நாட்டின் முதல் பெண் வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் ரமாதேவியின் வெற்றி பாதை!

0

தக்க தருணத்தில் சிந்தித்து எடுக்கும் முடிவு, ஒரு நோடி தாமதித்தாலும், பயணிகளின் உயிருக்கும், விமானத்துக்கும் ஆபத்தாக முடியும் அபாயம், இவையெல்லாம் உள்ள வான் வழி போக்குவரத்தில் மிக முக்கியமான பணி வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் பணியாகும். ஆயுதப் படைகளுக்கான பணிகளுக்கு பெண்களை சேர்க்காத காலகட்டம் அது. அதன் மகத்துவம் பற்றி அதிகம் தெரிந்தறியாத சூழலில் தான் இந்திய கடற்படை சீருடையை ஏற்றார் இந்தியாவின் முதல் பெண் வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் ரமாதேவி.

இந்திய கடற்படை, ஜூலை 1992ல் தான் பெண்களுக்கு பணியிட வாய்ப்புகள் வழங்க ஆரம்பித்தது. குறுகிய கால சேவைக்காக, தன்னுடைய தேர்ந்தெடுத்த கிளைகளில் பணி அமர்த்தும் வாய்ப்பை கடற்படை வழங்கிய பொழுது, முதல் பெண்ணாக அதை பயன்படுத்தி கொண்டார் ரமாதேவி தொட்டத்தில்.

வாழ்கையின் பாதையை மாற்றிய அந்த தருணம்...

திருவனந்தபுரம் அருகில் நேமோம் என்ற குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த ரமாதேவி, தனது பட்டப்படிப்பிற்கு பின் அவருடைய தந்தை வழியில் மருத்துவ துறை அல்லது மேற் படிப்பு படித்து கல்வியாளர் ஆகும் நோக்கில் தான் இருந்தார். ஆனால் அவருடைய சகோதரர் காண்பித்த கடற்படைக்கான விண்ணப்பம் செய்யும் வாய்ப்பு, அவருடைய எதிர் காலத்தையே மாற்றி அமைத்தது.


ரமாதேவியின் சகோதரர் தேசிய மாணவர் படை பற்றி சொன்ன தகவல்கள் பிரமிப்பாகவும், தாய்நாட்டிற்கு தொண்டு செய்யும் வாய்ப்பை பற்றி சொல்லக் கேட்ட போது, அதன் மீதான ஆர்வத்தை தூண்டியதாக இருந்ததாகவும் கூறும் ரமா, இதுவே தன்னை கடற்படை நேர்காணலுக்கு விண்ணப்பிக்க உந்துதலாக அமைந்ததாக கூறுகிறார்.

மிகுந்த உற்சாகத்துடன் போபாலில் நடைபெற்ற நேர்காணலில் கலந்து கொண்டார் ரமா. " நான்கு நாட்கள் நடைபெற்ற கடினமான தேர்வினை வெற்றிகரமாக முடித்தேன், மருத்துவ பரிசோதனையை கடந்து இறுதியாக இந்திய கடற்படை தகுதி பட்டியலில், வான்வழி கட்டுப்பாடு பிரிவில் இடம்பெற்றேன்" என்று பூரிப்புடன் கூறுகிறார் ரமாதேவி

ஆண்களுக்கு இணையாக...

முதல் பிரிவில், மூன்று பெண்களில் ஒருவராக இந்திய கடற்படையின் வான் வழி கட்டுப்பாடு பிரிவில் சேர்ந்து, தனக்கான பாதையை ரமாதேவி அமைத்துக்கொண்டார்.

மிகுந்த சந்தோஷத்துடனும், உற்சாகத்துடனும் ஆகஸ்ட் 9, 1993 அன்று கோவாவில் உள்ள கடற்படை பயிற்சி பள்ளியில் சேர்ந்தார். முதல் நாளன்றே, கடினமான பயிற்சிக்கு உட்படுத்தப்பட்ட போது, இது தன்னை மிகுந்த சக்தி கொண்டவளாக மேம்படுத்தி, தாய் மண்ணை காக்க உதவும் என்று அறிந்து கொண்டார்.

இது நாள் வரை ஆண்கள் மட்டுமே பணி புரிந்த இடத்தில், சீருடை அணிந்து அவர்களுக்கு நிகராக பயிற்சிகள், அணிவகுப்பு மற்றும் ஆயுதங்கள் கையாள்வது போன்றவற்றை மிகவும் நேர்த்தியாகவும் அதே சமயம் அதற்கே உண்டான மிடுக்குடனும் செய்ததாக கூறுகிறார் ரமாதேவி.


"கடற்படை அகாடமியில் கடுமையான ராணுவ பயிற்சி: சரித்திரம் படைக்கப் போகிறோம் என்றே தெரியாமல் , தடைகள் பல கடந்து , முன் அனுபவம் ஏதுமின்றி வான் வழி பயிற்சி அகாடமியில் நடைமுறை தேர்வில் வெற்றி வாகை சூடியது மறக்க இயலாது. கோவா அகாடமி எனக்கு கடற்படை பயிற்சியின் உயர் மட்ட ஒழுக்கத்தையும், அங்குள்ள வலிமைமிக்க இயந்திங்களை ஆளுவதையும் கற்று கொடுத்தன. ஒரு கட்டுப்பாட்டாளராக, சிறிதளவும் தவறு நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டிய சவால்கள் மிக நிறைந்த பணியாக அமைந்தது." கட்டுபாட்டு மையம், அங்குள்ள கட்டுப்பாட்டளரும், போர் விமான ஒட்டுனரும் தொடர்பு கொண்டு பேசும் நிகழ்வுகள் ஒரு ஆங்கில அதிரடி சினிமாவுக்கு இணையாக இருக்கும்.

சவாலை சமாளிக்கும் ஆற்றல்...

சகிப்புத்தன்மை இல்லாத துறையில், செயல்முறை இணக்கம் மற்றும் ஒழுக்கம் மிகவும் அத்தியாவசியமானது. மிகுந்த மன அழுத்தம் தரக் கூடிய இந்த பணியில், எவ்வளவு இடர்பாடுகள், கடின சூழ்நிலை ஏற்பட்டாலும் அமைதியுடன் போர் விமானிகளுடன் அந்த அழுத்தமான சூழ்நிலையை காட்டிக்கொள்ளாமல் அதே சமயம் மிகச் சரியாக உரையாடுவது மிக இன்றியமையாதது.

வான் வழி கட்டுபாட்டளராக பத்து வருடம் (1993 முதல் 2003 வரை) கடற்படை வான் வழி போக்குவரத்தில் பணியாற்றியதில் மிகுந்த பெருமிதம் கொள்கிறார் ரமாதேவி.

புதிய வாய்ப்புகளை தேடி..

நிறுவன கோட்படுகள் படி, கடற்படை வான் வழி போக்குவரத்தில் நீண்ட நாள் பணி செய்ய அனுமதி இல்லை. ஆதலால் ரமாதேவிக்கு, ஓய்வூதியம் மற்றும் சலுகைகள் இல்லாத பதினான்கு வருடம் வரை நீட்டிப்பு கொடுக்க முன்வந்தனர். இதனை மறுத்து தனது பத்தாண்டு கால பணியுடன் முடித்து கொண்டார்.

முன்னாள் பெண் கடற்படையாளர் என்ற முத்திரையுடன், பெரிய நிறுவன பணியில் புதிய வாய்ப்புகளை தேடி தன் கவனத்தை திருப்பினார். மனித வள மேம்பாட்டு துறையில் இங்கிலாந்து நிறுவனம் ஒன்றில் இணைந்தார். பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி புரிந்துள்ள ரமாதேவி, ஒரு மதுபான நிறுவனத்தில் தொழில்துறை மற்றும் மனித வளம் மேம்பாட்டு பணியை மேற்கொண்டது தான் தனக்குமிகவும் சவாலாக இருந்ததாக கருதுகிறார். தொழிற்சங்கம் மற்றும் கலால் வரி ஊழியர்களை சமாளிப்பது தனக்கு மிகுந்த அனுபவத்தை கொடுத்ததாக கூறுகிறார். தற்போது பெங்களுருவில் இருக்கும் ஐ டி சி இன்போடெக் என்ற நிறுவனத்தில் திறன் மேலாண்மையின் உலக தலைவராக பணி புரிகிறார்.

ரமாதேவியின் தனிப்பட்ட வாழ்க்கை, பொழுதுபோக்குகள் ..

இந்திய கடற்படையில் பணிஓய்வு பெற்ற கணவர் கமாண்டர் மோகன்ராஜ் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் கொண்ட அழகான குடும்பம். ஓய்வுநேரத்தில் நிறைய படிப்பது, ஓவியம் வரைதல் மட்டுமின்றி ரமாதேவி தனக்கு பிடித்தவற்றை நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்ய தவறுவதில்லை. ஒரு சூப்பர் உமனாக இருக்க வேண்டியது அவசியம் இல்லை என கருதும் அவர், தன்னுடைய நிறை குறைகளை நன்கு அறிந்து அதற்கேற்றார் போல தன்னை தயார் படுத்தி கொள்வதாக கூறுகிறார். வீடு, வேலை ஆகிய எல்லாவற்றையும் சமமாக பார்ப்பதால், சமநிலையை எளிதாக பின்பற்ற முடிவதாக எண்ணுகிறார்.

பல துறையில் சாதித்த இவர் விளையாட்டாக, திருமதி சென்னை 2008 போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். தனித்துவமிக்க பெண்மணி என்ற வகையில் முதல் ரன்னர் அப் பரிசை வென்றுள்ளார்.

நமது கனவுகளுக்கும் நமக்கும் இடையே இடர்பாடாக இருப்பது நாம் மட்டுமே என்ற வலுவான எண்ணம் கொண்ட ரமாதேவி, "கனவுகள் நிச்சயமாக மெய்படும், உலகமே திரண்டு வந்து உங்களை தடுத்தாலும், உங்கள் கனவில் மீது அதீத நம்பிக்கை வைத்து அதை நிறைவேற்ற பாடுபட்டால் கனவுகள் மெய்படும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.

தன்னையே மேற்கோள்காட்டி அவர் கூறுகையில் "வலுவான பின்னணி இல்லாத போதும், ஆண்கள் மட்டுமே ஆட்கொண்ட ஒரு துறையில் என்னால் சாதிக்க முடிந்ததென்றால், இன்றைய இளைய தலைமுறை நிச்சயமாக அவர்களுக்கான வலுவான பாதையை அமைத்து வெற்றி பெற முடியும்"