ஐஸ்கிரீம் மீது குறையா மவுசு: சென்னையில் குல்ஃபி ப்ராண்டை உருவாக்கிய நிறுவனம்!

0

நவீன் குமார், கார்த்திக் சுகுமாரன், கார்த்திகேயன், மிதிலேஷ் குமார் ஆகிய நான்கு நிறுவனர்களும் இணைந்து Green Castle Food and Beverages என்கிற நிறுவனத்தை சென்னையில் நிறுவினர். இந்நிறுவனம் 24 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டுகிறது.

ஐஸ்கிரீம் என்பது உலகம் முழுவதும் அனைவராலும் விரும்பப்படும் ஒன்றாகும். இதன் இந்திய வடிவம்தான் சற்று அடர்த்தியாக க்ரீம் போன்று இருக்கும் குல்ஃபி. இது பல்வேறு சுவைகளில் கிடைக்கிறது. சென்னையில் உள்ள நான்கு பொறியாளர்கள் ஒன்றிணைந்து வணிக முயற்சியில் ஈடுபட திட்டமிட்டபோது நகரில் பல்வேறு குல்ஃபி அவுட்லெட் இருப்பதைக் கண்டு இந்த வணிகத்தில் ஈடுபட தீர்மானித்தனர்.

”மக்கள் குல்ஃபியை விரும்புவதைக் கண்டோம். இரவு நேரங்களிலும் மழை நாட்களிலும்கூட வெளியே சென்று குல்ஃபி சாப்பிடுகின்றனர். வரண்ட வானிலை காரணமாக இது சிறப்பாக விற்பனையாகவில்லை. சென்னையில் எல்லா நேரத்திலும் எல்லா இடங்களிலும் விற்பனையாகிறது,” என்றார் நவீன்குமார். 

இதுதான் 2017-ம் ஆண்டு Green Castle Food and Beverages உருவாகக் காரணமாக அமைந்தது. இங்கு ’Boozo Kulfi’ என்கிற ப்ராண்டின்கீழ் குல்ஃபி விற்பனை செய்யப்படுகிறது. ஓராண்டிற்குள்ளாகவே 24 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவிக்கிறது. 

எஸ்எம்பி ஸ்டோரி உடனான உரையாடலில் இருந்து சில குறிப்புகள்:

எஸ்எம்பி ஸ்டோரி: நிறுவனம் ஓராண்டிற்குள் எவ்வாறு 24 லட்ச ரூபாய் வருவாயை ஈட்டியது?

நவீன்குமார்: 25 வயதான கார்த்திக், கார்த்திகேயன், மிதிலேஷ் உட்பட நாங்கள் நால்வரும் ஒன்றாக பொறியியல் படிப்பை முடித்தோம். மார்கெட்டிங், நிதி, மனிதவளம் என நாங்கள் நால்வரும் வெவ்வேறு பிரிவுகளில் பணிபுரிந்து வந்த நிலையில் எங்கள் அனுபவங்கள் அனைத்தையும் ஒரே வணிகத்தில் ஒன்றிணைக்க விரும்பினோம். குல்ஃபிக்கு அதிக தேவை இருப்பதைக் கண்டதும் SME துறையை அணுக தீர்மானித்தோம்.

வளரந்து வரும் தொழில்முனைவோருக்கு உதவும் வகையிலான பல்வேறு அரசு வாய்ப்புகள் மற்றும் கொள்கைகள் குறித்து துறையினர் எங்களுக்கு விவரித்தனர். வணிகத்தைத் துவங்க ஒவ்வொருவரும் 10,000 ரூபாய் பங்களித்தோம். பின்னர் கூடுதலாக ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தோம். 26 லட்ச ரூபாய் லோன் வாங்கினோம். தொழில்நுட்பம் மற்றும் நிதி சார்ந்த நிபுணத்துவத்துடன் குல்ஃபி உற்பத்தி செய்து பூங்கா, கடற்கரை போன்ற பொது இடங்களில் விற்பனை செய்யத் துவங்கினோம். அதிகளவிலான குல்ஃபி விற்பனையானது.

எஸ்எம்பி ஸ்டோரி: இதுவரையிலான உங்களது பயணத்தில் முக்கிய மைல்கல்லாக எதைக் கருதுகிறீர்கள்?

நவீன் குமார்: ஆரம்பத்தில் சுமார் 80 சதுர அடி இடத்தில் குல்ஃபி தயாரிக்கத் துவங்கினோம். பின்னர் 1,000 சதுர அடி கொண்ட புதிய தொழிற்சாலைக்கு மாறினோம். இதை எங்களது முக்கிய மைல்கல்களில் ஒன்றாகக் கருதுகிறோம். அடுத்ததாக வணிகத்திற்கான கடன் தொகைக்கு ஒப்புதல் கிடைத்தது மிகப்பெரிய மைல்கல்லாகும். எங்களது உத்யோக் ஆதார் சான்றிதழை கடன் விண்ணப்பத்துடன் இணைத்ததால் எளிதாக கடனுக்கு ஒப்புதல் கிடைத்தது.

எங்களது நோக்கத்தை விவரித்த பிறகு கனரா வங்கி  எங்களுக்கு 26 லட்ச ரூபாய் கடன் வழங்கியது. எங்களது தொழிற்சாலைகளுக்கு இயந்திரங்களை வாங்கியது எங்களது பயணத்தில் மற்றுமொறு மைல்கல்லாகும். இதன் மூலம் உற்பத்தி அதிகரித்தது.

எஸ்எம்பி ஸ்டோரி: இந்தத் துறையின் சந்தை அளவு என்ன? போட்டியாளர்களிடம் இருந்து எவ்வாறு வேறுபட்டிருக்கிறீர்கள்?

நவீன் குமார்: ஐஸ்கிரீம் மற்றும் குல்ஃபி இடையே இருக்கும் மெல்லிய வித்தியாசம் மெல்ல மறைந்து வருகிறது. இதனால் இந்தத் துறை சார்ந்த சந்தை அளவு சுமார் 5,000 கோடி ரூபாய் என கருதுகிறோம். 

நாங்கள் இன்னமும் புதிதாக செயல்படுபவர்கள் என்பதால் Boozo Kulfi தயாரிப்புகளை சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு நேரடியாக விநியோகம் செய்து எங்களை வேறுபடுத்திக் காட்டுகிறோம். எங்களது போட்டியாளர்கள் பலர் தங்களது சொந்த அவுட்லெட் மூலம் விற்பனை செய்வதிலேயே கவனம் செலுத்துகின்றனர். நாங்கள் இந்த முறையை பின்பற்றுவதால் வாடிக்கையாளர்களை அவர்களது இருப்பிடத்திலேயே சென்றடையமுடிகிறது. எங்களது போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் எங்களது விலை மலிவானதாகும்.

எஸ்எம்பி ஸ்டோரி: வணிகத்தை நிலைப்படுத்துவதிலும் வளர்ச்சியடைவதிலும் நீங்கள் சந்தித்த சவால்கள் என்ன?

நவீன் குமார்: முதல் தலைமுறை தொழில்முனைவோர் என்பதால் பேச்சுவார்த்தை நடத்துதல், நிதி சார்ந்த புரிதல், வரி என வணிக செயல்பாடுகளைப் புரிந்துகொள்வதில் பல்வேறு சவால்களை சந்தித்தோம். பயிற்சி பட்டறைகள், தொழில்முனைவுத் திறன் மற்றும் நிதி தொடர்பான பயிற்சிகள் போன்றவற்றின் மூலம் எங்களைப் போன்ற வளர்ந்து வரும் தொழில்முனைவோர் பயனடைவர் என கருதுகிறோம்.

எஸ்எம்பி ஸ்டோரி: விற்பனையாளர் மேலாண்மை, பணப் புழக்க மேலாண்மை, மூலதன மேலாண்மை போன்ற முக்கிய பகுதிகளை எவ்வாறு நிர்வகிக்கிறீர்கள்?

நவீன் குமார்: எங்களது சப்ளையர்களுடனான அனைத்து செயல்பாடுகளையும் நேர்மையாக கையாள்கிறோம். நாங்கள் கொடுக்கும் வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றுகிறோம். இதனால் அவர்களுடனான எங்களது உறவுமுறை நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. இந்த நம்பிக்கையே வணிக உறவுமுறை மேம்படுவதற்கான அடித்தளமாகும். இதைக் கொண்டே அவர்கள் நாங்கள் செயல்படும் முறையைப் புரிந்துகொண்டு எங்கள் பரிவர்த்தனைகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். 

எங்களது லாபத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதத்தைத் தொடர்ந்து காப்பு நிதியாக வைக்கிறோம். தயாரிப்பை கடனாக வழங்குவதைத் தவிர்க்கிறோம். வங்கியில் பணத்தை தினமும் வைப்புத்தொகையாக செலுத்துகிறோம். இது வங்கியாளர்களுடன் நம்பிக்கையை வளர்க்கிறது.

எஸ்எம்பி ஸ்டோரி: வாடிக்கையாளரை கையகப்படுத்த நீங்கள் பின்பற்றும் உத்தி என்ன?

நவீன்குமார்: பிராண்ட் அங்கீகாரம் மற்றும் மதிப்பை உருவாக்க வாடிக்கையாளர்களை நேரடியாக தொடர்புகொள்வதில் கவனம் செலுத்துகிறோம். இதை சாத்தியப்படுத்த அதிக மக்கள்தொகை இருக்கும் பகுதிகள், நிகழ்வுகள், வர்த்தக மையங்கள் போன்றவற்றில் ஸ்டால் அமைக்கிறோம். எங்களது செயல்பாடுகளை ஊக்குவிக்கவும் சமூக வலைதளங்களில் தொடர்பை ஏற்படுத்தவும் டிஜிட்டல் மீடியாவையும் பயன்படுத்திக்கொள்கிறோம்.

எஸ்எம்பி ஸ்டோரி: உங்களது செயல்பாடுகள் வாடிக்கையாளர்களிடமும் சமூகத்திலும் ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன?

நவீன்குமார்: சந்தையில் அதிக வாய்ப்புகள் இருப்பதை பால் பொருட்கள் உற்பத்தியாளர்களாக எங்களால் உணரமுடிகிறது. எங்களது தயாரிப்பை சுவைத்த வாடிக்கையாளர்களிம் மகிழ்ச்சியைக் காணமுடிகிறது. இது அனைத்து நிலையில் வருவாய் ஈட்டுபவர்களுக்கும் பொருந்தும். பெரிய அளவில் செயல்படுகையில் சந்தையில் இருக்கும் அதிகளவிலான வாய்ப்பினைப் பயன்படுத்தி எங்கள் தரப்பில் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கமுடியும். மேலும் நாங்கள் செலுத்தும் வரி எங்களுக்கு மன நிறைவை அளிக்கிறது. ஏனெனில் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்குவதில் நாங்களும் பங்களிக்கவேண்டும் என்பதை நாங்கள் அறிவோம்.

எஸ்எம்பி ஸ்டோரி: இதே பிரிவில் வணிகத்தில் ஈடுபட விரும்புவோருக்கு நீங்கள் வழங்கும் அறிவுரை என்ன?

நவீன்குமார்: நேர்மறையான அணுகுமுறை, விடாமுயற்சி, முன்னேறுவதற்கான தொடர் முயற்சி போன்றவையே தொழில்முனைவில் முக்கிய அம்சமாகும். தெளிவான அளவிடத்தக்க இலக்கை நிர்ணயித்து அதை எட்டுவதற்கு ஒட்டுமொத்த ஆற்றலையும் பயன்படுத்தவும். பயம் உங்களுக்கு தடையாக இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். தனிப்பட்ட வளர்ச்சிக்குத் தேவையான நேரம், ஆற்றல், வளம் போன்றவற்றை ஒதுக்கவேண்டியதும் அவசியம்.

எஸ்எம்பி ஸ்டோரி: உங்களது வணிகம் தொடர்பான எதிர்கால கனவு என்ன?

நவீன்குமார்: பால் துறையில் முக்கிய நிறுவனமாக செயல்பட விரும்புகிறோம். அதிகம் பேரை பணியிலமர்த்தியும் வரியை முறையாக செலுத்தியும் நாட்டின் வளர்ச்சியில் பங்களிக்க விரும்புகிறோம் எங்களது பங்குகளை விற்பனை செய்து அனைத்து வாடிக்கையாளர்களையும் நிறுவனத்தின் பங்குதாரர்களாக மாற்ற விரும்புகிறோம்.

ஆங்கில கட்டுரையாளர் : ரிஷப் மன்சூர் | தமிழில் ஸ்ரீவித்யா