மம்முட்டியின் மலையாள பட ஹிரோயின் ஆன திருநங்கை அஞ்சலி அமீர்!

0

திருநங்கைகள் சமூகத்தில் இன்னமும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாத காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து வந்தாலும், மாலிவுட் அதாவது மலையாள திரையுலகம் இதில் ஒரு புரட்சியை செய்துள்ளது என்றே சொல்லவேண்டும். மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி தனது அடுத்த படத்தில் திருநங்கை அஞ்சலி அமீர் என்பவரை அறிமுகப்படுத்த உள்ளார்.

21 வயதான கோவையைச் சேர்ந்த மாடல் அஞ்சலி. அவர் கடந்து இரண்டு வருடங்களுக்கு முன்பு பாலின மாற்று அறுவைச்சிகிச்சைக்கு மேற்கொண்டு பெண்ணாக மாறியுள்ளார். ‘பேர்னபு’ என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைக்க உள்ளார் என்று டெக்கன் க்ரானிகல் செய்தி வெளியிட்டது. நடிகர் மம்முட்டி தனது முகநூல் பக்கத்தில் அஞ்சலி பற்றி பதிவிடுகையில், “அஞ்சலி அமீர், என் படமான பேர்னபு’வில் என்னுடன் நடிக்கிறார்,” என்று அறிவித்தார்.

எல்ஜிபிடி சமூகத்தை சேர்ந்தோர் பலர் தங்கள் உரிமைக்காக போராடி வரும் வேளையில் தன்னுடைய பாலினத்தை 19 வயதில் வெற்றிகரமாக அறுவைச்சிகிச்சை மூலம் மாற்றிக் கொண்டுள்ளார் அஞ்சலி. பெங்களுருவில் பட்டம் பெற்றுள்ள இவர் பல ஆண்டுகளாக பாலின உரிமைகள் போராட்டத்தின் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். 

ஒரு மாடலாக வலம் வரும் அஞ்சலி அதில் வெற்றிக் கண்டு தனக்கான பாதையை தேர்ந்தெடுத்துள்ளார். முழு நீள திரைப்படம் ஒன்றில் நடிக்கவிருக்கும் முதல் திருநங்கை அஞ்சலி என்றே சொல்லவேண்டும். மம்முட்டியுடனான தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்ட அஞ்சலி, 

“அவருடன் நடத்தது ஒரு சிறந்த அனுபவத்தை எனக்கு கொடுத்தது. அவரிடம் இருந்து திரையுலகம் பற்றியும் நடிப்பு பற்றியும் கற்றுக்கொண்டேன். அவருடன் நடிக்கும் போது சற்று பதற்றுடன் தான் இருந்தேன். ஆனால் அவர் என்னிடம் அன்பாகவும் மிகவும் உதவிகரமாக இருந்தார்,” என்றார். 

மாடலிங் துறையில் நுழைந்த அஞ்சலி அதில் வெற்றிகரமாக இருந்துவந்த நிலையில் திரைப்பட வாய்ப்பு அவருக்கு வந்தது. மலையாள படத்தை அடுத்து அவருக்கு தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அண்மையில் அஞ்சலி லாமா என்ற மாடல் அழகி லாக்மி பேஷன் வீக் நிகழ்வில் ரேம்பில் நடந்து அனைவரின் கவனத்தையும் பெற்றார், அதையடுத்து அஞ்சலி அமீரும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கட்டுரை: Think Change India