்முனைவோர்கள் மற்றும் டெவலப்பர்கள் தங்களின் தயாரிப்பை, சேவையை மற்றும் கண்டுபிடிப்புகளை வெளியிடுகின்றனர். 6 ஆவது பதிப்பான இந்த ஆண்டின் ‘மொபைல் ஸ்பார்க்ஸ்’ தற்போதுள்ள சந்தை வாய்ப்புகள், தேவைகள் மற்றும் சேவைகள் குறித்து கலந்துரையாடல், குழு விவாதங்கள் மூலம் விவாதிக்கவுள்ளது. 

இந்த விழாவில் கலந்து கொண்டு துறை வல்லுனர்கள், அரசுத்துறை அதிகாரிகள், முதலீட்டாளர்கள் தங்களின் கருத்துக்களை, அனுபவங்களை பகிர்ந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் இணை செயலாளர் திரு.ராஜீவ் பன்சல், இந்திய அரசின் டிஜிட்டல் திட்டங்கள் பற்றியும் குறிப்பாக இந்தியா, மொபைல் துறையில் பெற்று வரும் வளர்ச்சி, அதன் இலக்கு மற்றும் தேவையான கட்டமைப்புகள் பற்றியும் பேசினார். 

மத்திய அரசின் ‘ஸ்டார்ட்-அப் இந்தியா’, ‘ஸ்டாண்ட் அப் இந்தியா’, ‘டிஜிட்டல் இந்தியா’ மற்றும் ‘மேக் இன் இந்தியா’ திட்டங்கள் பெயரளவில் மட்டுமில்லாமல் பல வளர்ச்சி நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ராஜீவ் பன்சல் கூறினார். மொபைல் துறையில், தயாரிப்பு, மென்பொருள், பாகங்கள், டெவலப்பர்ஸ் ஆகியோருக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகவும் கூறினார். 

இன்று நம் நாட்டில் 100 கோடி ஆயிரம் மொபைல் போன்கள் உள்ளன. அதில் 30 சதவீதம் ஸ்மார்ட்போன்கள் ஆகும். ஸ்மார்ட்போன்கள் இல்லாதோர் சுலபமாக இணையத்தை அணுகமுடிவதில்லை. ஆனால் மகிழ்ச்சி தகவல் என்னவென்றால், ஒவ்வொரு 100 புதிய போன்கள் கணக்கில் சேரும்போது அதில் 50 சதவீதம் ஸ்மார்ட்போனாக தற்போது உள்ளது. இதன் விளைவாக வரும் மூன்று ஆண்டிற்குள் நம்மிடம் 70 சதவீதம் ஸ்மார்ட்போன்களும் 30 சதவீதம் மட்டுமே சாதரண பீச்சர் போன்கள் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது இந்தியாவில் மொபைல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வழிவகுக்கும். 

சுமார் 150 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பீச்சர் போன்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது. அவை அசெம்பிள் செய்யப்பட்டவை. சீனா, ஜப்பான் மற்றும் இதர நாட்டின் சில பாகங்கள் பகிரப்பட்டு இந்தியாவில் இவை தயாரிக்கப்படுகிறது என்றார். 

“இன்னும் 3 ஆண்டுகளில், இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களின் எண்ணிக்கை 150 மில்லியனில் இருந்து 500 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கிறோம். இது தயாரிப்புத்துறை வளர்ச்சிக்கு வழிவகுத்து ஏற்றுமதியையும் அதிகரிக்கும்” என்றார்.

இன்று எல்லாமே ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தை நோக்கியே உள்ளது. அதனால் இந்த துறையில் உங்கள் பணியை தொடக்க நினைப்பவர்களுக்கு வெற்றி அடைய அதிக வாய்ப்புள்ளது.

இந்தியாவில் இன்று 45 கோடி மக்கள் இணைய தொடர்பு உள்ளவர்களாக உள்ளனர். அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் 10 கோடி மக்கள் புதிதாக இணைய தொடர்பு எடுத்துக்கொள்வதை பார்த்துவருகிறோம். இது மகிழ்ச்சிகரமான தகவல். இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளில் 80 கோடி மக்கள் இணைய தொடர்புடன் இருப்பார்கள் என்று கணிக்கிறோம். இது ஒரு மாபெரும் வளர்ச்சியாக இந்தியாவிற்கு இருக்கும் என்றார் அவர். 

அரசின் தொடர் திட்டங்களாலும், ஆப்டிக் ஃபைபர் முறையில் கிராமப்புறங்களில் இணைய தொடர்பை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 250 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகளில் ஆப்டிக் ஃபைபர் கொண்டு இணைய தொடர்பை கொடுக்க மத்திய அரசு ‘பாரத் நெட்’ திட்டத்தின் கீழ் செயல்பட்டுவருகிறது. இந்த பணிகள் டிசம்பர் 2018 க்குள் முடிவடையும் என்றும் தெரிவித்தார். 

கிராமப்புற பகுதிகளில் இணையம் சென்றடைந்தால் மட்டும் போதாது என்று சொன்ன அவர், இணையம் ஆங்கிலத்தில் மட்டும் இருக்கும்வரை இந்த திட்டங்களின் பலனை அடையமுடியாது என்றார். அதனால் தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் இந்திய மொழிகளில் கிடைக்கும் பணிகளில் தொழில்முனைவர்கள் செயல்பட்டால் இரு தரப்பினருக்கும் நல்ல ஒரு எதிர்காலம் இருக்கும் என்று கூறினார்.