வலிமையும் வலியும்: 'வாட்ஸ்ஆப்' காதலின் 10 முக்கிய குறிப்புகள்!

1

காதல்... உறுதுணைகளால் செதுக்கப்படும் உணர்வு. அகநானூற்றுத் தோழிகள் தொடங்கி புறா, தபால்காரர், வாண்டுகள் வரை தூதுவர்களாக வலம்வந்து பலப்படுத்திய அற்புத அனுபவம். இணையத்தின் ஆதிக்கம் தொடங்கியதும் இ-மெயில், சாட்டிங், ஆர்குட்டில் ஆரம்பித்து இப்போது ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப்-புக்கு வந்து நிற்கிறது இந்தத் தூதுப் படலம்.

சமூக வலைதள ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியதும், காதலர் தின காலங்களில் அன்பை பலப்படுத்தும் உத்திகள் ஒரு பக்கமும், ஆபத்தைச் சுட்டிக்காட்டும் விழிப்புணர்வுகள் இன்னொரு பக்கமும் கொட்டப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.

"தப்பு செய்யாத யாவரும் நல்லவர் அல்ல; தப்பு செய்ய வாய்ப்பு கிடைத்தும் அதில் நிதானமாய் இருப்பவரே நல்லவர்" என்பது பொன்மொழி. இன்று வாட்ஸ்ஆப் அளித்து வரும் சலுகைகளான உடனுக்குடன் தகவல் பகிர்வு, தகவல்களை தடயம் இன்றி அழிக்கும் வசதி, பிரைவசி போன்ற பல சலுகைகள் பலரை அன்பைவிட அந்தரங்கத்தைப் பகிரவே அதிகமாய் தூண்டுகிறது. அது உறவு ரீதியில் பேராபத்தை ஏற்படுத்தும் சூழலுக்கும் வகை செய்கிறது.

ஃபேஸ்புக்... காதலை ஆக்குகிறதா? அழிக்கிறதா? என்பன போன்ற பட்டிமன்றத் தலைப்புகள் எல்லாம் போரடிக்கும் விஷயம்தான். என்றாலும், தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கே உரிய சாதக - பாதகங்களை எடுத்துச் சொல்வதும், அதை அறிந்து சற்றே முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவதும் நல்லதுதானே!

ஆண்டுதோறும் காதலர் தினத்தை கொண்டாடுவதில் உங்களுக்கு எப்படி சலிப்பு வரவில்லையோ, அதுபோலவே புது விஷயங்களை அறிந்துகொண்டு இதுபோல கட்டுரைகளை எழுதித் தீர்ப்பதிலும் எங்களுக்கு இன்னும் சலிப்பு வரவில்லை. சரி, இதற்கு மேல் மொக்கை போடாமல் மேட்டருக்கு வரலாம்.

மிக எளிதாக பயன்படுத்தக் கூடிய வாட்ஸ்ஆப் எனும் ஒற்றை செயலி, நம் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது. காதலர்களுக்கு என்று எடுத்துக்கொண்டால், காதலை ஆராதிக்க உதவும் வாட்ஸ்ஆப், பல நேரங்களில் ஆப்பு வைக்கவும் தவறவில்லை.

வாட்ஸ்ஆப் மூலம் காதல் வளர்ப்போருக்காக தமிழ் யுவர்ஸ்டோரி, சிவகாசியைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் கே.ஏ.பத்மஜா பகிர்ந்த 10 முக்கியக் குறிப்புகள்:

காதலை வலுவாக்கும் வாட்ஸ்ஆப்

  • நம்மில் பலரும் இன்றும் கூச்ச சுபாவம், கோர்வையாய் பேசும் சாமர்த்தியம், தைரியமாய் முகத்தைப் பார்த்து காதலை சொல்ல முடியாத தயக்கம் கொண்டிருப்பதைப் பார்க்க முடியும். இத்தகைய அன்பாளர்கள் டெக்ஸ்ட் சாட்டில் நெருங்கிப் பேசி அன்பை வலுப்படுத்தவும் தைரியத்தையும் பெறவும் முடிகிறது.
  • ஸ்டேட்டஸ், டி.பி என்பது ஒருவரது மனநிலையின் பிரதிபலிப்பே. மேலும் தொடர்த்து ஒரு நபரின் வாழ்க்கைமுறையை அவர்கள் மாற்றும் டி.பி, ஸ்டேடஸைப் பார்த்தே கணிக்க முடியும். இது இரு மனங்களின் புரிதலுக்கு உதவும்.
  • எண்ணங்கள் பரிமாற்றம் என்பது இலகுவான ஸ்மைலிகளால் எளிதில் நெருங்கி வர உதவுகிறது.
  • எண்ணற்ற சொற்கள் தராத உணர்வின் வெளிப்பாடுகளை ஒற்றை இலக்க எண்ணிக்கையிலான ஸ்மைலிகள் வசீகரித்துவிடும். ஊடல் காதலுக்கு இன்பம். எந்த மாதிரியான ஊடல் - கோபங்களையும் ஒற்றை ஸ்மைலி கரைத்துவிட வாய்ப்புகள் மிகுதி.
  • காதலர்கள் தாங்கள் காணும் உலகை... அனுபவிக்கும் காட்சி, இசை, இடம் என அத்தனையையும் உலகின் எந்த மூலையில் இருக்கும் தனது காதலருக்கும் அனுப்பும்போது அவர்களின் பந்தம் பலப்பட்டு புரிதல் மேம்படுகிறது. ஒருவருக்கொருவர் ரசனையைப் பகிர்வது எளிதாகிறது.
  • தன்னை சுற்றியுள்ள சூழ்நிலை எந்த விதத்திலும் தங்கள் காதலை பகிரப் பாதிப்பதில்லை. உதாரணமாக, அடிக்கடி அனுப்பும் சின்ன சின்ன ஸ்மைலிகளும் 'உன்னை நினைத்து கொண்டே இருக்கின்றேன்' என்ற நெருக்கத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கிறது.
  • கட்டுப்பாட்டான, கண்டிப்பான சமுதாயத்தின் பார்வையில் இருந்து மறைந்து எந்த ஆணும் பெண்ணும் தகவல் பரிமாறிக்கொள்ளும் வசதி, உண்மைக் காதலுக்கு துணை நிற்கிறது.

காதலுக்கு வலி தரும் வாட்ஸ்ஆப்

  • யார் காதலி, யார் நண்பர் என்ற குழப்பத்திலேயே இருவரிடமும் பொதுவான எல்லை மீறிய பகிர்வு, சின்ன சின்ன ஒவ்வொரு செயலையும பகிர்ந்துகொள்ளும் போது சீக்கரத்தில் ஏற்பட்டுவிடக் கூடிய சலிப்பு, எதேச்சையாக சொல்ல மறந்த, மறைக்கப்பட்ட விஷயமாகக் கருதப்பட்டு எழும் மனக்கசப்புகள் முதலானவை வலிக்கு வழிவகுக்க வாய்ப்பு அதிகம்.
  • ஆன்லைனில் இருந்தும் ஊதா நிற டிக்கிற்குப் பின் உடனடியாக வராத பதில்கள், பிரைவேட் ஸ்பேஸ் கொடுக்கத் தெரியாத நிலைக்குத் தள்ளப்பட்டு வீண் வாக்குவாதத்தில் முடிகிறது. பல நேரங்களில் இருவரும் தங்கள் உண்மையான மனநிலையை வெளிப்படுத்தாமல் போலியாய் மாய உலகில் சிக்கி மாயமாகின்றனர். 'லாஸ்ட் சீன்' பல காதலை 'லாஸ்ட்டு சீன்' ஆக்குகிறது.
  • அடிக்கடி எதிர்பார்க்கும் கவனிப்பும், விசாரிப்பும் கிடைக்காமல் போகும்போது ஏற்படும் ஏமாற்றம், காதல் மீது சந்தேகம் கொள்வதற்கு மாறாக, தான் காதலித்த நபரின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கையின்மையை கொண்டுவரும் பட்சத்தில், காதலை விட கண்காணிப்பே அதிகம் ஆகி, இம்சையும் பாதகமும் வளர்கிறது. 

கடைசியில் ஒன்று... இது, வழக்கம்போல எல்லா விதமான தகவல் பரிமாற்றத் தொழில்நுட்பத்திலும் பாதகமாகச் சொல்லப்படும் பாரம்பரியமான விழிப்புணர்வு வழிகாட்டுதல்தான். ஆனால், என்றும் முக்கியத்துவத்தை இழக்காத ஒன்று. ஆம், இந்த செல்ஃபி வீடியோ - புகைப்பட யுகத்தில் உறவுகள் மீது நம்பிக்கையைப் பலப்படுத்தும் வாட்ஸ்ஆப்-பை நம்பி, அந்தரங்கமான படங்களையும் வீடியோவையும் பகிராதீர்கள். உங்கள் காதலரையும் மீறி, அந்த அந்தரங்கம் அம்பலமாகும் சாத்தியம் அதிகம் என்ற எச்சரிக்கை உணர்வை மறக்காதீர்கள்.

"அன்பைப் பலப்படுத்துவதில் மிக எளிதாகக் கையாளக் கூடிய சக்திவாய்ந்த செயலியாக வாட்ஸ்ஆப் திகழ்வது வரம் என்று வைத்துக்கொண்டால், மனித உறவுகளில் மகத்துவம் மிக்க "லவ் யூ" "மிஸ் யூ" முதலான வாக்கியங்கள் ஓட்டைக் குழாயில் பீறிடும் தண்ணீர் போல் கையாளப்படுவதால், அந்தச் சொற்கள் தமக்கே உரிய மேன்மையும் வலிமையும் இழப்பது கவலைக்குரியது" என்கிறார் உளவியல் ஆலோசகர் ஏ.கே.பத்மஜா.

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்இது போன்ற காதல் மற்றும் டேட்டிங் தொடர்பு கட்டுரைகள்:

2010 முதல் பலரை காதலில் விழவைத்த இந்திய டேட்டிங் தளம்!

மெய்நிகர் உலகில் டேட்டிங் அனுபவம் அளிக்கும் 'ஃபிலெர்ச்சுவல் ரியாலிட்டி' கேம்

இணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்!

Stories by கீட்சவன்