ஃபார்ச்சூன் இந்தியா ’40 அண்டர் 40’ தொழில்முனைவோர் பட்டியலில் தன்யா ராஜேந்திரன்!

தென்னிந்திய செய்திகளை நொடிக்கு நொடி தந்து வளர்ச்சி கண்டு  வரும் ’தி நியூஸ் மினிட்’ எனும் ஆன்லைன் செய்தித் தளத்தின் இணை நிறுவனர் தன்யா ராஜேந்திரன்.

0

ஃபார்ச்சூன் இந்தியா பத்தரிக்கை வெளியிட்ட 40 அண்டர் 40 தொழில்முனைவர்கள் பட்டியலில் ’தி நியூஸ் மினிட்’ என்னும் ஆன்லைன் செய்தி ஊடகத்தை துவங்கிய தன்யா ராஜேந்திரன் இடம்பெற்றுள்ளார்.

தி நியூஸ் மினிட் இணை நிறுவனர் தன்யா ராஜேந்திரன்
தி நியூஸ் மினிட் இணை நிறுவனர் தன்யா ராஜேந்திரன்

36 வயதான தன்யா ராஜேந்திரன் தன் கணவருடன் இணைந்து 2014-ல் இந்த ஆனலைன் செய்தி ஊடகத்தை துவங்கினார். இவரின் ஊடகம் ஐந்து தென்னிந்திய மாநில செய்திகளில் அதிக கவனம் செலுத்துகிறது. இங்கு பல செய்தி ஊடகங்கள் இருந்தாலும் தங்களின் குரலை தனித்து உயர்த்திக் காட்டுகிறது தி நியூஸ் மினிட்.

“தென்னிந்திய மாநிலச் செய்திகளை வழங்கும் ஓர் தொடக்க ஊடகத்திற்கு வாசகர்கள் இடத்தில் இவ்வளவு வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்கிறார் தன்யா

பத்திரைகயாளராய் தன் பயணத்தைத் துவங்கிய இவருக்கு செய்தித்துறை மீது எப்போதும் அதிக ஆர்வம் இருந்தது. அதாவது தான் கர்பமாக இருந்த போதிலும் கடைசி நிமிடம் வரை பணியில் இருந்து, குழந்தை பிறந்தபின் வெறும் மூன்று மாத ஓய்வுக்கு பின் மீண்டும் தன் பணியை துவங்கிவிட்டார் தன்யா.

“பத்திரிக்கை துறை என்பது ஒரு பணி அல்ல, தேவையின் போது அதிலிருந்து விலகிக் கொண்டு மீண்டும் துவங்க...” என்றார் ஃபார்ச்சூன் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில்.

2014-ல் தன்யா தன் கணவருடன் சேர்ந்து 60 லட்ச ரூபாய் முதலீட்டுடன் ஓர் சிறிய அறையில் இந்த ஊடகத்தை துவங்கினர். தொடக்கத்தில் ஊடக மையங்களில் இருந்து செய்திகளை பெற்று தங்கள் உள்ளமைப்புடன் செய்திகளை தந்தனர். வெளியில் இருந்து வரும் செய்தியை மட்டும் நம்பி இயங்க முடியாது என்பதால் 2014 இறுதியில் சுயமாக செய்திகளை சேகரித்து தரத் துவங்கினர்.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேஷ் மற்றும் கர்நாடகா மாநிலச் செய்திகளுக்கு அதிக கவனம் செலுத்தி செய்திகளை தந்தனர். அப்பொழுது ஒவ்வொரு மாதமும் 50,000 புது பார்வையாளர்களை இவர்கள் ஊடகம் கண்டது. தற்பொழுது மாதம் 6.5 மில்லியனாக உயர்ந்துள்ளது என்கின்றனர்.

“இதுவரை எந்த ஊடக அமைப்பின் பெரும் பதவியிலும் நான் இருந்ததில்லை, எந்த தைரியத்தில் இதை துவங்கினேன் என்றும் தெரியவில்லை. ஆனால் இப்பொழுது தி நியூஸ் மினிட்டின் வளர்ச்சியை பார்க்கும்போது சில துணிந்த செயல்கள் வெற்றியை தரும் என்ற நம்பிக்கை வந்துள்ளது,” என்கிறார் தன்யா.

தி நியூஸ் மினிட்; அரசியல் செய்திகள், தற்போதய நிகழ்வுகள் என சகல செய்திகளையும் வழங்குகின்றனர். முக்கியமாக 2014-ல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெங்களூர் சிறை தண்டனை பெற்ற செய்தி மூலம் மக்கள் இவர்களை கவனிக்கத்தொடங்கினர்.

சொந்தமாக இந்த ஊடகத்தை துவங்கும் முன் தன்யா ’டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சியின் தென் இந்திய தலைமை செய்தியாளராக  பணிபுரிந்தார். அதன் மூலம் அவருக்குக் கிடைத்த தொடர்புகள் தற்பொழுது தி நியுஸ் மினிட்டுக்கு முதலீட்டாளர்களை தேடி தந்துள்ளது. 

நவம்பர் 2015-ல் Quintillion ஊடகம் இவர்கள் நிறுவனத்தில் 6 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. இன்னும் முதலீட்டாளர்களை பெற பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருப்பதாக ஃபார்ச்சூன் இதழில் தெரவித்திருந்தார் தன்யா.

கணவர் விக்னேஷ் உடன் தன்யா
கணவர் விக்னேஷ் உடன் தன்யா

பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ பத்திரிகையாளர் ஆக வேண்டும் என்பது பற்றிய எந்த சிந்தனையும் இவருக்கு இல்லை. கல்லூரி முடித்தததும் 2002-ல் சென்னை ’ஆசிய இதழியல் கல்லூரியில்’ மேல் படிப்புக்காக அவர் இதழியல் துறையை தேர்ந்தெடுத்த பின்னர் பத்திரிகையாளர் வாழ்க்கைக்கு அறிமுகம் ஆனார். 

படிப்பு முடிந்த பின் சில மலையாள செய்தி சேனல்களில் பணிபுரிந்த பின் சென்னை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரசில் ரிப்போர்டராகச் சேர்ந்தார். ஓர் ஆண்டு பத்திரிகையில் பணிபுரிந்த இவர் தொலைக்காட்சி செய்தி ஊடகம் தான் இவருக்கான இடம் என்று தன் டிவி பயணத்தை டைம்ஸ் நவ்வில் தொடங்கினார். 2005 முதல் 2013 வரை அங்கு பணிபுரிந்தார்.

“டைம்ஸ் நவ்வில் பணிபுரிந்த போது அறிமுகமான மூத்த பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியணின் அறிவுரையின் பேரிலேயே சொந்தமாக செய்தி ஊடகத்தை துவங்க முனைந்தேன்,” என்கிறார். 

அதன் பின் வந்ததே தி நியுஸ் மினிட். தற்பொழுது 30-க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் இந்நிறுவனம் இயங்கி வருகிறது. ஐந்து மாநிலங்களிலும் இவர்களின் செய்தியாளர்கள் இயங்கி வருகின்றனர். ஒரு இணை நிறுவனராக, வளர்ந்து வரும் பத்திரிகையாளர்களை ஊக்குவிக்கும் தன்யா, வருங்காலத்தில் பிராந்திய மொழிகளிலும் நியூஸ் மினிட்டை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

கட்டுரையாளர்: மஹ்மூதா நெளஷின்