ஜனாதிபதி கெளரவித்த பின் 'வாட்ஸ்ஆப்' மூலம் சங்கமித்த 100 சாதனைப் பெண்கள்!

1

வெவ்வேறு துறைகளில் புரிந்த சாதனைகளுக்காக இந்த ஆண்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் கெளரவிக்கப்பட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 100 சாதனைப் பெண்கள், அங்கேயே ஒரு 'வாட்ஸ்ஆப்' குழுவை உருவாக்கி, அடுத்த கட்ட சாதனைகளுக்கான புதிய பயணங்களுக்கு அச்சாரமிட்டிருக்கிறார்கள்.

குடியரசு தினத்துக்காக தலைநகர் டெல்லியின் ராஜபாதையில் ராணுவ வீரர்கள் கடைசிகட்ட ஒத்திகையில் ஈட்டுபட்டிருந்த ஜனவரி 22-ம் தேதி... ராஜபாதையில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்திலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நாடு முழுதும் இருந்து அழைக்கப்பட்டிருந்த 100 சாதனை பெண்மணிகளுக்கு மதிய விருந்து அளித்து பெருமைப்படுத்தினார்.

அமைச்சர் மேனகா காந்தி பொறுப்பு வகிக்கும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் 'பெண் குழந்தைகளைக் காப்போம்' திட்டத்தின் ஓராண்டு நிறைவை ஒட்டி நாடு முழுதும் உள்ள சாதனைப் பெண்களை கெளரவிக்க அரசு எண்ணியது. அதற்காக ஃபேஸ்புக்குடன் இணைந்து பொதுமக்கள் மூலமாகவே பரிந்துரைகளைப் பெற்று, பொதுமக்கள் வாக்குகள் மூலமாகவே சாதனையாளர்கள் பட்டியலை இறுதி செய்தனர்.

முதலில் கலை, மனித உரிமை, பெண்கள் மேம்பாடு, விளையாட்டு என 20 வெவ்வேறு துறைகளில் இயங்கும் 200 பெண்களை தெரிவு செய்தனர். பின்னர், அதிலிருந்து சிறந்த சாதனையாளர்களாகத் தேர்வு பெற்ற 100 பேருக்குத்தான் நாட்டின் முதல் குடிமகனுடன் உரையாடி விருந்துண்ணும் வாய்ப்பு கிடைத்தது.

இவர்களில் போபால் விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்ட மக்களிடம் 30 ஆண்டுகளாக பணியாற்றிவரும் ரஷிதா, பெண் கல்விக்காக பாடுபடும் லலிதா நிசா உள்ளிட்ட பலர் பிரபலமானவர்கள். 

நூறு பேரில் சுவர்ணலதா, விஜயலட்சுமி, டாக்டர் சௌந்தர்யா, கிருத்திகா ரவிச்சந்திரன், தமிழ் செல்வி நிகோலஸ், லதா சுந்தரம், சீமா செந்தில், மரியா சீனா, கீதா ஆகிய 8 பேர் தமிழ்ப் பெண் சாதனையாளர்கள் என்பது நமக்குக் கிடைத்த பெருமை.

இந்த எட்டு ரத்தினங்களில் ஒருவரான புதுவை ராஜீவ் காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிணித் துறை உதவி பேராசிரியரான கிருத்திகா ரவிச்சந்திரன், தமிழ் யுவர் ஸ்டோரியிடம் பேசும்போது,

"புத்தாண்டுக்கு முதல் நாள்தான் என்னையும் தேர்வு செய்ததற்கான தகவலைத் தெரிவித்தார்கள். குடியரசுத் தலைவர் மாளிகையின் பிரம்மாண்டமான நிகழ்ச்சி அரங்கில் குடியரசுத் தலைவர் என் பெயர் பொறித்த ஸ்குரோல் வடிவிலான சான்றிதழை வழங்கி எனக்கு வாழ்த்து சொன்னது என்பது எனக்கு கிடைத்த மிகப் பெரிய விருதாகவே கருதுகிறேன். எனது தனிப்பட்ட சாதனைக்கு கிடைத்த பரிசு, ஊக்கமாக பார்க்கிறேன். அந்த நிமிடங்கள் கனவு நிமிடங்கள்" என்று குதூகலிக்கிறார்.

கோவையில் எம்.எஸ்.சி. கம்யூட்டர் சயின்ஸ், திருச்சி கலை காவேரியில் எம்.ஃபில் என்று இரு வேறு துறைகளில் பட்டம் பெற்றவர். பரத நாட்டியக் கலைஞரான இவர், 'வீர் பௌண்டேஷன்' என்கிற அமைப்பை நிறுவி, கலை மற்றும் கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கல்லூரிப் பணியையும் தாண்டி கேட்கும் திறன் மற்றும் பேச்சு குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு இவர் நடனம் பயிற்றுவித்து வருகிறார். ஆதரவற்றோருக்கான இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கும் நடனம் கற்றுத் தருகிறார். புதுவை வரும் வெளிநாட்டினர்களுக்கு பரதம் சொல்லித் தருவதுடன், அரசுடன் இணைந்து பல பயிற்சி பட்டறைகளையும் நடத்துகிறார். அண்மையில் அந்தமான் தீவில் ஒரு பரத நாட்டிய பயிலரங்கம் நடத்தியுள்ளார். தமது கம்யூட்டர் படிப்பு, பரதத்தை நவீன தொழில் நுட்பம் மூலம் சொல்லித்தர பெரிதும் உதவுவதாகவும் சொல்கிறார்.

பரதக் கலையை அடுத்த தலைமுறைக்கு எந்தவித மாற்றமும் இல்லாமல் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை தனது குறிக்கோளாக கொண்டிருக்கிறார் கிருத்திகா.

"பல மொழி பேசும், பல துறைகளில் பயணிக்கும் 100 பெண்கள் ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் கூடி எங்களது பணிகளையும், அதன் நன்மைகளையும் பகிர்ந்து கொண்டது என்பது மிகப்பெரிய 'பாசிடிவ் எனர்ஜி..! இன்னும் சில மணிநேரம் பேச முடியாதா என்ற ஏக்கம் முடிவில் எழுந்தது. 100 பேரும் அங்கேயே ஒரு 'வாட்ஸ்ஆப்' குரூப் ஒன்றை தொடங்கி தொலைபேசி எண்களை பகிர்ந்து கொண்டோம். இந்த குரூப் மூலம் இன்னும் பல நூறு சாதனை பெண்கள் உருவாக வேண்டும் என்பதுதான் ஆசை.

அமைச்சர் மேனகா காந்தியும் எங்களுடன் சகஜமாக பேசினார். பின்னர், குடியரசுத் தலைவருடன் குரூப் போட்டோ எடுத்தார்கள். அந்த படத்தின் பிரமாண்டம் அப்பப்பா எப்படி சொல்ல..." என்று அந்த நிகழ்விலிருந்து மீளாதவராகவே பேசினார் கிருத்திகா.

அரசின் இந்த முயற்சி இன்னும் பல சாதனை பெண்களை உருவாகும் என்பதில் சந்தேகமில்லை என்பதை கிருத்திகாவின் சந்திப்பு உணர்த்தியது!