வீடு கட்ட நிதியுதவி தேவைப்பட்ட பெண்ணுக்கு ஒன்று திறண்ட முகம் தெரியாத ஃபேஸ்புக் பயனர்கள்! 

0

லக்கபட்ல புஷ்பா, 5 சகோதரிகளுடன் குடும்பத்தில் மூத்த மகளாக பிறந்தார். பெற்றோர்கள் சீக்கிரம் இறந்ததால், தான் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பத்தை காப்பாற்ற முடிவு எடுத்தார். புஷ்பாவின் இளைய சகோதரிக்கு குறைப்பாட்டுடன் குழந்தை பிறந்தது. அந்த நிலையில் நிதிப் பிரச்சனையால் புஷ்பாவின் சகோதரியால் அந்த குழந்தையை வளர்க்கமுடியவில்லை. 

புஷ்பா, தெலுங்கானாவில் பெல்லம்பள்ளி என்ற இடத்தில் பருத்தி நிலத்தில் பணிபுரிந்தார். அதில் வந்த சொற்ப வருமானத்தில் வாழ்ந்தாலும் தங்கையின் குழந்தையை எடுத்து வளர்க்க முடிவெடுத்தார். ஆறு வயதான ரம்யா என்ற அக்குழந்தையை, அன்புடன் வளர்க்கத் தொடங்கினார். கூரை வீட்டில் வாழ்ந்த அவர், மாற்றுத்திறனாளிக் குழந்தையை வைத்துக் கொண்டு கடுமையான சூழலில் வாழ்ந்தார் புஷ்பா.

வறுமையில் வாழும் குடும்பங்களுக்கு தெலுங்கான அரசு வீடுகள் வழ்ங்கினாலும், புஷ்பா மற்றும் ரம்யா, அரசு குறிப்பிட்டுள்ள ‘குடும்பம்’ என்ற வரைமுறைக்குள் வராததால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இது குறித்து தி நியூஸ் மினிட் பேட்டியில் பேசிய புஷ்பா,

”நான் இரண்டு முறை வீடு கேட்டு அரசிடம் விண்ணப்பித்தேன். ஆனால் நான் திருமணம் முடியாதவர் என்பதால், குடும்பம் என்ற அடிப்படையில் வராததால் அது நிராகரிக்கப்பட்டது. நான் திருமணம் செய்யவில்லை என்பதால் குடும்பம் இல்லை என்றாகிவிடுமா?” என்று கேட்டார். 

எல்ஐசி-ல் வேலை செய்யும் புஷ்பாவின் நண்பர் ரமேஷ் ரேனிகுண்டா அவர்களுக்கு உதவ முன்வந்தார். தன் ஃபேஸ்புக் மூலம் புஷ்பாவிற்கு வீடு கட்ட உதவி கேட்டார். சுமார் 1000 பேர் அதைப் பார்த்து உதவ முன்வந்தனர். புஷ்பாவைப் பற்றி விரிவாக முகநூலில் பதிவிட்டார் ரமேஷ். அவருக்கு ஒரு நல்ல வீடு கட்ட, கழிப்பறை வசதியோடு தேவைப்படும் நிதி பற்றி எழுதினார். அந்த பதிவைப் பார்த்து உலகமெங்கிலும் இருந்து உதவிகள் கொட்டியது. வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பலரும் நிதியுதவி செய்ய முன்வந்தனர். 

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் பலர் இங்குள்ளவர்களுக்கு உதவ காத்திருக்கின்றனர். நிதியுதவி கிடைத்தவுடன், ஐந்து வாரங்களில், ரூ.1.10 லட்சம் செலவில் ஒரு வீடு கட்டப்பட்டது. புஷ்பா மற்றும் ரம்யா முகம் தெரியாத அந்த நல்லுள்ளங்களுக்கு தங்கள் நன்றியை தெரிவித்து கொண்டனர். தாங்கள் பாதுகாப்பாக வாழ வீடு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கட்டுரை: Think Change India