10 ரூபாயில் இனி கலக்கமின்றி, ஆரோக்கியமாக பொது கழிப்பிடங்களில் பெண்கள் சிறுநீர் கழிக்கலாம்...

0

இந்தியாவில் பொது இடத்தில் உள்ள கழிப்பறைகளை பயன்படுத்தவேண்டும் என்ற எண்ணம் வந்தாலே நம் அனைவருக்கு தலையே சுற்றிவிடும். அங்குள்ள நாற்றம், அசுத்தம், தேங்கிக்கிடக்கும் நீர் இவற்றை நினைத்தாலே நம் வயிற்றை பிசைந்து வாந்தி வரும் அளவிற்கு செய்துவிடும் பயமே பாதி. சாலைப் பயணம் மேற்கொள்ளும் பலரும் சந்திக்கும் சவால் இது, குறிப்பாக பெண்களுக்கு. 

ஆனால் இந்த அறுவெறுப்புக்கு பை-பை சொல்லும் நேரம் தற்போது வந்துவிட்டது. ஐஐடி டெல்லி மாணவர்கள் இருவர் சேர்ந்து Sanfe’ என்ற பயோ-ப்ரெண்டிலி கழிப்பறை கருவியை உருவாக்கியுள்ளனர். இந்திய பெண்கள் இனி கவலையின்றி பொது கழிப்பிடங்களில், ரயிலில் அல்லது பொது இடங்களில் கூட இதனை கொண்டு ஆரோக்கியமாக சிறுநீர்  கழிக்கலாம்.

ஹேரி செஹ்ராவத் மற்றும் அர்சித் அகர்வால் ஆகிய இரு ஐஐடி டெல்லி மாணவர்களே Sanfe உருவாகக் காரணமானவர்கள். இவர்கள் உருவாக்கியுள்ள கருவி மூலம் பெண்கள் நின்று கொண்டே சிறுநீர் கழிக்கமுடியும். இது உடற்பகுதி ஆரோக்கியமற்ற கழிப்பிட சீட்டில் படாமலே சிறுநீர் கழிக்க உதவுகிறதால், தொற்றுக்கள் பரவுவதையும் தடுக்கிறது. Sanfe- Sanitation for Female அதாவது பெண்களுக்கான சுகாதாரம் என்று பொருள்.

இவ்வளவு வசதியா இருக்கே இதன் விலை என்ன என்று தானே கேக்கறீங்க? கவலையே வேணாம், ஒரு கருவியின் விலை  வெறும் 10 ரூபாய் தான் .  இதுவே உலகின் மலிவான சுற்றுச்சூழலுக்கு உகந்த சிறுநீர் கழிக்கும் கருவி. இதை பெண்கள் சுலபமாக பைக்குள் வைத்து கொண்டு செல்லலாம், பயன்படுத்தியபின் தூக்கி எரிந்து விடலாம். 

ஹேரியும் அர்சித்தும் பல பொது கழிப்பிடங்களை பார்வையிட்டப்பின் அதிலுள்ள பிரச்சனைகள், ஆரோக்கியமின்மை என எல்லாவற்றை ஆராய்ந்த பின்னர் இதை வடிவமைத்துள்ளனர். 

அவர்கள் ஆய்வின் படி, 71 சதவீத பொது கழிப்பிடங்கள் அசுத்தமாக, பெண்களுக்கு ஆரோக்கியக் கேடு விளைவிக்கும் வகையில் இருப்பதாக தெரிய வந்தது. 

“பெண்கள் குறிப்பாக சிறுநீர் பாதை தொற்றுநோய்கள் வர அதிக வாய்ப்புள்ளவர்கள். இது சிலசமயம் ஆபாய நோய்களுக்கு வழி செய்கிறது. WHO அறிக்கையின் படி, இரண்டில் ஒரு பெண்ணுக்கு சிறுநீர் வழிபாதை தொற்றுக்கள் இருப்பதாக தெரிவிக்கிறது. இதற்கு முக்கியக் காரணமே அசுத்தமான கழிப்பறைகள், அல்லது நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கிவைத்தல் ஆகும். இது சிறுநீரக கற்கள் வரவும், சிறுநீர்ப்பை தசை வலுவிழக்கவும் வழி செய்யும்,” என்கிறார் ஹேரி. 

இவையெல்லாம் கருத்தில் கொண்டே Sanfe கருவியை பயோ-டிக்ரேடபல் பேப்பர் கொண்டு தயாரித்துள்ளனர். இதை சுமார் 20 ஆயிரம் பெண்கள் மத்தியில் இவர்கள் சோதனை செய்தும் விட்டனர்.

Sanfe குறிப்பாக இந்திய பெண்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது. இதை ஒரு கையில் பிடித்துக் கொண்டு மற்றொரு கையால் ஆடையை பிடித்துக்கொண்டு நின்றுகொண்டே சுலபமாக சிறிநீர் கழிக்கமுடியும்,” என்றார் ஹேரி. 

இது காகிதத்தால் ஆனது என்பதால், தானே உடற்வாகுக்கு ஏற்ப சரிசெய்து கொள்ளும் என்றும் மாதவிடாய் காலங்களிலும் இதை பிரச்சனையின்றி பயன்படுத்த முடியுமாம். 

இந்த சிறுநீர் கழிக்கும் கருவி தற்போது அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக தளங்களிலும், சில மருந்து கடைகளிலும் கிடைக்கிறதாம்.

Sanfe

ஆங்கில கட்டுரையாளர்: டென்சின் பேர்னா | தமிழில்: இந்துஜா