'பேட்யூன்ஸ்' ரிங்க்டோன் பயன்படுத்தினால் ரீச்சார்ஜ் இலவசம்!

0

ஒரு ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன், ஒவ்வொருமுறை நம் மொபைலுக்கு அழைப்பு வரும்போதும் விளம்பர ஒலி ஒன்று ரிங்க்டோனாக ஒலிக்குமாறு செய்கிறது. ஒவ்வொரு அழைப்புக்கும் ஒவ்வொரு விளம்பர ஒலி மாறும். இது ஒவ்வொன்றுக்கும் சில புள்ளிகள் சம்பாதிக்கலாம். ஒரு நாள் இந்த புள்ளி எல்லாவற்றையும் சேர்த்து ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். இந்த செயலிக்கு "பேட்யூன்ஸ்" (Paytunes) என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

திவ்ய பிரதாப் சிங், ராகேஷ் சேகல் மற்றும் கவுரவ் திவாரி ஆகிய மூன்று பேரும் சேர்ந்து இந்நிறுவனத்தை உருவாக்கியிருக்கிறார்கள். திவ்ய பிரதாப் ஐஐடி டெல்லியில் படித்தவர், மென்பொருள் வல்லுனர். முன்பு 365ஹோப்ஸ்.காம் என்ற நிறுவனத்தை உருவாக்கினார். அது தோல்வியடையவே தன்னுடன் பயின்ற நண்பரான ரேகஷ் சேகலோடும் அவரது தொழில் பங்குதாரரான கவுரவ் திவாரியுடன் இணைந்து பப்ளிஃபை(publify) என்ற நிறுவனத்தை துவங்கினார். அதுவும் வெற்றியடையவில்லை.

எல்லோரும் மொபைல் வாடிக்கையாளர்களை குறிவைத்தே இயங்குவது பற்றி ஒரு நாள் எதேச்சையாக பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது இவர்கள் மொபைலில் ரிங்டோன் ஒலித்தபோது உதித்த ஐடியா தான் பேட்யூன்ஸ். சிலர் மொபைல் ஆப்களில் பேனர் விளம்பரங்களை காட்டுகிறார்கள். யூட்யூப் போன்ற சிலர் வீடியோ விளம்பரங்களை காட்டுகிறார்கள். வீடியோ விளம்பரங்கள் பாதி ஓடும்போதே அதை நிறுத்திவிட்டு வேறு பக்கம் சென்றுவிடும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு இருக்கிறது.

ஆனால் பேட்யூன்ஸ் வழங்கும் ரிங்டோன் செயலி என்பது புதுமுயற்சி, வித்தியாசமானது, இதுவரை யாருமே முயற்சிக்காதது என்பதால் சந்தையில் மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது. இந்த செயலி அளிக்கக்கூடிய விளம்பரங்கள் வாடிக்கையாளர்கள் விவரத்திற்கு ஏற்ப மாறக்கூடியது. எனவே ஒரு விளம்பரதாரர் தங்களுக்குப் பொருந்தக்கூடிய வாடிக்கையாளர்களை மட்டும் தேர்ந்தெடுத்து விளம்பரம் அளிக்கலாம்.

“வாடிக்கையாளர்கள் சில குறிப்பிட்ட விளம்பரங்களை டிஸ்லைக் செய்யவோ, வேண்டாம் என்று சொல்லவோ முடிவது போன்ற வாய்ப்புகளை வழங்கும் திட்டமிருக்கிறது” என்கிறார் திவ்ய பிரதாப்.

விளம்பரதாரர்கள் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களை மட்டுமே குறிவைத்து விளம்பரம் செய்ய முடியும் என்பது இந்த செயலியில் உள்ள சிறப்பம்சம். பாலினம், வயது, ஊர், பணி மற்றும் சில தகவல்களை பொருத்து ரிங்க்டோன்களை விளம்பரம் செய்ய முடியும். இது போன்ற செயலிகளை பயன்படுத்துபவர்களில் 30லிருந்து 35 சதவீதத்தினர் பயன்படுத்திப் பார்த்துவிட்டு உடனே அன்இன்ஸ்டால் செய்துவிடுவதாக திவ்ய பிரதாப் தெரிவிக்கிறார். ஆனால் சிலரோ பொழுதுபோகாத பொழுதெல்லாம் இந்த செயலியை திறந்து வேறு வேறு ரிங்க்டோன்களை கேட்கிறார்கள், எதோ பாட்டு கேட்பது போல. அவர்களுக்குப் பொழுது போனது போலவும் ஆனது, அதே சமயம் பாயிண்டுகளை சம்பாதித்து அதை வைத்து ரீசார்ஜ் செய்துகொள்ளவும் முடிகிறது என்கிறார் திவ்ய ப்ரதாப் வேடிக்கையாக.

ரிங்க்டோன்கள் தினமும் மாறுவது என்ற ஐடியா கேட்பதற்கு புதிதாக இருந்தாலும், பயன்படுத்துபவர்களுக்கு எப்படி இருக்கும் என்ற சந்தேகம் முதலில் எழுந்திருக்கிறது. 200பேரிடம் இந்த செயலியை கொடுத்து சோதித்தப் பிறகே இதை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த நிறுவனத்தை ஜூன் 2015ம் ஆண்டு துவங்கினார்கள். செப்டம்பர் 2015ல் வெற்றிகரமாக ஒருலட்சம் டாலர் நிதியை சிஐஒ ஏஞ்சல் நெட்வொர்க் மூலமாக திரட்டியிருக்கிறார்கள்.

இந்த செயலியை வெளியிட்ட ஒரே மாதத்தில் 25,000 பதிவிறக்கம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதற்காக எந்த விளம்பரமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா முழுவதும் இந்தச் செயலியை பரப்புவதற்காக அடுத்தக்கட்ட நிதி திரட்டலை பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த செயலியின் பீட்டா பதிப்பை 2015 அக்டோபர் மத்தியில் வெளியிட்டிருக்கிறார்கள். இதுவரை 50,000க்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதை பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்பவர்கள் என 33 வயதிற்குட்பட்டவர்கள். இப்போதைக்கு இளைஞர்களை குறிவைத்தே விளம்பரங்களை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தரவிறக்கம் வாரத்திற்கு 15லிருந்து 20 சதவீதம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஜனவரி இறுதிக்குள் இது ஒருலட்சம் தரவிறக்கம் என்ற இலக்கை எட்டும் என எதிர்பார்க்கிறார்கள். அடுத்த ஆறு மாதங்களில் ஒரு மில்லியன் பயனர்களை குறிவைத்திருக்கிறார்கள். அடுத்த காலாண்டில் 100 விளம்பரதாரர்களை எட்ட இலக்கு நிர்ணயித்திருக்கிறார்கள்.

கல்லூரிகளில் நிகழ்ச்சி நடத்துவதன் மூலம் இளைஞர்களிடம் இந்த செயலியை பிரபலப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். இதுவரை 100க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் வாய் வழி செய்தியாகவே எல்லோருக்கும் இந்த செயலி பரவுவதாக தெரிவிக்கிறார் திவ்ய பிரதாப்.

ஐசிஐசிஐ, ஃபிடிலிடி, பெப்சி, ஈசிகேப்ஸ், மஹிந்திரா மற்றும் சிலரோடு விளம்பரம் தொடர்பாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். இது இறுதிகட்டத்தை எட்டியிருப்பதாக தெரிவித்தார்கள். மேட்ஹவுஸ், ஓஎம்ஜி மற்றும் பிஎச்டி ஊடக குழுமம் ஆகியவர்களை சந்தித்து அவர்களிடம் விளம்பரம் பெற்றிருக்கிறார்கள்.

இந்தியாவின் டிஜிட்டல் விளம்பரத்துறையின் மதிப்பு 0.8 பில்லியன் டாலராக இருக்கிறது. 2018ல் இது 1.8பில்லியன் டாலராக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் விளம்பரத்திற்கு செலவிடுவது ஆண்டுக்கு 32 சதவீதம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது என்பதால் இந்தத் துறையின் வளர்ச்சி மிகபிரம்மாண்டமாக இருக்கும்.

யுவர்ஸ்டோரியின் ஆய்வு

ஸ்மார்ட்போன்கள் தொடர்பான சந்தை 60 சதவீதமாக இருக்கிறது. இதுதொடர்பான செய்திகள் ஏற்கனவே பலவும் எழுதப்பட்டுவிட்டன. இந்தத் துறையில் நிறுவனங்கள் எந்த அளவு செலவு செய்கிறார்கள் என்பதை பொருத்து இது மேலும் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைக்கு தங்களின் விளம்பர ஒதுக்குதலில் இரண்டு சதவீதத்தை மட்டுமே டிஜிட்டல் விளம்பரங்களுக்கு செலவிடுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இவையும் பேனர் விளம்பரங்களுக்கே செலவிடப்படுகின்றன.

எனவே ரிங்க்டோன் விளம்பரம் என்பது புதிதாக இருப்பதாலும் இந்தச் செயலியை பயன்படுத்துபவர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறார்கள் என்பதாலும் இந்த சந்தைக்கு மிகப்பெரிய வாய்ப்பு இருக்கும் என கணிக்கலாம்.

ஆங்கிலத்தில் : BINJAL SHAH | தமிழில் : Swara Vaithee