காந்தி முதல் மோடி வரை: கவனம் ஈர்க்கும் கதர்!

0

"நம்மிடம் 'காதி உத்வேகம்' இருப்பின், வாழ்க்கையின் ஒவ்வொரு படிநிலையிலும் நம்மை எளிமை சூழ்ந்து காணப்படும்." - மகாத்மா காந்தி

"நாம் கதர் பயன்பாட்டை கண்டிப்பாக பிரபலப்படுத்த வேண்டும். ஒரு கதர் தயாரிப்பையாவது வாங்குங்கள். ஒரு கதர் ஆடையை நீங்கள் வாங்குவதன் மூலம் ஒரு ஏழையின் வீட்டில் ஒளியை ஏற்றுகிறீர்கள்." - நரேந்திர மோடி.

நூற்பு ராட்டினத்துடனான மகாத்மா காந்தி சிலையை சுத்தப்படுத்தும் சிறுவன். படம்: கெட்டி இமேஜஸ்
நூற்பு ராட்டினத்துடனான மகாத்மா காந்தி சிலையை சுத்தப்படுத்தும் சிறுவன். படம்: கெட்டி இமேஜஸ்

கடந்த அக்டோபரில் விஜயதசமி நாளில், தனது 'மனதின் குரல்' ரேடியோ நிகழ்ச்சியின் முதல் பகுதியில்தான் கதர் பற்றி பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு பேசினார். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உரையில், அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்ட இந்த சேதி, கதர் இன்னமும் இந்திய உத்வேகத்தின் அடையாளமாகவேத் திகழ்கிறது என்பதை வெளிப்படுத்தியது.

பிரதமரின் இந்தக் கட்டளையின் விளைவாக, கதர் தயாரிப்புகளின் விற்பனை அதிவேகமானது என்கிறார் மத்திய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா. கதரை மேலும் பிரபலப்படுத்துவதில் மோடி அரசு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. இதன் முதற்கட்டமாக, இளம் தலைமுறையினரைக் கவரும் கதர் ஆடைகளை அறிமுகப்படுத்தியது நல்ல வரவேற்பைக் கிடைத்தது. குறிப்பாக, கதர் மற்றும் கிராமப்புற தொழில் ஆணையத்துடன் இணைந்து நடிகர் அமிதாப் பச்சன் கதருக்கு 'விளம்பரத் தூதர்' ஆகியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. அமிதாப் பச்சன் தனது பங்களிப்புக்காக பணம் எதுவும் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பருத்தி, கம்பளி அல்லது பட்டு முதலானவற்றால் நூற்கப்பட்ட கதர் ஆடைகள், இந்தியர்களிடம் உளவியல் ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவது ஏன்?

பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிராக அகிம்சையின் ஆயுதமாக கதரையும் ராட்டினத்தையும் மகாத்மா காந்தி முன்னிறுத்தியதில் இருந்தே இந்தக் கேள்விக்கான பதில் தொடங்குகிறது. பிரிட்டிஷரால் ஆலையில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு எதிராகவே கைநூற்பு ஆடைகளைக் கையாண்டார் காந்தி. இதனால், இந்தியர்களின் தன்னம்பிக்கை மற்றும் தேசப் பெருமையின் அடையாளமாகவே உருவெடுத்தது கதர். எனவேதான் 'இது சுதந்திர அடையாள ஆடை' என்றார்கள்.

சுதந்திரம் அடைந்த பிறகும், தலைவர்களும் அரசியல்வாதிகளும் தங்கள் தேசப்பற்றை பறைசாற்றுவதற்காக கதர் தயாரிப்புகளை ஓர் அடையாளமாகவே பயன்படுத்தி வந்தனர். இருபது ஆண்டுகளுக்கு முன்பு காந்தி தொப்பி என்பது ஒவ்வொரு காங்கிரஸாரிடமும் கட்டாய உடமையாகவே இருந்தது. இதன் தொடர்ச்சியாக, சமீபத்தில் காந்தி தொப்பி புதுவிதமாக மீண்டும் மக்களிடையே கவனம் ஈர்க்கத் தொடங்கியது. கடந்த 2011-ல் ஊழலுக்கு எதிரான இயக்கத்தின்போது அண்ணா ஹசாரேவும், அவரது ஆதரவாளர்களும்தான் இந்த கவன ஈர்ப்புக்கு காரணம். அண்ணா ஹசாரேவின் சீடரான அரவிந்த் கேஜ்ரிவால் அரசியல் ஈடுபடத் தொடங்கிய பிறகு, அவரது ஆம் ஆத்மி கட்சியினரின் அடையாளமாகவும் காந்தி தொப்பி திகழ்ந்தது. 2013 டெல்லி தேர்தலின்போது ஆம் ஆத்மி தொண்டர்களுக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதுதான் முரணான அம்சம். இது ஒரு புறம் இருக்க, 'பிரதமர் பதவிக்கு மோடி' என்ற பிரச்சாரத்தின்போதே பாஜகவினர் காவி நிற காந்தி தொப்பி அணிய ஆரம்பித்துவிட்டனர்.

இழைவுத்தன்மை குறைந்திருந்தாலும் கூட, பருத்தி மற்றும் பட்டுத் துணிகளில் நேர்த்தியானவற்றை பயன்படுத்திக்கொள்வதில் ஃபேஷன் துறை தீவிரம் காட்டி வருகிறது. 100 சதவீதம் இயற்கை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை, கோடையிலும் குளிரிலும் உடலுக்கு இதம் தருபவை, ஒவ்வொரு கதர் தயாரிப்புமே ஒவ்வொரு விதமானவை, வண்ணமயமானவை, எல்லாவற்றுக்கும் மேலாக விலை குறைந்தவை... இதுபோன்ற பல காரணங்களால் கதரில் புதிய டிசைன்களில் தங்கள் வாடிக்கையாளர்களுக்காக ஆடைகளை உருவாக்க ஆடை வடிமைப்பாளர்களுக்கு ஆர்வம் அதிகமாகிறது.

கடை ஒன்றில் தொங்கும் கதர் சேலைகள். | படம்: கெட்டி இமேஜஸ்
கடை ஒன்றில் தொங்கும் கதர் சேலைகள். | படம்: கெட்டி இமேஜஸ்

ஒரு சாதாரண துணியால் உருவானது என்று தெரியாத அளவுக்கு கதர் டிசைனர் ஆடைகள் அணிவகுக்கத் தொடங்கிவிட்டன. கதர் ஆடைகளை மிருதுவாக தோற்றமளிப்பதற்கு உரிய வழிமுறைகளை டிசைனர்கள் பின்பற்றுகின்றனர். சமீபத்தில் குஜராத் மாநில கதர் மற்றும் கிராமப்புற தொழில் வாரியமும், ஃபேஷன் டிசைன் கவுன்சில் ஆஃப் இந்தியாவும் ரோஹித் பால், அனாமிகா கண்ணா, ராஜேஷ் பிரதாப் சிங் முதலான முன்னணி ஆடை வடிவமைப்பாளர்களுடன் இணைந்து பல்வேறு டிசைன்களில் தயாரிக்கப்பட்ட கதர் ஆடைகளை காட்சிப்படுத்தின. பிரபல நடிகையும் ஃபேஷன் ஐகானுமான சோனம் கபூர் அணிந்த வசீகர கதர் ஆடை கவனத்தை ஈர்த்தது.

அதேவேளையில், இந்த ஃபேஷன் உலகில் கதர் ஆடைகளுக்கான மதிப்பு உயர்வதில் முக்கியப் பங்கு வகித்துள்ளது, 'மோடி குர்தா'. பக்கத்து வீட்டு தாத்தா முதல் பராக் ஒபாமா வரை அந்த குர்தாவில் ஒன்றை வாங்க விரும்புகிறார்கள். அரைக் கையுடன் நீளமான குர்தா சட்டைக்கு ரம்ஜான், பக்ரித் திருநாட்களில் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது என்கிறார்கள்.

ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது. கதர்... இனி வரும் ஆண்டுகளிலும் ஆடையாகவும் அடையாளமாகவும் தொடர்ந்து திகழ்வது உறுதி.

இணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்!

Stories by கீட்சவன்