இரண்டாவது சுற்று நிதி திரட்டியது சென்னை நிறுவனம் GoBumpr

1

சென்னையைச்சேர்ந்த ஆட்டோமொபைல் விற்பனைக்கு பிந்தைய சேவை மேடையான கோபம்பர்’ (GoBumpr) தனது தற்போதைய முதலீட்டாளர்களிடம் இருந்து, 6 லட்சம் டாலர் ப்ரீ சிரீஸ் ஏ நிதி திரட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.

கோபம்பர் இணைய நிறுவனம்; கார், பைக் உள்ளிட்ட வாகனங்களுக்கான சேவைகளை வழங்கும் டிஜிட்டல் மேடையாக விளங்குகிறது. 2015 ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐ.ஐ.எம் பட்டதாரிகளான கார்திக் வெங்கடேஸ்வரன், நந்தகுமார் ரவி மற்றும் சுந்தர் நடேசன் இணைந்து இந்நிறுவனத்தை துவக்கினர். 

நவீன மொபைல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பெரும்பாலும் ஒருங்கிணைக்கப்படாத சந்தையாக இருக்கும் வாகனங்களுக்கான விற்பனைக்கு பிந்தைய சேவையை இணையம் வாயிலாக அணுக இதன் மேடை உதவுகிறது. ஒர்க்ஷாப், மெக்கானிக், உள் அலங்கார அமைப்பு உள்ளிட்ட வாகனம் சார்ந்த சேவைகளை இணையம் மூலம் பெற இது வழி செய்கிறது.

வாகனம் சார்ந்த சேவைகளை அளிக்கும் நிறுவனங்களை தொகுத்து வழங்கும் திரட்டியாக இது விளங்குகிறது. வர்த்தகம் பெறும் ஒர்க்ஷாப்களின் எண்ணிக்கை மற்றும் தினசரி அளிக்கப்படும் சேவைகள் எண்ணிக்கை அடிப்படையில், இப்பிரிவில் மிகப்பெரிய இணைய மேடையாக நிறுவனம் விளங்குகிறது. தற்போது சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நிறுவனங்களில் செயல்பட்டு வருகிறது. மாதந்தோறும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சேவைகளை அளிக்கிறது. இவற்றின் மதிப்பு ரூ.3 கோடி என நிறுவனம் தெரிவிக்கிறது.

தனது வலைப்பின்னலில் இணைந்துள்ள ஒர்க்ஷாப் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பெற்றுத்தரும் வர்த்தகம் அடிப்படையில் நிறுவனம் கமிஷன் பெறுகிறது.

கோபம்பர் நிறுவனம் தனது தற்போதைய முதலீட்டாளர்களிடம் இருந்து 6 லட்சம் டாலர் ப்ரீ சிரீஸ் ஏ நிதியை பெற்றுள்ளது. தி சென்னை ஏஞ்சல்ஸ் (டிசிஏ), கெயிரட்சு பாரம் (Keiretsu Forum) மற்றும் தனி முதலீட்டாளர்களிடம் இருந்து இந்த நிதியை பெற்றுள்ளது. விநோத் குமார் தாசரி, (அசோக் லேலெண்ட் நிர்வாக இயக்குனர்) முன்னிலை வகித்த இந்த முதலீட்டு சுற்றில், சங்கர்.வி ( இயக்குனர், Acsys Investments ), ராமராஜ்.ஆர் (நிறுவன உறுப்பினர், Elevar Advisors), பிரியம்வதா பாலாஜி (லூகாஸ் இந்தியா சர்வீஸ் இயக்குனர்) உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். மெக்கின்சி சீனியர் பார்ட்னர் ரமேஷ் மங்கலேஸ்வரன் மற்றும் அசோக் லேலெண்ட் சி.எப்.ஓ கோபால் மகாதேவன் உள்ளிட்டோரும் இந்த சுற்றில் முதலீடு செய்துள்ளனர். முன்னதாக, நிறுவனம் 2017 ஜனவரியில் 42 லட்சம் டாலர் முதல்சுற்று நிதி திரட்டியது.

“கோபம்பர் நிறுவனம் தனது மேடை மூலம் இரண்டு முக்கிய மெட்ரோக்களில் வர்த்தகத்தை விரிவாக்கி, ஒர்க்ஷாப் உரிமையாளர்கள் மற்றும் வாகன உரிமையாளர்களுக்கு பயன் அளித்து வருகிறது. ஒர்க்ஷாப்களுக்கு தரமான வர்த்தகம் அளிப்பதோடு, பல்வேறு வருவாய் வழிகளை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் வாகன விற்பனைக்கு பிந்தைய சந்தையில் ஒட்டுமொத்த தொழில்நுட்ப மேடையாக உருவாகும் வாய்ப்பை பெற்றிருப்பது இந்த பிரிவில் வெற்றியாளராக உருவாவதை உணர்த்துகிறது. 

”சேவை தவிர, உதிரிபாகங்கள், டயர்கள், பயன்படுத்திய கார்கள் உள்ளிட்ட பிரிவுகளிலும் விரிவாக்கம் செய்திருப்பது நிறுவன வளர்ச்சிக்கு உதவியாக அமைந்துள்ளது. இந்த தொழில்நுட்ப மேடை துறைக்கு வரப்பிரசாதமாக அமையும்,“என இரண்டு சுற்றுகளிலும் முதலீடு செய்துள்ள, விநோத் குமார் தாசரி கூறுகிறார்.

“கோபம்பர் சேவை மேடையாக துவங்கினாலும், டயர்கள், பேட்டரிகள், உதிரிபாகங்கள் உள்ளிட்டவற்றுக்கான தொழில்நுட்ப இடைமுகமாக வளர்ந்துள்ளது. இதன் மூலம் கார் உரிமையாளர்களுக்கு அனைத்து சேவைகளுக்குமான ஓரிடமாக நிறுவனம் அமைந்துள்ளது. பிரிமியம் ஒர்க்ஷாப்பை முன்னிறுத்தும் விதம் மற்றும் 100 சதவீத கொள்ளலவு பூர்த்தி ஆகியவை பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வல்லவை,” என்று இரு சுற்றுகளிலும் முதலீடு செய்துள்ளவரும், மைய குழுவுக்கு ஆலோசனை அளிப்பவருமான மகாலிங்கம் (பாட்னர், டிஎஸ்.எம் குழுமம்) கூறுகிறார்.

“கடந்த 12 மாதங்களில் கோபம்பர் சேவைகளை சென்னை மற்றும் பெங்களூருவில் நிலை நிறுத்தி, விரிவாக்கியுள்ளோம். 2 பெரு நகரங்களில் கிடைத்த வெற்றியை அடுத்து மற்ற நகரங்களுக்கு விரிவாக்கம் செய்வதில் மட்டும் அல்ல, இதே துறையில் மற்ற பிரிவுகளிலும் விரிவாக்கம் செய்ய நம்பிக்கை பெற்றுள்ளோம். ஆட்டோமொபைல் துறை மிகவும் பழமையான துறைகளில் ஒன்றாக இருக்கும் நிலையில், கோபம்பரில் உள்ள நாங்களும், விற்பனைக்கு பிந்தைய சந்தையை டிஜிட்டல்மயமாக்கி, நுகர்வோருக்கான மிகவும் நம்பகமான ஆட்டோ வர்த்தக சேவை நிறுவனமாக விளங்கு விரும்புகிறோம்,” என்கிறார் நிறுவனர்களில் ஒருவரான கார்த்திக் வெங்கடேஸ்வரன்.

“ஏற்கனவே உற்பத்தியாளர்களிடம் உள்ள தரவுகள் மற்றும் கார் உரிமையாளர்களின் ஆவணங்கள் அடிப்படையில் கார் உரிமையாளர்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்த ஸ்மார்ட் சேவைகளை அளிக்க, செயற்கை நுண்ணறிவு சார்ந்த மேடையை உருவாக்குவதில் ஈடுபட்டிருக்கிறோம். வாகன உரிமையாளர்கள் மற்றும் ஒர்க்ஷாப்கள் பிரச்சனைகளை கண்டறிந்து சேவைகளை பெறுவதை பெருமளவு மாற்றியமைக்கும்,” என்கிறார் கோபம்பர் செயல்பாடுகளுக்கு பொறுப்பேற்கும் நந்தகுமார் ரவி.

வழக்கமான சேவை, பழுது, பாடி ஒர்க்ஸ், உள்ளிட்ட வாகன பணிகளுக்கான சேவைகளை பெறும் இடமாக கோபம்பர் திகழ்கிறது. நிறுவனம், வீடு தேடி வரும் கார் வாஷ் சேவை, இஞ்சின் ஆயில் மாற்று, டயர் மற்றும் பேட்டரி மாற்று ஆகிய சேவைகளையும் அளிக்கிறது. நிறுவனம் தனது மேடையில் 2500 க்கும் மேற்பட்ட ஒர்க்ஷாப்கள் மற்றும் 2,50,000 வாடிக்கையாளர்களுக்கு மேல் தனது மேடையில் பெற்றுள்ளது. இதன் மூலம் ஆட்டோமொபைல் சேவையை சிக்கல் இல்லாத அனுபவமாக மாற்றுகிறது. பேமெண்ட் வரை, சேவை தொடர்பான ரியல்டைம் தகவல்களை அளிக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு தானியங்கி நினைவூட்டல் வசதியையும் அளிக்கிறது. சென்னை மற்றும் பெங்களூருவில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம் விரைவில் மற்ற நகரங்களிலும் தனது சேவையை வழங்க உள்ளது.

தி சென்னை ஏஞ்சல்ஸ் (www.thechennaiangels.com) இந்தியாவின் முன்னணி ஏஞ்சல் முதலீட்டு குழுக்களில் ஒன்றாக விளங்குகிறது. 2007 ல் துவக்கப்பட்ட இக்குழு, வெற்றிகரமான தொழில்முனைவோர் மற்றும் வர்த்தக தலைவர்களை உள்ளடக்கி இருக்கிறது. 

GoBumpr பற்றிய விரிவான கட்டுரை  

Related Stories

Stories by cyber simman