விபத்தில் சிக்கிக்கொள்ளும் முகம் தெரியாதோருக்கு உதவிக்கரம் நீட்டும் பெட்ரோல் பன்க் ஊழியர் கிரன்!

0

பெங்களுருவில் உள்ள ஒரு பெட்ரோல் பன்கில் சேவையாளராக பணிபுரியும் கிரன், செய்திகளில் இடம்பெறும் அளவிற்கு செய்தது என்ன? 

அவர் தன்னை சுற்றியுள்ள மக்களுக்கு பல உதவிகளை புரிந்து வருகிறார். குறிப்பாக சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு முதல் உதவி செய்வது, ஆபத்தான இடங்களில் எச்சரிக்கை பலகை வைப்பது, தெரு விளக்குகள் வைப்பது, சாலையில் உள்ள குழிகளை மூடுவது என்று தன்னால் ஆன எல்லா சமூகப் பணிகளை செய்கிறார் கிரன். நம்மில் பலரும் நம் சொந்த வேலைகளில் பிசியாக இருக்கும் அதே உலகில் தான் கிரன் போன்றவர்களும் வாழ்கின்றனர் என்று நினைக்கையில் பெருமிதமாக உள்ளது. 

பட உதவி: தி நியூஸ் மினிட்
பட உதவி: தி நியூஸ் மினிட்

கிரனின் அப்பா ஒரு விவசாயி. மாண்டியா மாவட்டத்தில் உள்ள அனேகோலா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். தொடக்கத்தில் அவருக்கு முதலுதவி செய்வதற்கான சரியான வழிமுறைகள் தெரியாமல் இருந்தது. பின்னர் தன் பணியிடத்தில் மேற்கொண்ட பயிற்சிக்கு பின்னர் தன் பன்க் அருகில் உள்ளவர்களுக்கு உதவத் தொடங்கினார். 

கிரன் பி.காம் பட்டம் பெற்றவர். மாதம் 10 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறார். கடந்த ஆண்டு இவரது நற்செயலைப் பாராட்டி, பெங்களுருவில் நடைப்பெற்ற ‘நம்ம பெங்களுரு விருதுகள் விழாவில் ’தி ரைசிங் ஸ்டார்’ என்ற பட்டத்தை பெற்றார். கிரன் தான் பணிபுரியும் இடத்திலோ அல்லது அரசிடம் இருந்தோ தன் சேவைகளுக்கு எந்த உதவியையும் எதிர்ப்பார்க்கவில்லை. அவர் தன் சொந்த செலவில், தன்னுடைய ஓய்வு நேரத்தில் இந்த பணிகளை தன்னலமற்று செய்கிறார். 

தி நியூஸ் மினிட் பேட்டியில் கூறிய கிரன்,

”இந்த இடத்தில் நான் அதிக விபத்துகளை பார்த்துள்ளேன். அப்போது நானும் என்னுடன் பணி செய்பவர்களும் அவர்களுக்கு உதவ ஓடிச்செல்வோம். முதல் உதவி செய்து, வாகனத்தை ஓரமாக நிறுத்தி, அருகில் உள்ள  மருத்துவமனைக்கு, அடி பட்டவர்களை கொண்டு செல்வோம். நாங்கள் எல்லாரும் இதை சேர்ந்து செய்வோம், ஆனால் இந்த தொடர் விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தேன்,”என்றார்.

செப்டம்பர் 2015-ல் சாம்ராஜ்பெட் காவல் நிலையம் சென்று இது பற்றி பேசினார் கிரன். அந்த பகுதியில் நடந்த விபத்துகளின் புகைப்படங்களை உடன் எடுத்து சென்றார். காவல்துறையிடம் பேசி அந்த குறிப்பிட்ட இடத்தில் ஒரு எச்சரிக்கை பலகை வைக்க மன்றாடினார். வெற்றிகரமாக அவரின் கோரிக்கை நிறைவேறியது. 

“அன்று முதல் விபத்துகள் ஏதும் அங்கு நடக்கவில்லை. எச்சரிக்கை பலகையை பார்த்து கவனமாக ஓட்டுனர்கள் செல்வதால் யாருக்கும் விபத்து ஏற்படுவதில்லை.” 

பலரும் கிரனை அவரின் செயலுக்காக பாராட்டுகின்றனர். அவரது முயற்சியால் பலரது உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. 

“ஒரு வேளை உணவை தியாகம் செய்து நான் அலைந்து புகார் அளித்ததால் விபத்துப் பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. இதற்காக என்னை பலரும் பாராட்டுவதால் எனக்கு மேலும் பல பணிகள் செய்ய ஊக்கத்தை கொடுக்கிறது.” 

அதைத்தவிர, கிரன் தன்னுடன் பணி செய்யும் ஆறு நண்பர்களுடன் இணைந்து பல்வேறு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்களை செய்ய முடிவெடுத்துள்ளார். தங்கள் ஏரியாவை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அறியாதவர்களுக்கு உதவி தேவைப்படும் போது நாம் உதவவில்லை என்றால், நமக்கு ஒரு பிரச்சனை என்றால் யார் வந்து உதவுவார்கள் என்று யோசித்துப் பாருங்கள்!

கட்டுரை: Think Change India