இந்திய விமானப்படையில் கழிக்கப்பட்ட டகோட்டா விமானம், புதுப்பிக்கப்பட்டு இந்தியா வருகை!

3

1940ம் ஆண்டுகளில் இந்திய விமானப்படையில் இயக்கப்பட்டு வந்த டகோட்டா ரக டிசி-3 போக்குவரத்து விமானம் புதுப்பிக்கப்பட்டு இந்திய விமானப் படையின் பழங்கால விமானப்பிரிவில் விரைவில் சேர்க்கப்படவுள்ளது.

இந்த விமானம் 1988 வரை பயன்பாட்டிலிருந்தபோது பன்முக போக்குவரத்து விமானமாக செயல்பட்டது. கஷ்மீர் சண்டையின்போது, 1947 அக்டோபர் 27 அன்று முதலாவது சீக்கியப் படைப்பிரிவினரை ஸ்ரீநகருக்கு அழைத்துச் சென்ற முதலாவது டகோட்டா விமானத்தைக் கவுரவிக்கும் விதமாக, இந்த விமானத்திற்கு இந்திய விமானப்படை பதிவு எண் வழங்கியுள்ளது. 

1944ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த விமானம் பிரிட்டிஷ் ராயல் விமானப்படையில்  பணியாற்றியிருப்பதுடன், பல்வேறு விமான நிறுவனங்களாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.  2011ம் ஆண்டு உடைப்பதற்காக கழிக்கப்பட்ட நிலையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை) ராஜீவ் சந்திரசேகரால் வாங்கப்பட்டு, இங்கிலாந்தில் பழுதுநீக்கப்பட்டு, பறக்கும் நிலைக்குக் கொண்டுவரப்பட்டு இந்திய விமானப்படைக்கு பரிசாக அளிக்கப்பட்டது.

அதன்பின், இந்த விமானத்தைப் போக்குவரத்துக்கு உகந்த வகையில் நவீன வழிகாட்டும் இயந்திரங்களை பொருத்துவதற்காக லண்டனைச் சேர்ந்த ரீஃபிளைட் ஏர் ஒர்க்ஸ் நிறுவனத்துடன் இந்திய விமானப்படை ஒப்பந்தம் செய்து கொண்டது.

2018 பிப்ரவரி 13 ஆம் தேதி அன்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகரிடமிருந்து இந்த விமானத்தை விமானப்படைத் தளபதி பாரம்பரிய முறைப்படி பெற்றுக்கொண்டார்.  அனைத்துச் சோதனை ஓட்டங்களையும் வெற்றிகரமாக முடித்ததைத் தொடர்ந்து, டகோட்டா விமானம் இயல்புநிலைக்குக் கொண்டுவரப்பட்டு, 2018 ஏப்ரல் 17 அன்று இங்கிலாந்தில்  இருந்து தனது பயணத்தைத் தொடங்கியது. 

இந்திய விமானப்படை மற்றும் ரீஃபிளைட் ஏர் ஒர்க்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விமானிகளால் இந்தியாவிற்கு கொண்டுவரப்படுகிறது. இந்தியா வரும் வழியில் பிரான்ஸ், இத்தாலி, கிரீஸ், ஜோர்டான், சவுதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் ஓமன் நாடுகளில்  நிறுத்தப்பட்டு 2018 ஏப்ரல் 25 அன்று ஜாம்நகரை வந்தடைகிறது.

பாரம்பரியப் பெருமை வாய்ந்த இந்தப் போர்விமானத்தை அதன் புதிய இருப்பிடத்திற்கு வரவேற்று கவுரவிக்கும் விதமாக, ஹிண்டன் விமானப்படைத்தளத்தில் 2018 மே 4 அன்று, படையில் இணைக்கும் விழா நடைபெறவுள்ளது. இந்த விமானத்தை முதலில் தயாரித்த நிறுவனத்தின் பிரதிநிதிகள், இங்கிலாந்து தூதரக அதிகாரிகள் மற்றும் இந்த விமானத்தை முன்பு இயக்கிய இந்திய விமானப்படையின் முன்னாள் தளபதிகள் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்கிறார்கள்.

புது தில்லியில் உள்ள பாலம் விமானநிலையத்தில் 1988 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பழங்கால விமானக்கண்காட்சியில் இடம்பெறவுள்ள இந்த விமானம், புதுப்பிக்கப்பட்ட பிறகு உலகின் பல்வேறு நாடுகளில் பயணம் செய்து, தற்போதைய தலைமுறை விமானம் போன்று இந்தியா வந்தடைவது, இந்திய விமானப்படையின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த  நிகழ்வாகக் கருதப்படுகிறது.

தற்போது இந்தப் பழங்கால விமான அருங்காட்சியகத்தில் ஹோவர்டு மற்றும் டைகர்மோத் ரகங்களைச் சேர்ந்த பழங்கால விமானங்கள் இடம் பெற்றுள்ள நிலையில், இந்தியாவின்  பாரம்பரியத்தில் முக்கிய பங்கு வகித்த பல்வேறு ரகங்களைச் சேர்ந்த ராணுவ விமானங்களும் இணைக்கப்படவுள்ளன.