'பிரச்னைக்கான தீர்வே எங்களின் கண்டுபிடிப்புகள்'– தமிழக இளம் விஞ்ஞானிகள் பவித்ரா, இலக்கியா

3

“வித்தியாசமாக சிந்திக்க உங்களுக்கு துணிவிருந்தால் அறியப்படாத விஷயங்களுக்கு சவால் விடும் ஆற்றலும் உங்களுக்கு இருக்கிறது என்றே அர்த்தம்”. 

அப்துல் கலாமின் இந்த பொன்மொழிகளுக்கு ஏற்ப இளம் விஞ்ஞானிகள் பவித்ராவும் இலக்கியாவும் அறிவியல் பயம் அறியாமல் கண்டுபிடிப்புகளின் நாயகிகளாகத் திகழ்கின்றனர். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் தேசிய விருது பெற்று வந்திருக்கும் இந்த சகோதரிகள் சாதனையாளர்களாக மாறிய வெற்றிகதையை பதிவு செய்கிறது தமிழ் யுவர்ஸ்டோரி:

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் தொடங்கிய இந்த இளம்விஞ்ஞானிகளின் கதை தற்போது குடியரசுத் தலைவர் விருதுவரை சென்றிருக்கிறது. 

“தினசரி வாழ்வில் எதிர்கொண்டுவரும் பிரச்னைகளுக்கு அறிவியல்பூர்வமாக தீர்வுகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் தொடங்கினோம். சோதனைக்கூடங்கள் அமைக்கவில்லை, அதற்கு பதிலாக சமூகத்திலிருந்தே பிரச்னைகளை தேர்வு செய்து அதற்கு தீர்வு காணத் தொடங்கிய பயணம் இப்போது மிகத்தீவிரமான ஆராய்ச்சியாக மாறியுள்ளது” 

என்கிறார் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவரும் பவித்ரா.

விவசாயத்திற்கு உதவும் கருவிகள்

விவசாயப் பின்னணியில் வளர்ந்துவரும் பவித்ராவின் கண்டுபிடிப்புகள் எளியவர்களின் வாழ்வுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது. “விளைச்சல் பருவத்தில் களைச் செடிகளை அகற்றுவதற்கு அதிகளவு செலவு செய்ய வேண்டியுள்ளதை கண்டோம். தேவையற்ற செடிகளை பிடுங்கும் இயந்திரத்தை வடிவமைத்திருத்திருக்கிறோம்” என்கிறார் பவித்ரா. இப்படி, உரமிடும் கருவி, களை எடுக்கும் கருவி, மரவள்ளிக் கிழங்கு பிடுங்கும் கருவி என விவசாயத்திற்கு உதவியாக 10 விதமான கண்டுபிடிப்புகளை நிரூபனம் செய்துள்ளார் அவர்.

“எனக்கு எதையுமே வித்தியாசமாக செய்து பார்க்க பிடிக்கும், என் அப்பாவும் சிறு வயது முதலே என்னிடம் அதைத் தான் கூறி வளர்த்தார். இந்தத் திறன் எனக்கு சிறு வயது முதலே தொடங்கியது என்று கூட சொல்லலாம்” என்கிறார் பவித்ரா. 

நான் 4வது படிக்கும் போது பள்ளியில் பொங்கல் பண்டிகைப் பற்றி ஒரு கட்டுரை எழுதச் சொல்லி இருந்தார்கள். அதை வெறும் வார்த்தைகள் நிறைந்த கட்டுரையாக வழங்க எனக்கு விருப்பமில்லை அதனால் அதை என் திறனுக்கு சவாலாக எடுத்துக் கொண்டு மற்றவர்களைவிட வித்தியாசமான வகையில் அந்த கட்டுரையை சமர்ப்பித்தேன். அந்த படைப்புக்கு பள்ளி முதன்மை ஆசிரியர் நேரில் அழைத்து பாராட்டி பரிசளித்தது அந்த வயதில் எனக்கு ஒரு பெரிய உந்துதலை அளித்தது. அதன் தொடர்ச்சியே கண்டுபிடிப்புகளுக்கு அச்சாரமிட்டது” என்கிறார் இந்த டீன் ஏஜ் பெண். 

தன் கண்டுபிடிப்புகளுக்காக மூன்று தேசிய விருதுகளைப் பெற்றுள்ள 14 வயது பவித்ரா, ஆண்டுதோறும் நடைபெறும் ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சியில் 2012 முதல் பங்கேற்று மாவட்ட, மாநில மற்றும் தென்இந்தியா அளவிலான விருதுகளையும் அள்ளி வந்திருக்கிறார்.

பிரச்சனைகளின் தீர்வே கண்டுபிடிப்புகள்

பவித்ராவின் கண்டுபிடிப்புகளுக்கு சவால் விடும்வகையில், தினசரி மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்னைகளுக்கான தீர்வை இலக்கியா முன்னெடுத்து வருகிறார்.

“எனது கண்டுபிடிப்புகள் பிரச்சனைக்கு தீர்வாக அமையவேண்டும் என்பதில் முடிவாக இருக்கிறேன்” என்கிறார் இலக்கியா. 

நேரம் பொருத்தப்பட்ட கொசு ஒழிப்பு இயந்திரம், தென்னைமரத்தில் எலித்தொல்லையை கட்டுப்படுத்தும் கருவி ஆகியவை இலக்கியாவின் கண்டுபிடிப்புகளாகும். இலக்கியா கண்டுபிடித்த பாதாள சாக்கடையை சுத்தப்படுத்தும் கருவிக்கு 2014ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சியில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய விருது கிடைத்துள்ளது.

ஆரோக்கியமான போட்டி

பொதுவாக சகோதரிகள் என்றால் ஆடை, அணிகலன்கள் விஷயத்தில் போட்டி இருக்கும் ஆனால் இந்த சகோதரிகள் சற்று வித்தியாசமானவர்கள். இவர்களுக்குள் இருக்கும் போட்டி அறிவியல் கண்டுபிடிப்புகளில். “என் தங்கை இலக்கியா என்னைவிட படு சுட்டி, நான் 6ம் வகுப்பு படிக்கும் போது அவள் 3ம் வகுப்பு தான் படித்தாள் ஆனால் அப்போதே எனக்கு போட்டியாக கண்டுபிடிப்பு களத்தில் குதித்து விட்டாள் என்று புன்னகைக்கிறார் பவித்ரா. இலக்கியா தன்னுடைய கண்டுபிடிப்புகளை என்னிடம் கூடி பகிர்ந்து கொள்ள மாட்டாள்" என்று அறிவியல் களத்தில் தங்களுக்கு இருக்கும் ஆரோக்கியமான போட்டியை பகிர்ந்து கொள்கிறார் பவித்ரா.

பவித்ராவும் இலக்கியாவும் தனித்தனியே தங்களது கண்டுபிடிப்புகளை செய்து வருகின்றனர். எனினும் அண்மையில் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு புதிய கருவியை உருவாக்கியுள்ளனர். 

“எங்கள் வீட்டைச்சுற்றி கைத்தறி துணி தயாரிக்கும் பல்வேறு எந்திரங்கள் உள்ளன. நோய்வாய்ப்பட்ட ஒருவர் கால்கள் செயல்படாததால் தறித் தொழிலை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். இதனால் அவரது அன்றாட பிழைப்பு திண்டாட்டமாகிவிட்டது இதைக் கண்ட எனக்கு ஏன் இதற்கு தீர்வு காணும் ஒரு கருவியை உருவாக்கக் கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது” என்கிறார் பவித்ரா. 

புதிய கருவி பற்றிய எண்ணத்தை அம்மா, தங்கையிடம் தெரிவித்தேன். அவர்கள் இதற்கு உதவத் தயாராக இருந்தனர். முதலில் இது தொடர்பாக ஒரு வரைபடத்தை உருவாக்கினேன், பின்னர் என் தங்கை இலக்கியாவின் ஆலோசனைப்படி மாற்றங்கள் செய்து பின்னர் அதற்கு உருவம் கொடுத்தோம். ஊனமுற்றவர்கள் கால்களைப் பயன்படுத்தாமல் சென்சார் உதவியுடன் பெடலை உபயோகிக்கும் தறி எந்திரத்தை கண்டுபிடித்துள்ளனர் இவர்களின் இந்த புதிய முயற்சிக்கு தேசிய விருதை வென்று வந்துள்ளனர் இந்த இளம்கன்றுகள்.

மறக்க முடியாத தருணம்

“2015 நவம்பர் மாத இறுதியில் அகமதாபாத்தில் குடியரசுத்தலைவரிடம் எங்களது கண்டுபிடிப்பு பற்றி நேரில் விளக்கமளித்த தருணத்தை மறக்கவே முடியாது என்கிறார் பவித்ரா. நானும் தங்கை இலக்கியாவும் ஒரே மேடையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கையில் விருது பெற்றது உண்மையில் நெகிழ்ச்சியான தருணம். இது எங்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் விஷயம் என்றும் கூட சொல்லலாம்" என்கிறார் அவர். 

நான் Ignite award 2013ல் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடமும் தேசிய விருதை பெற்றுள்ளேன். தொடர்ந்து இரண்டு குடியரசுத் தலைவர்களிடம் இருந்தும் தேசிய விருதை பெற்றதில் பெருமிதம் அடைவதாகக் கூறுகிறார் அவர். விருது பெற்ற தருணம் பற்றி கூறிய இலக்கியா,

“என்னுடைய எதிர்கால லட்சியமே அப்துல்கலாம் போல ஒரு சிறந்த விஞ்ஞானியாக வேண்டும் என்பது தான் அதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் எங்களுடைய கண்டுபிடிப்பிற்கு அவர் பெயரிலேயே (DR APJ ABDUL KALAM IGNITE 2015) தேசிய விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியின் உச்சகட்டம்” என்கிறார்.

கடவுளின் பரிசு; பெற்றோர்

சுறுசுறுப்புடன் இத்தனை சிறு வயதிலேயே கண்டிப்பான கணீர் குரலில் பேசிய 11 வயது இலக்கியா தன் அன்றாட அலுவல்களை பட்டியலிட்டார்,

“எந்த ஒரு விஷயத்தையுமே வித்தியாசமா உற்றுநோக்கணும்னு எங்ககிட்ட அப்பா சொல்லுவாங்க. என்னுடைய அம்மாவும் என் கண்டுபிடிப்புக்கு நிறைய உதவி செய்வாங்க. பெற்றோர் எங்களுக்கு கடவுள் கொடுத்த பரிசு” என்று சிலிர்க்கிறார் இலக்கியா.

“எதையுமே திட்டமிட்டு செய்ய வேண்டும் என்பது என் பழக்கம். தினமும் காலையில் 5.30 மணிக்கெல்லாம் எழுந்திடுவோம், வீட்டுப்பாடம் முடித்து பள்ளிக்குக் கிளம்பி சென்றுவிடுவேன், மீண்டும் 4.30 மணிக்கு வீட்டுக்கு வந்ததும் அரை மணி நேரம் விளையாடி விட்டு மீண்டும் பள்ளிப்பாடத்தை படிக்கத் தொடங்கிவிடுவேன் என்று தன் ஒரு நாள் அலுவலை நம்முடன் பகிர்ந்து கொண்டார் இலக்கியா. 

“எங்கள் வீட்டில் தொலைகாட்சிப் பெட்டி கிடையாது அதனால் பள்ளிப்பாடத்தை முடித்து விட்டு அப்பா எங்களுக்காக ஏற்படுத்தி வைத்திருக்கும் குட்டி நூலகத்தில் உள்ள புத்தகங்களை படிக்கத் தொடங்கிடுவேன். நாங்கள் வெளியே எங்கு சென்றாலும் அங்கு புத்தகங்களை வாங்கி சேகரித்து வைத்துக் கொள்வது எங்களின் பழக்கம்"என்கிறார் அவர். 

11 வயது சிறுமிக்கு இந்த அளவு அறிவு, தைரியம் மற்றும் மனஉறுதியை புகட்டி இருப்பதற்கு நிச்சயம் அவரின் பெற்றோர் முக்கியக் காரணம் என்பதை மறுக்க முடியாது.

தன்னம்பிக்கை தாய்

இளம்விஞ்ஞானிகள் பவித்ரா, இலக்கியாவின் தாயார் ராதாவிடம் பேசத்தொடங்கிய போது அவர் சோகத்தில் சிக்கித் தவிக்கிறார் என்பதை உணர முடிந்தது. தனக்கும் தன் குழந்தைகளின் கண்டுபிடிப்புகளுக்கும் ஆதாரமாக விளங்கிய ராதாவின் கணவர் ராஜசுரேந்திரன் அண்மையில் மாரடைப்பால் அகால மரணம் அடைந்திருந்தார். 

“என் கணவரும் நானும் குழந்தைகளே உலகம் என்று வாழ்ந்து வந்தோம். தொலைகாட்சி, பெற்றோர் குழந்தைகள் இடையே இருக்கும் இடைவெளியை அதிகரித்து, அதிக நேரத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும் என்பதால் எங்கள் வீட்டில் இது நாள் வரை டிவி இல்லை” என்கிறார் ராதா. 

என் கணவர் குழந்தைகளுக்கு மட்டுமல்ல எனக்கும் நல்ல உறுதுணையாக இருந்தார், கல்லூரி படிப்பு முடித்த 6 மாத காலத்திலேயே எனக்கு திருமணமாகிவிட்டது. அதனால் படித்து முடித்து வேலைக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பின்னர் குழந்தைகள் பிறந்து விட்டதால் அதைப் பற்றி யோசிக்கவும் முடியவில்லை எனினும் நான் தொடர்ந்து படிக்க வேண்டும் என்று என்னை பி.எட் மற்றும் எம்.பில் படிக்க வைத்தார் அவர் என்று நெகிழ்கிறார் ராதா.

இவ்வளவு படித்தும் வேலைக்கு செல்லவில்லை என்ற எண்ணம் தோன்றியதுண்டா என்று நாம் முன் வைத்த கேள்விக்கு சட்டென பதிலளித்த ராதா, 

“நான் வேலைக்குச் செல்வதில் கவனம் செலுத்தாமல் என் பிள்ளைகளை கவனித்ததால் தான் அவர்களை இளம் வயதிலேயே புதிய யோசனைகளுக்கு வித்திடுபவர்களாக உருவாக்க முடிந்தது. இதனால் இதுநாள் வரை வேலைக்கு சென்றிருக்கலாமே என்ற எண்ணமே உருவாகவில்லை” 

என்கிறார் அவர்.

குழந்தைகளின் கற்பனைக்கு எல்லையில்லை

ஒரு விஷயத்தை குழந்தைகள் நம்மைவிட மாறுபட்ட கோணத்தில் சிந்திப்பார்கள், அதற்கான சூழலை அவர்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும் என்கிறார் ராதா. என் பிள்ளைகள் எந்த ஒரு சின்ன விஷயம் பற்றி கூறினாலும் அதை உதாசினப்படுத்தாமல் அது பற்றிய புரிதலை அவர்களுக்கு ஏற்படுத்துவார் என்னுடைய கணவர் என்று பெருமைப்படுகிறார் ராதா. நாங்கள் சொந்தமாக டெக்ஸ்டைல்ஸ் தொழில் செய்து வருகிறோம் அன்றாட அலுவல்களை முடித்துவிட்டு என் கணவர் வீட்டிற்கு வந்ததும் குழந்தைகளுடன் கலந்து பேசுவதிலேயே அவர்களுக்கு ஒரு உற்சாகம் வந்துவிடும் என்று கண் கலங்குகிறார் அவர்.

“பவித்ராவும், இலக்கியாவும் ஒரு புதிய கருவியை உருவாக்க முனைந்தால் முதலில் அவர்கள் அந்த கருவி பற்றிய ஒரு தோராய வரைபடத்தை வரைந்து என் கணவரிடம் காண்பிப்பர். அவர் அவற்றில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டி இருந்தால் அவர்களிடம் தெரிவிப்பார். அடுத்தகட்டமாக எங்களுக்கு பழக்கமான பட்டறை ஒன்றில் குறைந்த விலையில் அல்லது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பொருட்களைக் கொண்டு ஒரு மாதிரி கருவி உருவாக்கப்படும். அந்தக் கருவி என் மகள்களின் வடிவமைப்பிற்கு ஏற்ப திறன்பட செயல்படும் பட்சத்தில் அவற்றை நல்ல பொருட்களைக் கொண்டு உருவாக்குவோம்” என்கிறார் ராதா. 

எனினும் இவர்களின் கண்டுபிடிப்புகளை கண்காட்சிகளில் இடம்பெறச் செய்ய பல மாவட்டம், மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதால் எடை குறைவான எளிதில் பிரித்து கோர்க்கக் கூடிய கருவிகளைக் கொண்டு தயாரிப்போம் என்கிறார் அவர்.

இதுவரையில் பணத்தைப் பற்றி கவலைப்படாமல் தங்களது சொந்த செலவிலேயே கருவிகளை உருவாக்கி அவற்றை பல்வேறு அறிவியல் கண்காட்சிகளில் காட்சிப் படுத்தியுள்ளோம்” என்று சொல்லும் ராதா, தற்போது கணவரும் இல்லாத நிலையில் செலவுகளை எப்படி சமாளிப்பது என்பதை பற்றி யோசிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார். எனினும் பவித்ரா, இலக்கியாவின் கண்டுபிடிப்புகளுக்கு தடை போடாமல் அவர்களின் உற்சாகம் குறைந்துவிடாமல் தனக்குள்ளேயே சோகத்தை வைத்துக் கொண்டு அவர்களுக்கு வெளிச்சத்தை அளிக்கும் ஒரு மெழுகுவர்த்தியாக திகழ்கிறார் இந்த தன்னம்பிக்கைத் தாய்.

எதிர்கால கண்டுபிடிப்புகள்?

உண்மையான ஆர்வம் இருப்பதால், இங்கு பள்ளித்தேர்வுகள் கூட கண்டுபிடிப்புக்கு இடையூறாக இல்லை. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவி பவித்ராவும் மனம் தளராமல் கண்டுபிடிப்புகளைத் தொடர்வதில் உறுதியாகவே இருக்கிறார்.

“என் அப்பாவின் ஆலோசனைகள் எப்போதும் என்னுடன் இருக்கும், அவர் இழப்பு எங்களுக்கு அதிர்ச்சி தான் என்றாலும் அவர் காட்டிய பாதையில் நிச்சயம் தொடர்ந்து பயணிப்பேன்” என்கிறார் தன்னம்பிக்கையுடன். 

2016 ஜனவரி மாதம் மைசூரில் நடந்த கண்காட்சியில் கடப்பாறை, மண்வெட்டி இல்லாமல் எளிய முறையில் மரவள்ளி கிழங்கு பிடுங்கும் கருவியை காட்சிப்படுத்தி 103வது குழந்தைகள் அறிவியல் காங்கிரஸ் விருதை பெற்று வந்திருக்கிறார் பவித்ரா.

“பொதுத் தேர்வுக்கு தயாரானாலும் என் கண்டுபிடிப்புகளுக்கு விடுமுறை விட்டுவிடவில்லை, படித்து முடித்து விட்டு இளைப்பாறும் 15 நிமிடங்களில் என்னுடைய கண்டுபிடிப்புகளுக்கான வேலையில் இறங்கி விடுவேன்” என்கிறார் அவர். அடுத்தகட்டமாக 10 புதிய எந்திரங்களை உருவாக்கும் எண்ணம் உள்ளதாகவும் அவற்றில் மூன்றிற்கான தொடக்க வேலைகள் நடந்து வருவதாகவும் கூறுகிறார் பவித்ரா. பள்ளிப்படிப்பையும் கண்டுபிடிப்பையும் சமஅளவில் எடுத்துச் செல்லும் மன உறுதியுடன் இருக்கும் பவித்ராவிற்கு சிறுவயது முதலே குழந்தை மருத்துவத்தில் சாதிக்க வேண்டும் என்பதே விருப்பம்.

ஒரு பக்கம் தீராத ஆய்வு சிந்தனை, மறுபக்கம் விடாத உழைப்பு என செயல்பட்டுவரும் இவர்கள் பிரச்னைகளை படிக்கற்களாக மாற்றிவருகிறார்கள். இந்தியாவில் இருக்கும் தங்களைப்போன்ற இளம் ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்க முறையான ஒரு அமைப்பும் இல்லை என்ற ஏக்கம் இவர்களிடம் இருப்பதை உணரமுடிகிறது. இவர்களின் கண்டுபிடிப்புகள் மக்களைச் சென்றடைந்தால் மட்டுமே வளர்ச்சி என்பது வேகமெடுக்கும் என்பதை மறுப்பதிற்கில்லை. அதுவே அந்த கண்டுபிடிப்புக்கான உண்மையான அங்கீகாரம்.

Stories by Gajalakshmi Mahalingam