சேலத்தில் நடைப்பெற்ற 'ஒளிமயம்' தொழில்முனைவுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு! 

தொழில் முனைவிற்கு ஏற்ற சூழலை, சேலம் மாநகரில் மேம்படுத்திக் கொள்வதற்கான முதல் முயற்சியாகவே இந்த போட்டி இருந்தது!

0

சேலத்தின் புதிய தொழில் முனைவுக்கான சிந்தனைப் போட்டி "ஒளிமயம்" நடந்து முடிந்தது. இந்த போட்டியை மதுரையை மையமாகக் கொண்டு செயல்படும் ‘நேட்டிவ் லீட்’ அமைப்பு, அதன் முதலீட்டு பிரிவான 'நேட்டிவ் ஏஞ்சல்ஸ் நெட்வர்க்' அமைப்பும் மற்றும் இந்தியத் தொழில் கூட்டமைப்பான ‘சிஐஐ’ / ‘யங் இந்தியன்ஸ்’ – சேலம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து நடத்தியது.

'ஒளிமயம்' என்ற பெயரில் நடந்த இந்த தொழில்முனைவு போட்டியின் இறுதிப் போட்டி, பிப்ரவரி 26 அன்று நடைப் பெற்றது. இந்த போட்டியானது, புதுயுகத் தொழில்முனைவில் ஈடுபடும் இளைய தலைமுறையினர் தங்களது திறனையும் ஆர்வத்தையும் சரியான வழிகாட்டுதல் இன்றி, பல்வேறு தடைகளால் இழந்து விடாமல் தங்கள் எண்ணத்தில் வெற்றி அடைய வேண்டும் என்னும் நோக்கோடு உருவாக்கப்பட்டது.

தொழில்முனைவிற்கு ஏற்ற சூழலை, சேலம் மாநகரில் மேம்படுத்திக் கொள்வதற்கான முதல் முயற்சியாகவே இந்த போட்டி இருந்தது.

ஒளிமயம் முயற்சியை பற்றி ‘சிஐஐ’ சேலத்தின் துணை தலைவர் விமலன் கூறுகையில், 

“இந்த போட்டியானது ஆக்கப்பூர்வமான புத்தாக்க எண்ணங்களைக் கொண்டிருக்கும் தொழில்முனைவோர்களைக் கண்டறிந்து அவர்களுக்கான வழிகாட்டுதலும், முதலீடு பெற உதவும் களமாகவும் மாணவர்களிடையே தொழில்முனைவு கலாச்சாரத்தை உருவாக்கும் தளமாகவும் அமையும்” என்றார்.

நேட்டிவ் லீட் மற்றும் நேட்டிவ் ஏஞ்சல்ஸ் நெட்வர்க் அமைப்பின் தலைவரான சிவராஜா கூறுகையில், 

“சேலம் மாநகர் தொழில்முனைவை ஊக்கப்படுத்தும் உயரிய கொள்கைகளை முன்னெடுத்துள்ளது. மேலும் வளர்ந்து வரும் தொழில்முனைவோர் தங்கள் நிறுவனங்களை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைவதோடு மாணவர்கள் தங்களின் புத்தாக்க எண்ணங்களை வெளிப்படுத்துவதன் மூலம் அவர்கள் தங்களில் வாழ்வில் உயரிய நிலையை அடைய முடியும்” என்றார்.

விண்ணப்பித்த மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்கள் தனித்தனியே நடத்தப்பட்டது. அதில் மாணவர்களுக்கான பயிற்சி முகாம் பிப்ரவரி 12 அன்றும் தொழில்முனைவோருக்கான முகாமானது 19, 20, 21 ஆகிய மூன்று நாட்களும் நடத்தப்பட்டது.

தொழில் முனைவோருக்கான பயிற்சி முகாமின்போது SP– CAG நிறுவனத்தின் துணைத் தலைவர்கள் பரத் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் தொழில்முனைவோர் தெரிந்து கொள்ள வேண்டிய சில நுட்பங்களை விளக்கினர். அதனைத் தொடர்ந்து நேட்டிவ் ஏஞ்சல்ஸ் நெட்வர்க் அமைப்பின் தலைவரான சிவராஜா, பிசினஸ் மாடல் கேன்வாஸ் (BUSINESS MODEL CANVAS) என்னும் வணிக மாதிரிப் படிவம் பற்றிய வகுப்புகள் நடத்தினார்.

பின்னர், முகாமில் கலந்து கொண்டவர்களின் சிறந்த 6 தொழில்முனைவு சிந்தனைகளும், 12 மாணவர் சிந்தனைகளும் பிப்ரவரி 26 அன்று நடந்த இறுதிக் கட்ட போட்டியில், அனுபவமிக்க தொழில்துறை வல்லுனர்கள் முன் காட்சிப்படுத்தப்பட்டது.

'ஆம்பீயர் வேக்கில்ஸ்; (AMPERE VEHICLES) நிறுவனத்தின் நிறுவனரான ஹேமலதா அண்ணாமலை பிப்ரவரி 26 அன்று காலை நடந்த தொடக்க விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அன்று மாலை நடந்த பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களான பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த விஜய் ராஜ், மற்றும் ஞானமணி பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த ராஜன், ஆகியோருக்கு பரிசாக முறையே ரூ20,000 மற்றும் ரூ10,000 வழங்கப்பட்டது. இவர்களோடு சோனா தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் நரசூஸ் தொழில்நுட்பக் கல்லூரியை சேர்ந்த மேலும் இரண்டு மாணவர்களுக்கு ஆறுதல் பரிசாக ரூபாய் 2,500 வழங்கப்பட்டது.

தொழில் முனைவோர் பிரிவில் 'நேட்டிவ் ஸ்பெஷல்' நிறுவனத்தின் நிறுவனர் பாஸ்கரன் வெற்றி பெற்றார். இவரது நிறுவனத்துக்கு வணிக ரீதியிலான அனைத்து வழிகாட்டுதலும் வழங்கப்பட்டு, நேட்டிவ் ஏஞ்சல் நெட்வர்க்குடன் இணைக்கப்பட்டு முதலீடு வழங்கப்படுவதற்காக பரிந்துரை செய்யப்பட்டது.

மேலும் விபரங்களுக்கு OzhiMayam அல்லது 9952401116 ,9952401113, 8438247485 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

ஒளிமயம் போட்டி பற்றிய விவரங்கள்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்