கேன்சரோடு போரிடும் 23 வயது நம்பிக்கை நாயகன்!

0

முதல் பார்வைக்கு ஒரு சாதாரண சமூக தொழில்முனைவு பட்டப்படிப்பு படிக்கும் மாணவராக தான் தெரிகிறார் சுஷாந்த் கொடெலா. ஆனால் 2011-ல் கல்லூரியில் நுழைந்த சில நாட்களிலேயே கொடெலாவுக்கு adrenal cortical carcinoma என்ற அரிதான புற்றுநோய் தாக்கியிருப்பது தெரிய வந்தது. 15 லட்சம் பேரில் ஒருவருக்கு வரும் இந்த நோயால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்ற சரியான விவரம் இல்லை. 'என் வயது, நோயின் அரிதான தன்மை ஆகியவற்றால் அந்த நோய் என்னை தாக்கியிருக்காது என தொடக்கத்தில் நிறையவே நம்பினேன்' என்கிறார் கொடெலா.

வீரியமிக்க அந்த கட்டி கொடெலாவின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது. 'ரொம்பவே நொறுங்கிப் போனேன். அவநம்பிக்கையும் வெறுப்பும் என்னை சூழ்ந்தன' என தன் வாழ்வின் கருப்புப் பக்கங்களை நினைவு கூர்கிறார் அவர்.

புற்றுநோய் ஒரு படிப்பினை

வலி மிகுந்த பல அறுவை சிகிச்சைகளுக்கு பின் தற்போது மெல்ல மெல்ல குணமாகி வருகிறார் கொடெலா. ஆனால் அவரும் அவர் குடும்பமும் கடந்து வந்த பாதை கொடூரமானது. 'சதா சர்வ காலமும் மருந்து, மாத்திரைகள், மருத்துவர்கள் என பொழுதைக் கழிப்பது அவ்வளவு எளிதல்ல. எனக்கு ஆதரவளித்தவர்களால்தான் நான் இப்போது இங்கு இருக்கிறேன்' என்கிறார் கொடெலா. 'புற்றுநோய் நம் நம்பிக்கையை சிதைக்க வல்லது. எனவே நம்பிக்கையை காக்க, என் கடந்தகால சாதனைகளை நினைக்க முயன்றேன். ஆனால் சோகம் என்னவென்றால் நான் குறிப்பிடும்படி எதையும் சாதித்திருக்கவில்லை' என்கிறார் அவர்.

'புற்றுநோயை என்னால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் என் வாழ்க்கையை என்போக்கில் வாழ முடியும் என உணர்ந்தேன்' என சொல்லும் கொடெலா தன் வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதியில் கால் வைத்தார்.

கேன்சர் என்னும் மர்மத்திரை

கொஞ்சம் உடல்நிலை சீராகி கல்லூரிக்கு திரும்பியதும் அவரும் அவரைப் போன்றே புற்றுநோயில் இருந்து மீண்டு வருபவரான ஜிராக் குமார் படேலோடு இணைந்து சக நோயாளிகளுக்கு பொருளாதார ரீதியில் உதவத் தொடங்கினார். ஆனால் பொறுப்பற்ற மருத்துவமனை நிர்வாகங்கள், போதுமான தரவுகள் இல்லாதது போன்ற காரணங்கள் அவர்களை சோர்வுற செய்தன. 'ஒருவர் இந்த நோயிலிருந்து மீள எவ்வளவு விஷயங்கள் தேவைப்படுகின்றன என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தோம்' என்கிறார் இவர்.

அவர்களின் இடைவிடாத முயற்சிகளால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் 'unCancer India' என்ற அமைப்பை 2013-ல் தொடங்கினார்கள்.

ஆங்கிலத்தில் un என்ற சொல் இல்லை என்பதைக் குறிக்கும். 'கேன்சர் உங்களின் சக்தி அனைத்தையும் உறிந்துவிடும். ஆனால் அதில் இருந்து மீண்டு நோயின் தடம் இல்லாமல் தங்கள் பழைய வாழ்க்கைக்கு பாதிக்கப்பட்டவர்கள் திரும்ப வேண்டும் என விரும்பினோம். அதனால்தான் இந்த பெயர். என்னால் முடியாது என பின் வாங்காமல் நோயை எதிர்த்து போராடும் வலிமையை வலியுறுத்துகிறோம்' என்கிறார் கொடெலா.

'எங்கே குடும்பமும் மற்றவர்களும் நம்மை கைவிட்டு விடுவார்களோ என்ற பயத்தில் தங்களுக்கு கேன்சர் இருப்பதைக் கூட வெளிப்படையாக சொல்ல யோசிக்கிறார்கள் சிலர். வேலை போய்விடும், காதல் தோல்வி, திருமணத் தடை என அவர்கள் யோசிக்க நிறைய பிரச்னைகள் இருக்கின்றன. எனவே வெளிப்படையாய் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

ஆதரவின் அத்தியாவசியம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களால் மட்டுமே முடியும் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்டது இந்த அமைப்பு. கேன்சர் நோயாளிகளை சந்தித்து அவர்களை சகஜ வாழ்க்கைக்கு அழைத்து வருவதே இந்த அமைப்பின் லட்சியம்.

தன்னைப் போன்றவர்களின் துணை இருந்தால் கேன்சர் நோயாளிகள் விரைவில் குணமாகிறார்கள் என்கிறது ஆய்வு ஒன்று. சவால்களை எதிர்த்து போராடக்கூடிய வலிமையை அளிக்கிறது இந்த சூழல்.

கேன்சர் நோயாளிகள், அதிலிருந்து மீண்டவர்கள், சேவை செய்பவர்கள் ஆகியோர் இந்த அமைப்பின் தளத்தில் பதிவு செய்ய வேண்டும். அந்த தளத்தின் மூலம் தன்னைப் போன்றே பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்பு கொள்ளலாம். இங்கே நெகட்டிவ் விஷயங்கள் கிடையாது. கேன்சரில் இருந்து மீண்டவர்களின் தன்னம்பிக்கை கதைகள் மற்றவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கின்றன.

இந்த தளம் தனிப்பட்ட முறையிலும் குறிப்பிட்ட நபர்கள் மீது கவனம் செலுத்துகிறது. 'துறை சார்ந்த வல்லுனர்களையும் அழைத்து வந்து மக்களின் சந்தேகத்தை தீர்க்கிறோம்' என்கிறார் கொடெலா.

மேலும் நிறைய பயனாளர்களை ஈர்க்கும் வண்ணம் தங்கள் தளத்தை மாற்றி அமைத்து வருகிறார்கள் கொடெலா அண்ட் கோ.

2022-ல் 22 மில்லியன் புது கேன்சர் நோயாளிகள் உருவாவார்கள் என்கிறது உலக சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கை. இந்த பிரம்மாண்ட மக்கள்தொகையை சமாளிக்கும் மருத்துவ வசதிகள் நம்மிடையே இல்லை. இந்த இடத்தில் unCancer போன்ற அமைப்புகளின் உதவி மிக முக்கியமானதாக ஆகிறது.

'கேன்சரால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரையும் இணைத்து எங்களின் ஆலோசனை, வழிகாட்டுதல் தேவைப்படுவோருக்கு உதவவேண்டும் என்பதே எங்களின் குறிக்கோள்' என்கிறார் கொடெலா.

வெற்றி நிச்சயம்

இந்த அமைப்பை தொடங்கியபோது ஏராளமான சவால்களை சந்தித்திருக்கிறார் கொடெலா. 'நிறைய ஆசைகளோடு இந்த அமைப்பை தொடங்கினேன். டிபிஎஸ் வங்கி எங்களை நம்பியது. எங்கள் திட்டத்தில் முதலீடு செய்தது. எங்கள் அமைப்பு சிறப்பாக செயல்பட அனைத்து வசதிகளையும் அளிக்கிறது. அதே போல் டாடா இன்ஸ்டிட்யூட்டும் எங்களுக்கு ஊக்கம் அளிக்கிறது. இந்த ஆதரவு எங்களை மேலும் மேலும் சிறப்பாக செயல்பட தூண்டுகிறது' என்கிறார் கொடெலா.

கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் ஐடியாக்களுக்கு விருது வழங்கும் லிவ்ஸ்ட்ராங் பவுண்டேஷன் unCancer அமைப்பை டாப் ஐந்தில் ஒன்றாக தேர்வு செய்திருக்கிறது. இதன் மூலம் இந்த அமைப்பின் மீது உலகத்தின் பார்வை படிந்திருக்கிறது. இன்னும் ஏராளமானவர்கள் பயன் பெறுவார்கள்.

கேன்சரில் இருந்து மீண்டு மற்றவர்களுக்கு உதவத் தயாராய் இருக்கும் நண்பர்கள் தங்கள் விவரங்களை uncancerindia@gmail.com. என்ற ஐடிக்கு அனுப்பலாம். இந்த தளத்தில் பதிவு செய்துகொள்ள: UnCancer India , ஃபேஸ்புக் பக்கம் 

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

'கேன்சர் நோய்க்குப் பிறகும் ஒரு வாழ்க்கை இருக்கிறது'- மனிஷா கொய்ராலா!

இரு முறை புற்றுநோய், 5 புத்தகங்களின் ஆசிரியர், மனம் தளராத பெண்மணி நீலம் குமார்!