அஞ்சேல் 13 | நேர்த்தி நோக்கி செல் - இயக்குநர் ஸ்ரீகணேஷ் [பகுதி 2]

'8 தோட்டாக்கள்' மூலம் கவனம் ஈர்த்த இளம் இயக்குநர் பகிரும் அனுபவக் குறிப்புகளின் நிறைவுப் பகுதி.

2

(தமிழ்த் திரைத்துறையின் நம்பிக்கை நட்சத்திரங்கள் தாங்கள் எதிர்கொண்ட சவால்களையும், மேற்கொண்ட போராட்டங்களையும் பகிரும் தொடர்.)

நான் ஒரு பயங்கர 'இன்ட்ரோவெர்ட்' நபர். அறிமுகம் இல்லாத நபர்களிடம் இயல்பாக பேசமுடியாது. திடீரென யாரோ ஒருவரைப் பார்க்க வேண்டும்; அவரிடம் கதையைச் சொல்லி அதை ஏற்கவைக்க வேண்டும் என்ற சூழல்தான் நான் வாய்ப்பு நாடும்போது சந்தித்த முதல் சவால்.
இயக்குநர் ஸ்ரீகணேஷ்
இயக்குநர் ஸ்ரீகணேஷ்

திரைமொழியில் திறமையைக் காட்டுவது என்பது வேறு; பேச்சுமொழியில் பிறரை வசீகரிப்பது என்பது வேறு. முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடமும் இயல்பாகவும் சுவாரசியமாகவும் பேசவேண்டிய நிலை இருப்பதுதான் தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குநர்களுக்கு மிகப் பெரிய சவால். நானும் அதை நிறையவே எதிர்கொண்டேன்.

சிலருக்கு மிகச் சிறப்பாக ஸ்கிரிப்ட் எழுத வருமே தவிர, தாங்கள் எழுதியதை சுவாரசியமாகச் சொல்லி விவரிக்கத் தெரியாது. ஆனால், தமிழ் சினிமாவில் ஸ்க்ரிப்டை சொல்லும் கலையில் தேர்ந்திருப்பது ஆரம்ப நிலையில் மிக முக்கியமானது. ஓர் இயக்குநருக்கு பிறரை ஈர்க்கும் வகையில் கதை சொல்லும் திறமை இருப்பதே இங்கு முழுமுதற் தகுதியாக இருப்பதுதான் இன்னமும் கவலை அளிக்கிறது.

சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் ஸ்கிரிப்டை வாங்கிப் படித்து வாய்ப்பை இறுதி செய்யும் முறையைப் பின்பற்றுவதே இரு தரப்புக்குமே சரியான முறையாக இருக்கும் என்று நம்புகிறேன். என் ஸ்கிரிப்டை எதிரே இருப்பவர் ரசிக்கும்படி சொல்ல முடியாமல் போனதாலேயே வாய்ப்புகளை இழந்திருக்கிறேன். நான் பலரிடமும் கதை சொல்லிச் சொல்லி, அது எடுபடாமல் போனதால், ஒரு கட்டத்தில் எனக்கு கதையே சொல்ல வராதோ என்று சோர்வடைந்தேன். இந்தப் பிரச்சினைகளைத் தாண்டி, நான் முதல் படம் எடுக்கும் வரை எத்தனையோ நண்பர்கள் உதவியிருக்கிறார்கள். 

"நாம் நம்மை மட்டுமே யோசிக்கக் கூடாது, மனிதன் என்பவன் நண்பர்கள், குடும்பம், சுற்றம் எல்லாமும் சேர்ந்தவன்தான் என ஆழமாக நம்புகிறேன்." 

'மெட்ராஸ்' திரைப்படத்தின் வெற்றிக்குப் பின், அன்பு கதாபாத்திரத்தால் கலையரசன் மிகவும் கவனிக்கப்பட்டார். நான் உதவி இயக்குனராக இருந்த காலகட்டங்களில் இருந்து அவர் பழக்கம். மிஷ்கின் அலுவலகத்துக்கு அடிக்கடி வருவார். அவர் சொல்லிவிட்டு, ஒரு பெரிய நிறுவனத்தில் கதை சொல்ல போயிருந்தேன். நமக்கு கதை சொல்ல வராது, கதை சொன்னாலும் இந்த நிறுவனம், பிரமாண்டமான, கமர்ஷியல் படங்கள் எடுப்பவர்கள் - அவர்களுக்கு பிடிக்காது என்கிற தாழ்வு மனப்பான்மையுடன் சென்றேன். அது '8 தோட்டாக்கள்' அல்ல - வேறொரு ஸ்கிர்ப்ட்.

சினிமாவில் எந்த இடத்தில் எந்த மாதிரியானவர்கள் இருப்பார்கள் என்று கணிக்கவே முடியாது. நம்மளவில் சரியாக செயல்பட்டு வந்தால், யாரால் கவனிக்கப்படுவோம்; எப்படி வாய்ப்பு அமையும் என்றே தெரியாது. சரியான நேரத்தில் அவசியமான வாய்ப்புகள் அமைந்துவிடலாம். அப்படி என்னை கவனித்து, '8 தோட்டாக்கள்' உருவாகக் காரணமாக இருந்தவர் லைன் புரொட்யூஸர் கார்த்திகேயன் சார். என் ஸ்கிர்ப்ட்டை ஒரே இரவில் முழுமையாக படித்துவிட்டு, அவ்வளவு உற்சாகத்துடன் பேசினார். இது கண்டிப்பாக மிக நல்ல படமாக வரும், நீங்க தைரியமா இருங்க என உற்சாகப்படுத்தினார். அவருக்கு இலக்கிய வாசிப்பும், திரைப்பட ரசனையும் அதிகம். பாலு மகேந்திரா சாரிடம் மாணவனாக இருந்திருக்கிறார். பட வேலைகள் ஆரம்பித்து, டெஸ்ட் ஷீட் வரை போய் வேறு சில காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது. ஆனாலும் என்னை அழைத்துக்கொண்டு, கதை சொல்ல நிறைய நிறுவனங்களிடம் ஏறி இறங்கினார். இன்னொரு திரைக்கதையும் எழுதினேன். இன்னும் சில நண்பர்களும் உதவினார்கள். அதற்குப் பிறகும், இரண்டு படங்கள் ஆரம்பித்து சில வேலைகளுடன் டிராப் ஆனது. 

2 ஆண்டுகள் போராட்டமான காலகட்டம் - படம் டிராப் ஆவது உங்களை வெளியே தலைகாட்டவே பயப்பட வைக்கும்.

இந்தச் சூழலில் கார்த்திக் சார் வந்து, 'ஒரு புதுமுக நடிகருக்கான படம் இயக்க வேண்டும், உங்களால முடியுமா யோசிச்சு சொல்லுங்க' என்றார்.

தமிழ் சினிமாவில் ஹீரோ மிகவும் முக்கியம். அவர்கள்தான் ஒரு படத்தின் முகமாக இருக்கிறார்கள். நம்மை மட்டுமே நம்பி, ஒரு படத்தை எடுக்க முடியுமா என இரண்டு நாட்கள் தீவிரமாக யோசித்தேன். தோற்றால் தூக்கி எறியப்படுவோம் என தெரியும். இறுதியில் நம்மை நிரூபிக்க ஒரு வாய்ப்பு மட்டும்தான் வேண்டும் என தீவிரமாக முடிவெடுத்தேன். அந்த வாய்ப்பை ஒப்புக்கொண்டேன்.

புதுமுக நடிகர் வெற்றியை மனதில்கொண்டு '8 தொட்டாக்கள்' திரைக்கதையை அமைத்தேன். சிறிய குழு, குறைவான பட்ஜெட் என பெரிய வசதிகள் இல்லாமல் பட வேலைகளை வேகமாக நடத்திச் சென்றோம். தயாரிப்பாளர்களிடம் தலையீடு என எதுவுமே இல்லை. பாடல்கள் எல்லாம் கூட அவர்கள் வியாபாரத்திற்கு உதவுமே என நினைத்து, நானாக செய்த காம்ப்ரமைஸ்கள் தான்.

'8 தோட்டாக்கள்' வெளியான பிறகு, சினிமா ஆர்வலர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேவேளையில், ஒரு சில தரப்பினர் தெளிவான புரிதலின்றி விமர்சித்தனர். பொதுவான பார்வையாளர்களுக்கு இன்ஸ்பிரேஷன், அடாப்டேஷன், காப்பி ஆகிய மூன்றுக்கும் நுணுக்கமான வித்தியாசம் தெரியாது. ஆனால், இம்மூன்றுக்கும் தீவிர சினிமா ஆர்வலர்களுக்கும், விமர்சனம் செய்பவர்களுக்கும் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் என்று நம்புகிறேன். ஒரு திரைக்கதையாக பார்த்துப் பார்த்து நுணுக்கமான எழுதின ஒரிஜனல் படம்தான் '8 தோட்டாக்கள்'. நானும் இளம் படைப்பாளிகள் பலரைப் போல் உலக சினிமா பார்த்தும், இலக்கியம் வாசித்தும் எனக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்களை நம் படைப்புக்குள் கொண்டுவர விரும்புகிறேன். எனக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியவற்றை என் திரைக்கதையில் நம் சூழலுக்குத் தகுந்தபடி பயன்படுத்துகிறேன். இது, எல்லாவிதமான படைப்புலகிலும் இயல்பாக நடக்கக் கூடிய ஒன்றுதான்.

'8 தோட்டாக்கள்' படத்தைப் பொறுத்தவரை எனக்குத் தாக்கத்தை ஏற்படுத்திய படைப்புகளுக்கும் படைப்பாளிகளுக்கும் திரையிலேயே கிரெடிட் கொடுத்திருந்தேன். அந்தக் க்ரெடிட்டைப் பார்த்தபிறகு, அதில் இடம்பெற்ற படத்தைத் தேடிப்பிடித்துப் பார்த்து என் படத்தை காப்பி என்று சொன்னவர்களும் எழுதியவர்களும் உண்டு. தாங்கள் கவனம் ஈர்க்கப்பட வேண்டும் என்பதற்காக இப்படிச் செய்பவர்களிடம் விளக்கம் அளிப்பது வீண் செயல். நான் எடுத்துக்கொண்டது சின்ன இன்ஸ்பிரேஷன்ஸ் என்றாலும், அது நம் திரைக்கதைக்குள் வந்துவிட்டது என்றவுடன் உரிய கிரெடிட் கொடுப்பதுதான் நேர்மையான செயல். எனக்கு அப்படிச் செய்வதில் எந்தத் தயக்கமும் இல்லை. நாம் இப்படிச் செய்வதன் மூலம் தமக்கு ஏற்படும் தாக்கங்களை ஒட்டி திரைக்கதை எழுதுவோர் அவற்றுக்கு உரிய கிரெடிட் கொடுப்பதை தயக்கமின்றி வழக்கமாகக் கொள்ளட்டுமே என்ற விருப்பமும் எனக்கிருந்தது. அதேநேரத்தில், நான் கிரெடிட் கொடுத்திருந்த படத்தை ஏற்கெனவே பார்த்திருந்த விமர்சகர்கள், '8 தோட்டக்கள்' படத்தின் தனித்தன்மைகளை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு பாராட்டியது மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அளித்தது.

அடுத்தப் படத்துக்கு உடனே கமிட் ஆகாமல் சற்றே நிதானம் காட்டுகிறேன். இந்த ஆறு மாத காலம் நல்ல சினிமா பார்ப்பது, சிறந்த இலக்கியங்களை வாசிப்பது, பயணங்களை மேற்கொள்வது போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறேன். ஒரு திரைப் படைப்பாளியாக என்னை அப்டேட் செய்துகொள்வதற்கு இவை அனைத்துமே அவசியம். அப்போதுதான், அடுத்தடுத்த படைப்புகள் முந்தைய படைப்புகளைவிட நேர்த்தியானதாக உருவாகும் என்று நம்புகிறேன். முன்னர் எழுதிய திரைக்கதைகளை, இப்போது படிக்கும்போது அவற்றில் உள்ள குறைகள் தெரிகிறது. அதனால் வேறொரு திரைக்கதை எழுதுவோம் என முயற்சித்து வருகிறேன்.

ஒரு குடிசைவாழ்ப் பகுதியை மையமாக வைத்து ஒரு கதையை எழுதி இருந்தேன். அதைத் திரைக்கதை வடிவம் ஆக்குவதற்காக, அந்தக் களம் சார்ந்த மனிதர்களைச் சந்தித்தேன். அப்போது நான் எழுதியதற்கும், நிஜத்தில் நான் பார்த்ததற்கும் பெரிய இடைவெளி இருப்பதை உணர்ந்தேன். உடனே அந்தக் கதையைக் கிடாசிவிட்டு, அந்த மக்களின் நிஜ வாழ்க்கைக்கு நெருக்கமான கதை ஒன்றைத் தேடி நகரத் தொடங்கினேன். ஒரு எழுத்தாளன் தான் எழுதும் கதைக்கு, ‘Emotionally True’ ஆக இருக்க வேண்டும் என நம்புகிறேன்.

அறிமுக இயக்குநர்களுக்கு தங்களது முதல் படத்தைத் திரையில் பார்ப்பதே பெரிய கனவாக இருக்கும். அந்தக் கனவு எனக்கு மெய்ப்பட்டுவிட்டது. அத்துடன், எனக்குக் கிடைத்த வெளிச்சமும் மனநிறைவு தந்திருக்கிறது. இப்போதைக்குக் கடைசியாக ஒன்றை மட்டும் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக உங்களிடம் பகிர விரும்புகிறேன். சினிமா படைப்புலகில் மக்களின் பாராட்டுகளைப் பெறுவதற்காகவே என் முதல் படத்தை எடுத்தேன். எனக்கு நிறைவு தரும் பாராட்டும் கிடைத்துவிட்டது. புகழ், பாராட்டு மீதான பிரமைகள் உதிரத் துவங்கியிருக்கின்றன.

'மக்களுக்கு நாம் என்ன கொடுக்கப் போகிறோம், நம் கலைக்கான தேவை என்ன' என்கிற புரிதலுக்கு வந்திருக்கிறேன். யோசிக்கத் துவங்கியிருக்கிறேன். பயணிப்போம்!

ஸ்ரீகணேஷ் (29): தமிழ் சினிமாவுக்கு 2017 அளித்த நம்பிக்கையூட்டும் இளம் திரைப் படைப்பாளிகளுள் ஒருவர். '8 தோட்டாக்கள்' மூலம் தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்தவர். நட்சத்திர பின்புலம் இல்லாத நிலையிலும், கச்சிதமான திரைக்கதையாலும், வசனத் தெறிப்புகளாலும் அனைத்து தரப்புப் பார்வையாளர்களுக்கும் நிறைவை ஏற்படுத்தியவர். மக்களுக்கு அதிகம் காணக் கிடைக்கின்ற பொழுதுபோக்கு சினிமாவில் உருப்படியான திரைப்படங்களை படைப்பதற்கு முனையும் இளம் இயக்குநர்களில் ஒருவர். நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் எனும் அசாத்திய நடிப்புக் கலைஞனின் ஆற்றலை வெளிப்படுத்தற்கு திரைக்கதையில் இடமளித்த படங்களில் இவரது '8 தோட்டாக்கள்' மிக முக்கியமானது.

'அஞ்சேல்' தொடரும்...

முந்தைய அத்தியாயம்: அஞ்சேல் 12 | மாற்றத்தை ஏற்றுக்கொள் - இயக்குநர் ஸ்ரீகணேஷ் [பகுதி 1]

இணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்!

Related Stories

Stories by கீட்சவன்