"முதலீடு செய்ய இந்தியாவை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?"

0

இந்தியாவை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்று தென்கிழக்கு ஆசிய முதலீட்டாளர்கள் மூன்று பேரைப் பார்த்துக் கேட்டோம்.

சர்வதேச நிறுவனங்கள் தொடங்குவதற்கும் முதலீடு செய்வதற்கும் கிடைத்த புதிய இலக்கு இந்தியா என்பது யாருக்கும் தெரியாத ரகசியம் அல்ல. டெக்ஸ்பார்க்ஸ் 2015ல் தென்கிழக்கு ஆசியாவின் மூன்று முதலீட்டாளர்களை சந்தித்து, அவர்களிடம் இந்தியாவில் முதலீடு செய்வதற்குக் காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினோம். அவர்களில் எம்அண்ட்எஸ் பார்ட்னர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஹிரோ பென்னோஸ் மற்றும் பென்னெக்ஸ்ட் நிறுவனங்களைச் சேர்ந்த டெருஹைட் சாட்டோ ஆகிய இருவரும் இந்தியாவில் தலா 20 முதலீடுகளைச் செய்திருக்கின்றனர். மற்றொருவர் பி சக்ஸஸ் நிறுவனத்தின் நாதன் மிலார்ட். பி சக்ஸஸ் கொரியாவில் யுவர்ஸ்டோரி போல இயங்கும் தளம். இவர்கள் மூவருக்கும் இடையே உரையாடலை வழிநடத்தியவர் ஜிடபிள்யூஜி குரூப்பின் வல்லப்ராவ்.

அவர்கள் விவாதித்த விஷயங்களில் இருந்து…

வல்லப்: இந்தியாவுக்கு உங்களை எது கூட்டி வந்தது?

ஹிரோ: இந்தியச் சந்தை உண்மையில் கவர்ந்திழுக்கக் கூடியது. வரவுசெலவு மட்டத்தில் இதில் ஈடுபடவே முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இந்த ஆண்டு செயல்பாட்டைத் தீவிரப்படுத்த முடிவு செய்தேன். கடந்த 6 மாதத்தில் அமெரிக்கா, ஜப்பான், சீனாவுக்கு அடுத்து இந்தியாவில் 20 நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறேன்.

டெருஹைட்: நான் ஒரு இணைய தள தொழில் முனைவோர். 1997ல்தான் எனது முதல் நிறுவனத்தைத் தொடங்கினேன். அது ஒரு பணம் செலுத்தும் நிறுவனம். இரண்டாவது நிறுவனம் 1999ல் தொடங்கப்பட்டது. அது பொது. மூன்று வருடத்திற்கு முன்பு இந்தியாவில் முதலீடு செய்யத் தொடங்கினேன். இதுவரையில் 20 முதலீடுகளைச் செய்திருக்கிறேன். சந்தை மாதிரியில் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன். சந்தை ராஜா என்றால் பணம் செலுத்தல் ராணி. பணம் செலுத்தல் இல்லாமல் எந்த ஒரு வரவு செலவு மாதிரியையும் நீங்கள் கட்டமைக்க முடியாது.

நாதன்: இப்போதுதான் இந்தியாவில் முதலீடு செய்யத் தொடங்கியிருக்கிறேன். தென்கொரியாவில் முதலீடு இருக்கிறது. பி சக்சஸ் தென்கொரிய யுவர்ஸ்டோரி. ஆசிய தொழில் முனைவோர், தங்களின் வட கிழக்கு ஆசிய சந்தைகளை விரிவு படுத்துவதற்கு உதவி செய்ய முனைகிறேன்.

வல்லப்: இந்தியாவை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

நாதன்: நான் எப்போதுமே கீழே இறங்கி எனது வளர்ச்சியை நானே பார்க்க விரும்புகிறேன். இங்குள்ள மக்கள் தங்களை சர்வதேச அளவில் விரிவுபடுத்திக் கொள்ள விரும்பும் உற்சாகத்தைப் பார்க்க எனக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது.

ஹிரோ: இந்தியா மிகப்பெரியது. நிதி மற்றும் மொபைல் இன்டர்னெட்டில் தனிக்கவனம் செலுத்துகிறேன். இங்கு எனக்கு நிறைய உற்சாகமான நிகழ்வுகள் நடந்தன. இந்தியச் சந்தையில் ஆழமாக இறங்க முடிவு செய்தேன். சீனாவின் வளர்ச்சியைப் பார்த்து நான் வாயடைத்துப் போயிருக்கிறேன். அதே போன்ற ஒரு வளர்ச்சியை இந்தியாவுக்கும் கொண்டு வர விரும்புகிறேன்.

ட்ருஹைட்: நான் இந்தியாவை நேசிக்கிறேன். இங்கு எல்லாம் இருக்கிறது. சந்தை வாய்ப்புடன் கூடிய மக்கள் தொகை, தீர்வுகாண்பதற்குரிய ஏராளமான பிரச்சனைகள், நல்ல பொறியியல் வளர்ச்சி என்று எல்லாம் இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக இதயம் இருக்கிறது. இந்திய மக்கள் தொகை ஒரு நல்ல விஷயம்.

வல்லப்: இந்தியாவை தென்கிழக்கு ஆசியச் சந்தையோடு எப்படி ஒப்பிடுகிறீர்கள்?

ஹிரோ: பொருளாதாரத்திலும் சூழ்நிலையிலும் ஒரு பெரும் வேறுபாட்டைக் கொண்ட சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பல விஷயங்கள் ஒரே மாதிரியாக உள்ளன. வரலாற்றில் இருந்து நாம் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. உள்ளூர் நுகர்வோரையும் இங்குள்ள வர்த்தக நடவடிக்கையையும் படிக்க வேண்டியிருக்கிறது. இந்தியா ஒரு திறந்த வெளிச்சந்தை. மிகப்பரந்த அளவில் அடிப்படை ஒற்றுமைகள் உள்ளன.

டெருஹைட்: எனக்கு இங்குள்ள சந்தையில் 20 முதலீடுகள் இருக்கிறது. நான் அதே விஷயங்களைத்தான் இங்கும் பார்க்கிறேன். வேறுபாடுகள் பற்றிப் பேசினால் வேகத்தில் கொஞ்சம் வேறுபாடு இருக்கலாம். இந்தோனேஷியா ஒரு மிகப்பெரும் அலை. ஆனால் இந்தியா ஒரு சூறாவளி. ரிக்டர் அளவில் மாற்றங்கள் இருக்கும். நாங்கள் நிறுவன அதிபர்கள் என்ற முறையில் பரஸ்பரம் எங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறோம்.

நாதன்: இந்தியச் சந்தையில் வேலை செய்கிறோம். சந்தையிலும் ஸ்மார்ட்போனிலும் தான் எங்களது ஆர்வம். ஸ்மார்ட் போன் சந்தையில் கொரியா ஒரு சில ஆண்டுகள் முந்தி இருக்கிறது. சர்வதேச அளவில் நீங்கள் உங்கள் சேவையைக் கொண்டு செல்ல விரும்பினால், முதலில் நீங்கள் சோதித்துப் பார்க்க ஏற்ற சுவாரஸ்யமான சந்தை இது என்று சொல்வேன்.

வல்லப்: இந்தியாவில் தொடங்கப்படும் நிறுவனங்கள் வெளியிலும் பார்க்க வேண்டும் என நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?

ஹிரோ: எனக்கு கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு விதமான மனிதர்களோடு வேலை செய்த ஏராளமான அனுபவம் இருக்கிறது. எனது முதலீட்டுக் கொள்கையைப் பொருத்தவரையில் அதற்கு நான் எப்படி பங்காற்றுகிறேன் என்பதுதான் முக்கியம். ஒரு நல்ல நிறுவனத்தைக் கண்டறிந்தால், அதை நான் வெளியில் உள்ள எனது நண்பர்களுக்கும் சொல்வேன். என்னால் எந்த அளவுக்கு முடியுமோ அத்தனை வழிகளிலும் உதவுவேன்.

வல்லப்: நீங்கள் முதலீடு செய்யும் போது என்ன எதிர்பார்ப்பீர்கள்?

ஹிரோ: பின்டெக்கில் முதலீடு செய்கிறேன். பி2பி, பி2சி, மொபைல் ஆப் போன்ற வர்த்தகங்களில் முதலீடு செய்கிறேன். பி2பி வர்த்தகம் அமெரிக்கா அல்லது சீனாவிற்கு பொருத்தமாக இருக்கலாம். இப்போதெல்லாம் மக்கள் உள்ளூரைத்தான் நிறையத் தேடுகின்றனர்.

டெருஹைட்: ஒரு நிறுவனருடன் வேலை செய்வது எனக்கு பேரார்வமான விஷயம்.