மனம் விரும்பும் வேலை நிம்மதியைக் கொடுக்கும்!

0

வாழ்வில் உங்கள் உண்மையான இலக்கு என்ன என்பதை மட்டும் கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் அதை அடைந்தே தீருவீர்கள் – சேகர் விஜயன்

செக்குமாடு போல உழலும் தினசரி வாழ்வின் ஒரே மாதிரியான போக்கிலிருந்து பிய்த்துக் கொண்டு போகவேண்டுமென்ற ஆவல் நம்மனைவருக்குமே எப்போதேனும் ஏற்படவே செய்யும். அதற்கான விடையாக சிறு ஓய்வு ஒன்றை எடுத்துக் கொள்வது பற்றியே நம்மில் பலரும் யோசிப்போம். மாறாக வாழ்வின் போக்கையே மாற்றிக்கொண்டு அந்தச் சோர்வில் இருந்து விடுபட முயல்பவர்கள் வெகு சிலரே. கேரளாவில் பிறந்து டில்லியில் வளர்ந்த சேகர் விஜயன் அத்தகையவர். நாடகக் கலைஞர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பல துறைகளிலும் தடம் பதித்தவர் இவர்.

மென்பொருள் துறையிலும், விற்பனைப் பிரிவிலும் அனுபவம் உள்ளவரான சேகர் ஒரு நாள் தனது வழக்கமான வாழ்கை அர்த்தமற்றதாக இருப்பதாக உணர்ந்தார். உலகம் முழுவதும் சுற்றும் வாய்ப்புகளைத் தந்த வேலை அவருக்கு ஏற்ற சவாலான ஒன்றாக இல்லை என்று உணர்ந்தார். வித்யாசமாக எதையேனும் செய்தே ஆகவேண்டும் என்ற தணியாத தாகம் வந்த, தனது வேலையை உதறினார். உயரதிகாரிகள் வெளிநாட்டில் வேலை செய்யும் வாய்ப்புகளைத் தந்து அவரை தக்க வைக்க முயன்றதெல்லாம் நடக்கவில்லை.

முதலில் ரேடியோ நிகழ்ச்சி தொகுப்பாளராக வேலை செய்ய ஆரம்பித்தார். ஒரு நாள் யூரோ கிட்ஸ்க்கான ஒரு நிகழ்ச்சி ஒன்றை ஒருங்கிணைக்க நேர்ந்தது. அப்போதுதான் நான் எனக்கான இடம் என்பது நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் பணிதான் என்பதை கண்டுகொண்டேன் என்கிறார் சேகர்.

தனது சுய அடையாளத்தைத் தேடும் பாதையில் சேகர் நாடகத் துறை உட்பட பல்வேறு பணிகளைச் செய்திருக்கிறார். நிகழ்ச்சித் தொகுப்பாளர் பணியே தனக்கான இடம் என்பதை நிச்சயித்து, முழு நேரப் பணியாக அதை மேற்கொள்ள பல்வேறு முன் தயாரிப்புகளும் தேவைப்பட்டன. 

“எனது உடல் எடை ஒரு முக்கியமான சிக்கலாக இருந்தது. பயணங்களில் இருந்து எல்லாமே எனக்கு பெரிய போராட்டமாக இருந்ததன் பின்னணி இந்த அதிக எடைதான் என்பதை உணர்ந்து தீவிரமாக எடைக் குறைப்பில் இறங்கினேன். எனது நாயுடன் நடை பயிற்சியை ஆரம்பித்த நான் கிட்டத்தட்ட 20 கிலோ வரை இழந்தேன். இன்று என்னால் மராத்தான் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவும், சில மராத்தான்களை ஒருங்கிணைக்கவும் முடிகிறது. குப்பை உணவுகளை தவிர்ப்பதும், நடப்பதும் என் வாழ்வின் வண்ணத்தையே மாற்றிவிட்டன” என்கிறார் சேகர்.

அவரது தொகுப்பாளர் பணியில் தேவையான ஆற்றலையும், உற்சாகத்தையும் பார்வையாளர்களிடமிருந்தே பெறுவதாகச் சொல்கிறார் சேகர். ”மேடைக்குப் போவதற்கு முன் வயிற்றில் லேசான படபடப்பு வருவது எல்லோருக்கும் சகஜமான ஒன்று. நான் சிறிது நேரம் எடுத்துக் கொண்டு சுற்றியுள்ள மக்களை கவனிப்பதன் மூலம் அந்த படபடப்பிலிருந்து வெளிவருவதுடன் நிகழ்வு முழுவதற்குமான உற்சாகத்தை பெருகிறேன். அதன் பின் நிகழ்ச்சிநிரலில் ஏற்படும் எந்த மாற்றத்திற்கும் நான் பதட்டப்படுவதில்லை” என்று உற்சாகமாக தன் வெற்றி ரகசியத்தைப் பகிர்கிறார் சேகர்.

தவறுகளும் மாற்றங்களும் இயல்பானவை. ஒரு நிகழ்சித் தொகுப்பாளராக எந்த நொடியிலும் தவறுகளை லாவகமாகக் கையாளத் தெரியவேண்டும். விற்பனைத் துறையில் வேலை செய்த போது நான் கற்றுக் கொண்ட பாடங்கள் அது போன்ற நேரத்தில் சமாளிக்க உதவுகிறது என்கிறார் இவர்.

”வாழ்வின் ஆரம்பக் கட்டத்தில் நிறைய சுயமுன்னேற்றக் கட்டுரைகளையும், புத்தகங்களையும் படித்து என் மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ள முயல்வதுண்டு. ஆனால் என் ஆத்மாவின் தேடலுக்கு உரிய துறையைத் கண்டுபிடித்து அதில் குதித்த நாள் முதல் எனக்கு அத்தகைய புத்தகங்கள் எதுவுமே தேவைப்படவில்லை. மனமும், ஆன்மாவும் விரும்பும் வேலையைச் செய்கையில் நிம்மதி என்பது நமக்கு இயல்பாகவே கைவந்துவிடும், விலை கொடுத்து அதை வாங்க வேண்டியிருப்பதில்லை” என்று புன்னகையோடு பகிர்கிறார் சேகர்.

ஆங்கிலத்தில்: Sindhu Kashyap | தமிழில்: எஸ்.பாலகிருஷ்ணன்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

மனம் விரும்பும் தொழிலை செய்யுங்கள்: 'கிரியா' நிறுவனரின் அறிவுரை!

இரண்டே ஆண்டுகளில் எனது வாழ்க்கையை மாற்றிய தொழில் முனைவு!