நோயாளிகளையும், டாக்டர்களையும் இணைக்கும் ஹலோ டாக்டர் 24X7

0

உலக சுகாதார அமைப்பின் (World Health Organization) சர்வதேச சுகாதாரப் பணியாளர்கள் புள்ளிவிவரப்படி, இந்தியாவில் 2010ம் ஆண்டில் 10 ஆயிரம் நோயாளிகளுக்கு 6 (6:10,000) பொதுமருத்துவர்கள் இருந்தார்கள். இதுவே 2012ல் 10 ஆயிரம் பேருக்கு 7 பொதுமருத்துவர்கள் இருந்திருக்கிறார்கள்.

ஒடிசாவில் 2010ம் ஆண்டு தொடங்கப்பட்ட "ஹலோ டாக்டர் 24x7" (HelloDoctor24x7) நோயாளிகளுக்கும் டாக்டர்களுக்குமான இடைவெளியைக் குறைத்திருக்கிறது.

மருத்துவக் கல்லூரியில் டாக்டர் லலித் மாணிக், வெளி நோயாளிகளுக்கான (OPD) தகவல் பிரச்சனையைத் தீர்த்துவைத்திருக்கிறார். அங்கு நூற்றுக்கணக்கான வெளி நோயாளிகள் சரியான தகவலை மருத்துவர்களிடம் இருந்து பெறமுடியாமல் தவிப்பதைப் பார்த்திருப்பதாக தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார் அவர்.

கேஐஐடி (KIIT) தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தன் கனவுத் தொழில் முயற்சியை, இணை நிறுவனராக சஞ்சய்தாஸ் அளித்த 20 லட்சம் ரூபாய் மற்றும் ஏன்ஜெல் முதலீட்டுடன் தொடங்கினார். 2010ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை நோயாளிகளுக்கான தகவல்களைத் தருவதாகவே அவர்களுடைய தொழிலின் ஆரம்பம் இருந்தது. மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை கையாள்வது மற்றும் நோயாளிகள் உறவு மேலாண்மைத் தீர்வுகள் (PRMS) மூலம் பின்னணி சேவைகளைச் செய்து வந்தார்கள்.

இருந்தாலும், தேவைகளுக்கு ஏற்ப தன்னுடைய சேவைகளை விரிவுபடுத்த லலித் விரும்பினார். இந்த தொழில் திட்டத்தில் நிறைய வாய்ப்புகளைத் தேடத் தொடங்கிய அவர், ஸ்காட்லாந்தில் உள்ள டுண்டி பல்கலைக்கழகத்தில் (University of Dundee, Scotland) பொது மருத்துவம் பற்றிய முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். அங்குதான் தன்னுடைய தொழில்முயற்சிக்கான எதிர்கால துணை நிறுவனரான சஷாங் சிங்காலைச் சந்தித்தார்.

இந்தியாவில் 24X 7 தொலைபேசி ஆலோசனை சேவையை தொடங்குவதற்கான எண்ணத்துடன் இருந்தார் சஷாங். ஆனால் அப்போது அவரால் இங்கிலாந்தில் ஒரு டாக்டரிடம் குறிப்பாக ஒரு பொதுமருத்துவரிடம் 5 நாட்கள் வரை அப்பாயிண்ட்மெண்டை ஏற்பாடு செய்யமுடியாமல் இருந்தது.

அதுபற்றி சஷாங்கே சொல்லும் போது, “சராசரியாக நாள் ஒன்றுக்கு டாக்டர் ஒருவர் 20 அழைப்புகளை எதிர்கொள்வார். அதில் எட்டு முக்கியமான அழைப்புகளை அவர் தவறவிடக்கூடும். அவர்களுடைய நோயாளிகளுக்கு மீண்டும் பேச மறந்துவிடுவது டாக்டர்களுக்கு வழக்கமாக நிகழ்வது” என்கிறார்.

ஒரே கூரையின் கீழ், லலித்தும் சஷாங்கும் சேர்ந்து டெலி கன்சல்டேஷனை தொடங்கினார்கள். முதல்கட்டமாக 200 மருத்துவர்களையும் 500 நோயாளிகளையும் சந்தித்து மிக விரிவான ஆய்வை நடத்தினார்கள். அந்த அனுபவம் சஷாங்கைப் பொறுத்தவரை வேடிக்கையாக இருந்திருக்கிறது.

ஹலோ டாக்டர்
ஹலோ டாக்டர்

இவர்கள் ஏன் புவனேஸ்வரைத் தேர்ந்தெடுத்தார்கள்? அங்குதான் அதிநவீன தொழில்நுட்ப நிறுவனங்கள், சிந்தனையாளர்கள், செயல்பாட்டாளர்கள், எல்லையற்ற உற்சாகம் கொண்ட புதிய தொழில்முனைவோர் இருந்தார்கள். மேலும், புதிய தொழில் வாய்ப்புகளில் முதலீடு செய்யக்கூடியவர்களுக்கான மையமாக புவனேஷ்வர் இருந்தது. இங்கு அப்படியான நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஜனவரி 2015ல் 24X7 சேவை அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்பத்திலேயே 6 ஆயிரத்துக்கும் அதிகமான அழைப்புகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட 3 ஆயிரம் பயனாளிகள், அதில் 40 சதம் பேர் மீண்டும் வரக்கூடியவர்கள் என பயனாளிகளின் எண்ணிக்கை மைல்கல்லாக அமைந்தது.

மருத்துவர்களிடம் இருந்து விலகி தூரத்தில் இருந்தவர்கள், சந்திக்க நேரமில்லாதவர்கள், நீண்டநாள் நோயுற்று தினமும் பரிசோதனை தேவைப்பட்டவர்கள், கர்பிணிப் பெண்கள் உள்ள குடும்பங்கள் மற்றும் வயது முதிர்ந்தோர், இவர்களுடைய சேவையை ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்டவர்களாக இருந்தார்கள். சராசரி ஒரு நாளைக்கு ஹலோ டாக்டர் 24X7 சேவை, 42 அழைப்புகளைப் பெற்றது, அதில் 40 சதம் டாக்டர்களின் ஆலோசனைக்கானது. தொடக்கத்தில் 12 பேருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவைக் குழுவில் இப்போது 18 பேர் பணியாற்றுகிறார்கள். 12 வளாகத் தூதர்களும் உண்டு. அவர்கள் ஒடிசாவின் பத்து மாவட்டங்களில் இருந்தார்கள்.

எப்படி செயல்படுகிறது?

பயனாளிகள் சிறு பணத்தை ஆன்லைனில் செலுத்திவிட்டு, ஹெல்ப்லைனைத் தொடர்புகொள்ளலாம். டெலிகாம் ஆப்பரேட்டர், முதலில் பேசுபவரின் பிரச்சனையை கேட்டுத் தெரிந்துகொள்வார். என்ன மாதிரியான நோய் என்பதையும் புரிந்துகொண்டு, பிறகு எந்த டாக்டரைப் பார்க்கவேண்டும் என்று கூறுவார். அதைத் தொடர்ந்து பேசுபவரை சம்பந்தப்பட்ட டாக்டருடன் டெலிகாம் ஆப்பரேட்டர் இணைப்பார். மேலும், இணையதளத்தில் உடல்நலம் தொடர்பான இலவச தகவல்களும் அளிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு மருத்துவருக்கும் கட்டண விவர அட்டைகள் இருக்கின்றன என்று விவரிக்கிறார்கள் இணை நிறுவனர்கள். ஒரு பொது மருத்துவருக்கு ஒரு நிமிடத்திற்கு 20 ரூபாயும் (மகப்பேறு மருத்துவர், பல் மருத்துவர், சிறப்பு மருத்துவருக்கு 40 ரூபாயும், சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவருக்கு நிமிடத்திற்கு 60 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

இந்த ஹலோ டாக்டர் சேவை பயனாளிகள் தரும் கட்டணத்தில் இருந்து 40 சதவிகிதத்தை தங்களுடைய வருமானமாக எடுத்துக்கொள்கிறது. 2015 ஜூன் முதல் மார்ச் வரையில் அவர்களுடைய மொத்த வருமானம் 1 லட்சத்து 95 ஆயிரத்து 400 ரூபாயாக இருக்கிறது. அதில் 60 ஆயிரம் ரூபாய் விற்பனைக்கும், மற்ற தொகை விளம்பரத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது.

வளர்ச்சியை நோக்கி

பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைந்து எதிர்காலத்தில் தினமும் 1200 மருத்துவ ஆலோசனைகளைப் பெறும் எதிர்பார்ப்பு இருக்கிறது. சமீபத்தில் அவர்கள் இரண்டு டிஜிட்டல் ஹெல்த் சென்டர்களை (kiosks) திறந்துள்ளனர். அதில் டாக்டர்களிடம் ஆலோசனை பெற்று பிரிஸ்கிரிப்ஸனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளமுடியும். இதுபோன்ற 100 கியோஸ்குகளை பார்மஸி மற்றும் லேப் வசதிகளுடன் திறக்க இலக்கு வைத்துள்ளனர்.

ஹலோ டாக்டர் குழு
ஹலோ டாக்டர் குழு

இதையடுத்து, தங்களுடைய மருத்துவ ஆலோசனை சேவையை 3 மாநிலங்களில் விரிவுபடுத்தி, 3 லட்சம் பயனாளிகளை அடையும் திட்டத்தையும் இணை நிறுவனர்கள் வைத்திருக்கிறார்கள். கார்ப்பரேட்டுகள் மற்றும் தொழில் நிறுவனங்களையும் சேவையின் மூலம் அவர்கள் அடைந்துள்ளனர்.

உள்ளூர் மருந்து விற்பனையாளர்களுடன் இணைந்து மருந்து மாத்திரைகளை விநியோகம் செய்யும் திட்டமும் இருக்கிறது. கூடவே, ஹெல்த் சென்டர்களை மெடிக்கல் ஷாப்புகளுக்கு அருகில் அமைக்கவும் திட்மிட்டுள்ளனர். மேலும், ஹலோ டாக்டர் சேவையை தனித்துவமான ஒரே ஹெல்த் ஹெல்ப்லைனாக உருவாக்க கூடுதல் முதலீட்டுக்காக (venture capital) சைப் பார்ட்னர்ஸ், ஹெல்த் ஸ்டார்ட், அக்குமென் பண்ட், ஐவி கேப் வென்ச்சர்ஸ் மற்றும் தனியார் முதலீட்டாளர்களையும் அணுகியுள்ளனர்.

தொழில்துறை

பிடபிள்யூசி மற்றும் ஜிஎஸ்எம்ஏவும் (BWC AND GSMA) வெளியிட்ட அறிக்கையின்படி, 2017ல் டயக்னாஸ்டிக் சேவை ஹெல்த் மார்க்கெட்டில் 15 சதவிகிதமாக இருக்கும், அத்துடன் 3.4 பில்லியன் யுஎஸ் டாலர் வருமானத்தைப் பெற்றுத்தரும் என்றும் அதில் பெரும்பாலான வருமானம் கால் சென்டர்கள் மற்றும் மொபைல் டெலி மெடிசன் தீர்வுகளின் மூலம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏறக்குறைய வருமானம் 1.7 பில்லியன் மற்றும் 1.6 பில்லியன் டாலராக இருக்கும்.

எனினும், தனியார் முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் வேறுவிதமான கதைகளைச் சொல்கிறார்கள். 2015ம் ஆண்டின் முதல் பாதியில் சுகாதாரத்துறைக்கு  2 சதவிகிதம் மட்டுமே தனியார் முதலீடு கிடைத்துள்ளது. ஆனால் டைகர் குளோபல் மேலாண்மை நிறுவனம், ரத்தன் டாடா மற்றும் நெக்ஸ் வென்ச்சர் பார்ட்னர்ஸ் (Tiger Global Management, Ratan Tata and Nexus Venture Partners ) ஆகியோர் 10.2 மில்லியன் ஹெல்த் கேர் தொலைபேசி சேவையான லைபரேட்டில் முதலீடு செய்துள்ளார்கள். இந்த முயற்சிகள் நிச்சயமாக மாற்றத்தை நோக்கிய பயணமே.

இணையதள முகவரி: HelloDoctor24x7