டிஜிட்டல் பரிவர்த்தனைகள் குறித்து மக்களுக்கு பயிற்றுவிக்கும் 24 மணி நேர டிவி சேனல் அறிமுகம்!

0

மக்கள் டிஜிட்டல் வர்த்தகம் மேற்கொள்ளவும், கட்டணங்களை ஆன்லைனில் கட்டுவதற்கும், அவர்களுக்கு போதிய இணைய அறிவு தேவைப்படுகிறது. இதற்காக, மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் 24 மணி நேர தொடர் சேவை இலவச டிவி சேனல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். ‘டிஜிஷாலா’ DigiShala என்று பெயரிடப்பட்ட இந்த சேனல் தற்போது ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் ஒளிப்ரப்படும் என்றும் விரைவில் பல்வேறு பிராந்திய மொழிகளில் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். 

டிடி நியூஸ் வெளியிட்ட செய்தியின்படி, 

“இந்திய மக்கள் தினசரி டிஜிட்டல் மூலம் பரிவர்த்தனைகள் செய்ய இந்த சேனல் ஊக்குவிக்கும். ஊரக மற்றும் புறநகர் பகுதிவாழ் மக்களுக்கு டிஜிட்டல் வர்த்தகம், இ-வாலட், UPI, USSD, ஆதார் மற்றும் டெபிட்/கிரெடிட் கார்டுகளை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி பல நிகழ்ச்சிகள் மூலம் இந்த சேனலில் ஒளிப்பரப்ப உள்ளோம்.”

தற்போது இந்த 24 மணி நேர சேனலில் நான்கு மணி நேர உள்ளடக்கம் உள்ளது. தூர்தர்ஷனின் வளங்களை பயன்படுத்தி இந்த சேனல் இயங்கி வருகிறது. 

“இப்போதைக்கு இந்த நிகழ்ச்சிகளை இடையிடையில் ஒளிப்பரப்புவோம். மக்களுக்கு போதிய கற்றலையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த செய்துள்ள முயற்சி இது. விரைவில் பல மணிநேரம் இதற்காக ஒதுக்க உள்ளோம்,” 

என்று பிசினஸ் ஸ்டாண்டர்ட்க்கு அளித்த பேட்டியில் மேலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஐடி துறை அமைச்சகத்தின்படி, பிரதமர் மோடி ரூ.500 மற்றும் ரூ.1000 மதிப்பிழப்பு செய்த நடவடிக்கையை தொடர்ந்து, 400-1000 சதவீதம் அளவிற்கு டிஜிட்டல் பரிவர்த்தனை பெருகியுள்ளது. இந்த வளர்ச்சி ’டிஜிஷாலா’ டிவி சேனல் நிகழ்ச்சிகள் மூலம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்ப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கட்டுரை: Think Change India