அரசு அதிகாரிகளை உருவாக்கும் ரயில் நிலையம்!

போட்டித் தேர்வுகளுக்கு படிக்கும் சிறந்த இடமாக தேனி இரயில் நிலையம் மாறியுள்ளது. இந்த இரயில் நிலையத்தில் படித்த பலரும் அரசுத் துறையில் பணியாற்றி வருகின்றனர்.

1

கூட்ட நெரிசல், அவரசரமாக செல்லும் பயணிகள், வரிசைக் கட்டி வரும் இரயில்கள் என பரபரப்பாக இயங்கும் இரயில் நிலையங்களுக்கு மத்தியில், தேனி இரயில் நிலையம் சத்தமில்லாமல் அரசு அதிகாரிகளை உருவாக்கி வருகிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

காரணம் தேனிமாவட்டத்திற்கு இருந்த ஒரே இரயில் சேவையான, போடி - மதுரை மீட்டர்கேஜ் பாதையை அகல இரயில் பாதையாக மாற்றுவதற்காக, கடந்த 2010ம் ஆண்டு இரயில் சேவை நிறுத்தப்பட்டது. வெறிச்சோடிய தேனி இரயில் நிலையம் தற்போது போட்டித் தேர்வு எழுதுபவர்கள் படிக்கும் பயனுள்ள இடமாக மாறியுள்ளது. 

”அமைதியாகவும், இயற்கையான சூழ்நிலை இருப்பதால் காலை ஒன்பது மணிக்கே படிப்பதற்கு இங்கு வருவதாக” கூறுகிறார் கதிரேசன். 

இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து, குரூப் 1, இரயில்வே மற்றும் காவல்துறை என பல்வேறு அரசுத்துறை தேர்வு எழுதுபவர்கள் 80க்கும்மேற்பட்டோர், தேர்வுக்காக தங்களை தயார்படுத்தி வருகின்றனர் எனும் கதிரேசன் சந்தேகங்கள் குறித்து சக மாணவர்களிடையே உடனுக்குடன் கேட்டு அறிந்து கொள்வதால் தேர்வை எளிதாக சந்திக்க முடிவதாகவும் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.

காலை 9 மணிக்கு வருபவர்கள், வேறு எங்கும் செல்வது இல்லை. தேர்வுக்கு தயாராகும் இவர்கள், உணவு, தண்ணீருக்காகக் கூட அந்த இடத்தை விட்டு நகருவதில்லை. காலை வரும்போது, தேவையான உணவையும், தண்ணீரையும் கொண்டு வந்து, அங்கேயே சாப்பிட்டு விட்டு, படித்து முடித்து விட்டு, பொழுது சாய்ந்தவுடனே வீடு திரும்புகின்றனர். இப்படி இவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்வதால், அதற்கேற்ற பலனையும் அவர்கள் அனுபவித்து வருகின்றனர். 

தேனி இரயில் நிலையத்தில் படித்த தேர்வர்கள் 15க்கும் மேற்பட்டோர் தேர்வுகளில் தேர்ச்சிபெற்று, தற்போது அரசுத்துறைகளில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். 

“மது குடிப்பவர்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கும்பல்களின் நடமாட்டத்துடன் இருந்த இந்த இரயில் நிலையம் தற்போது அரசு அதிகாரிகளை உருவாக்கும் இடமாக மாறியுள்ளது,” என நெகிழ்கிறார் சுந்தர்.

பயணிகள் காத்திருக்கும் நடைமேடை, இருக்கை என எங்கு பார்த்தாலும் அரசுத் தேர்வு எழுதுபவர்கள் புத்தகமும் கையுமாக தீவிரமாக படித்துக்கொண்டிருப்பதை பார்த்தால் ஆச்சரியம் மட்டுமல்ல, இன்னும் பல அரசு அதிகாரிகள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் உணர முடிகிறது.

Related Stories

Stories by Jessica