வாளுடன் வலம் வரும் 73 வயது கேரள மூதாட்டி!

3

மீனாட்சி ராகவன் குருக்கள் தன் முகத்தில் ஒரு மெல்லிய சிரிப்புடன் களத்தில் கம்பீரமாக நடந்து வந்து நிற்பார்...  அவர் கட்டிக்கொண்டிருக்கும் புடவை, மிதமான நகைகள் என்று தோன்றும் மீனாட்சியின் கைகளில் வளையளுக்கு பதில் இருப்பது என்ன தெரியுமா?? ஒரு கையில் வாளும் மறு கையில் கேடையத்தையும் ஏந்தி அவர் வந்து நிற்கும் களம் எதிரியை வீழ்த்தக்கூடிய வாள்சண்டை மைதானம்...

களரியின் பின்னணி

‘களரிப்பயட்டு’ என்ற பாரம்பரிய பண்டைய தற்காப்புக்கலை, கேரள மாநில தென்-மேற்கு பகுதிகளில் உருவான ஒன்று. அந்த கலையை பயின்றுள்ள மீனாட்சி ராகவன், பல வருடங்களாக அதில் பயிற்சி செய்து அதில் அசைக்கமுடியா வீராங்கனையாக திகழ்கிறார். மீனாட்சி அம்மா என்று அழைக்கப்படும் அவர், வாள்சண்டை மற்றும் கம்பு சுற்றுதலை ஒரு அழகிய நடன நிகழ்ச்சியை போன்று நிகழ்த்தி பார்வையாளர்களை பிரமிக்கவைப்பார். இன்றும் லாவகமாக இந்த பயிற்சிகளை செய்யும் மீனாட்சி அம்மாவின் வயது 73 என்றால் யாராலும் நம்பமுடியாத ஒன்றாக உள்ளது. கடந்த 68 ஆண்டுகளாக அவர் களரிப்பயட்டு கலையை செய்து வருகிறார் என்பது மற்றொமொரு ஆச்சரிய தகவல். 

கேரளாவில் வடகரா என்னும் ஊரில் ‘கடத்தநாடன் களரி சங்கம்’ என்ற பள்ளியில் சுமார் 15ப் பேருக்கு இந்த தற்காப்பு கலையை பயிற்றுவித்து வருகிறார் மீனாட்சி அம்மா. ஏழு வயதாக இருந்தபோது, தன் அப்பாவின் கையை பிடித்துக்கொண்டு முதன்முதலில் களரிப்பயட்டு கற்றுக்கொள்ள அந்த இடத்துக்கு சென்றது, இன்றும் அவருக்கு பசுமை நினைவாக இருப்பதாக பகிர்கிறார். தன் நினைவலைகளை பகிரும் அவர்,

“களரி அதாவது மைதானம்’ அங்கு என்னை என் தந்தை தாமு அழைத்துச்சென்றார். நான் சிறு வயதில் நடனம் கற்றுவந்தேன், அதனாலேயே என்னை களரியில் சேர்த்து விட்டார் என் அப்பா. அதுவும் ஒரு நடனத்தை போன்ற ஒரு கலையே. என் குரு, திரு.வி.பி.ராகவன் குருக்கள் எனக்கு களரி பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார்”, என்றார்.

களரியும் மீனாட்சி அம்மாவும்

கடத்தநாட் களரி சங்கம் 1949 இல் துவக்கப்பட்டது. விபி.ராகவன் குருக்கள் அதை தொடங்கி இன்றளவும் அங்கே கம்பீரமாக வீற்றிருக்கிறார். இந்த பண்டைய கலையின் சிறப்பை யாரும் சந்தேகிக்க முடியாது ஒன்று. புத்தமத துறவிகளின் எழுத்துக்களின்படி, தென்னிந்தியாவில் களரிப்பயட்டு பிரபலமாகவும், இந்த தற்காப்பு கலை 5 ஆம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் இருந்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் இதே கலை, கராத்தே, ஜூடோ என்று உருமாறியதாக கூறியுள்ளனர். 

வாழ்க்கையும் கலையும்

மீனாட்சி அம்மா பத்தாவது வரை மட்டுமே தனது ஊரில் பயின்றார், பின் தையல் கலையை கற்க சென்றார். பின் 17 வயதில் ராகவன் குருக்கள் அதாவது தனது குருவையே மணந்துகொண்டார். இதை கூறியவுடன் ‘இது காதல் திருமணம் அல்ல’ என்றும் விளக்கம் தருகிறார். களரியில் அவருக்கு இருந்த திறமையை மேம்படுத்தவும், அதை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச்செல்லவும் இவர்களது திருமணம் சரியாக இருக்கும் என்ற அவரது தந்தையின் ஆசையால் நிகழ்ந்த ஒன்று என்றும் கூறினார். 

”அப்போதெல்லாம் பெண்கள் விளையாட்டு துறையில் ஈடுபடக்கூட தடை இருந்தது, குறிப்பாக திருமணத்துக்கு பின்பு. ஒரு ஆண் செய்யும் அதே விஷயம் பெண்ணுக்கு சவாலான ஒன்றாக பார்க்கப்பட்ட காலம் அது. ஆனால் களரி என் குடும்பத்துக்கே பிடித்த ஒரு கலை. அதனால் எனக்கு என் குடும்பத்தாரின் முழு ஆதரவு என்றும் இருந்தது. அதிர்ஷ்டவசமாக அதை தொடர எந்த முட்டுக்கட்டையும் எனக்கு ஏற்படவில்லை,” என்றார். 

உடல், உள்ளம், ஆத்மா

களரிப்பயட்டுவில் உச்சத்தை தொட ஒருவர் பல கலை மற்றும் விளையாட்டில் தேர்ச்சியாக இருத்தல் வேண்டும். முக்கியமாக தற்காப்பு கலையில் சிறப்பாக இருத்தல் வேண்டும், அடுத்து உடல் வலிமை அதைவிட அவசியம். இதை தவிர, மெய் பயட்டு, வெரும்கை, கோல்தாரி, அங்கதாரி, குச்சிகள் கொண்டு சுத்துதல், கூர் ஆயுதங்கள் ஆன வாள், பட்டாக்கத்தி, ஈட்டி என்று எல்லாவற்றையும் இயக்க தெரிந்திருக்கவேண்டும். அடுத்து, களரி கலையில் மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளது. ஆயுர்வேதம் போன்று நரம்பு-தசை கோளாறுகள், எலும்பு கோளாறுகள் என்று பலவற்றுக்கு ‘மர்மம்’ என்று சொல்லப்படும் உடலில் உள்ள முக்கிய புள்ளிகள் கொண்டு தீர்வுகள் வழங்கமுடியும் என்று கூறினார் மீனாட்சி அம்மா. 

”நான் இந்த அனைத்தையும் கற்றுள்ளேன், இன்னமும் கற்றுக்கொண்டே இருக்கிறேன். இதற்கு முடிவே இல்லை...” என்கிறார் தன்னடகத்துடன். 

60 ஆண்டுகளாக குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு வாள் பயிற்சியில் சிறந்து விளங்கிவரும் மீனாட்சி அம்மா தனது எதிராளிகளை தோற்கடித்து, ‘குருக்கள்’ பட்டத்தை பெற்றார். ஆனால் பெரும்பாலும் இந்த கலையை பெண்கள் பலர் கற்காததற்கு காரணம் அதற்கு தேவையான உடல் வலிமை மற்றும் தைரியம். 

ஆனால் உண்மையில் இந்த கலை ஒரு பெண்ணை இன்னும் சக்திவாய்ந்தவராக ஆக்கும் என்கிறார் மீனாட்சி. இதை ஒரு உடற்பயிற்சியாக பார்க்காமல், உடல் மற்றும் மன வலிமையை மேம்படுத்தும் ஒன்றாக பார்க்கவேண்டும் என்கிறார். அதுவும் இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் தங்கள் எதிரிகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள களரி பெரிய உதவியாக இருக்கும் என்றார். 

மீனாட்சி ராகவன் குருக்கள் ஆன வளர்ச்சி

2009 இல் மீனாட்சி அம்மாவின் கணவரும் அவரது குருவான ராகன் மறைவுக்கு பின்னர் இந்த கலையை எடுத்து நடத்தும் பணி இவரை அடைந்தது. 

“என் கணவர் இறந்தபின், அவரின் அன்பு கலையான களரியை நான் எடுத்து நடத்த முடிவு எடுத்தேன். நான் அவருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவரால் தான் இன்று என்னால் பல குழந்தைகளுக்கு இந்த உன்னத கலையை கற்பிக்கமுடிகிறது,” என்றார்.

பேரன் பேத்திகளுக்கு பாட்டியாகி உள்ள மீனாட்சி அம்மாவுக்கு நான்கு பிள்ளைகள். அவர்கள் அனைவருமே களரியில் தேர்ச்சி பெற்றவர்கள். குடும்ப பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்கின்றனர். 

ஜூன் மாதம் முதல் செப்டம்பர் முதல் ஜேஜே’வென இருக்கும் இவரது பயிற்சி பள்ளியில் பல களரி நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. 73 வயதிலும், வருடத்திற்கு சுமார் 60 நிகழ்ச்சிகளில் தனது கலையை வெளிப்படுத்தும் மீனாட்சி அம்மா, பெங்களுரு, சென்னை என்று பல நகரங்களுக்கு பரந்துகொண்டே இருக்கிறார். 

இந்த வயதிலும் நான் களரி பயிற்சி மேற்கொள்கிறேன். நான் ஒரு திடமான பெண்மணி, என் எதிரில் வரும் எந்த சவாலையும் சமாளிக்கும் துணிச்சல் என்னிடம் உள்ளாது. என் பிள்ளைகள் எனக்கு ஆதரவாக உள்ளனர், அது என் தன்னம்பிக்கையை மேலும் உயர்த்துகிறது. கடவுளும் எனக்கு நல்ல உடல்நிலையை கொடுத்து என்னை வாழ்த்தியுள்ளார். இந்த பயணத்தை நான் தொடருவேன்,” என்கிறார் 

அடுத்த சந்ததிக்கு இக்கலையை எடுத்து செல்லும் பாட்டி

கேரளாவில் இன்றும் களரிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இங்கு பல பள்ளிகள் இந்த கலையை கற்று தருகின்றனர். இது ஒரு போட்டியாக கருதப்படுவதில்லை அதனால் மக்கள் இதை பெரிதாக எடுத்துக்கொளவதில்லை என்று நினைக்கிறேன் என்றார். ஆனால் தற்போது அரசு, களரிப்பயட்டுவை ஒரு முக்கிய விளையாட்டாக எடுத்துக்கொண்டு, பல உதவிகள் செய்ய முன் வந்துள்ளனர். 

”அன்றைய காலத்தில், கன் பவுடர் கண்டுபிடிப்புக்கு முன் களரிப்பயட்டுவை கொண்டே எதிராளிகளை போரில் வென்றனர் நமது வீரர்கள்.” 

களரி’யின் எதிர்காலம் பற்றி நம்பிக்கையோடு இருக்கும் மீனாட்சி அம்மா, நம் நாட்டில் இதற்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும் என்கிறார். அண்மையில் மீடியாவில் களரி கலைக்கு இடம் கிடைத்துள்ளது. களரிப்பயட்டுவில் சிறந்து விளங்கிய பலரின் பெயர்கள் வரலாறில் இடம் பெற்றுள்ளது. இன்றைய தலைமுறையினரும் இந்த பாரம்பர்ய கலையை கற்று அடுத்தடுத்து எடுத்துச்சென்றால் இன்னும் பல ஆண்டுகள் களரி உயிருடன் இருக்கும் என்று நிறைவு செய்தார் இந்த மூத்த வீராங்கனை. 

ஆங்கில கட்டுரையாளர் : பிஞ்சல் ஷா