கசல் இசையின் புதுமுக நாயகன்: 'ரஞ்சித் ரவாடா'

0

"தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் ” என்ற குறளுக்கு உரிய எடுத்துக்காட்டாக திகழ்பவர் ரஞ்சித் ரவாடா. 

கசலின் தலைநகராக கருதப்படும், ராஜஸ்தானில் பிறந்த இவர், ஒரு தருணத்தில் வீடுதோறும் சென்று தனது மெல்லிசை கசலால் மக்களை மகிழ்வித்து வந்தார். ஆனால் இன்றோ அவரது கசலை நாடி, மக்கள் மிக தொலைவிலிருந்தும் பயணித்து வருகிறார்கள். அவரது விடாமுயற்சியும், கடின உழைப்பும் அவரை இந்த பெருமையான கட்டத்தை அடைய உதவி இருக்கிறது. மனிதனாக பிறப்பவர் எல்லாரும் திறனும் ஊனமும் சேர்ந்த கலவையாக பிறப்பது இயல்பு, ஆனால் கலை உலகில் வெற்றி அடைய வேண்டுமெனில் ஊனத்தை பொருட்படுத்தாமல், திறனை நம்பி செயல்பட வேண்டும். அதையும் தாண்டி அவ்வப்போது தனது திறமையை நன்கு அறிந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு செயல்படுவதன் மூலம் வெற்றி நம்மை நோக்கி வரும். இந்த கோட்பாட்டின் கீழ் செயல்பட்டு, கசல் உலகின் போட்டி இல்லா அரசன் என்ற பட்டப்பெயர் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருகிறார் ரஞ்சித்.

“எனக்கு நான்கு வயது இருக்கும்போது, இசையின் மீது ஆர்வம் மலரத் துவங்கியது. எனது ஏழாம் வயதில், முதல் தேசிய விருது பெற்றேன். அதுமட்டுமின்றி, எனது பன்னிரண்டு வயதிற்குள் மிக அதிகமான விருதுகளை பெறத்துவங்கினேன், இது அனைத்துக்கும் காரணமானவர்கள் எனது பெற்றோர்கள் தான்", என்கிறார் ரஞ்சித்.

அவரது, திறமையை வெளிக்காட்டும் வகையில், அவர் பாடிய கசலிலிருந்து இரண்டு வரிகள்...

"தனது கவலைகளை, வெளிப்படுத்துவோருக்கு, இறைவன் என்றென்றும் தன் கதவுகளை திறக்கிறான்"

சங்கீதத் துறையில், இந்தக்காலத்தில், போட்டிகள் அதிகரித்து வருகின்றன; இதன் விளைவாக, எல்லாரும் தனது திறமையை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும், அதற்கு கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியுடன் செயல் படவேண்டும் என்ற கருத்தை அவர் இவ்வாறு வலியுறுத்துகிறார். 

“எனது திறமை நாளுக்கு நாள் அதிகரிக்கும் வகையில் சிறப்பாக செயல் பட எண்ணுகிறேன். அதற்கு உண்டான வழிகளை நன்கு அறிந்து கொண்டேன்”, என்கிறார் ரஞ்சித்.

மேலும், மும்பையில் தனது வாழ்க்கை பயணத்தை துவங்கிய காலத்தில் சில பல பொருளாதார இன்னல்களை அவர் சந்திக்க நேரிட்டது என்றாலுமே அந்த சூழ்நிலையிலும் இசையின் ஆர்வத்தை தளரவிடாமல் முன்னேறிக் கொண்டிருந்தார்.

“நான் எதிர்ப்புகளை பற்றியோ ஏளனங்களை பற்றியோ எண்ணாமல் எனது இலக்கை நோக்கி பயணித்து கொண்டே இருந்தேன்”

சங்கீதத்துறை மிக கடினமான துறை, ஆனால் அதை நன்கு கற்றவர்களுக்கு அது என்றும் உறுதுணையாக நிற்கும் என்ற கருத்தை அவர் கூறினார். சங்கீதத்தை யாராலும் அவ்வளவு சுலபமாக தன்வசம் செய்யலாகாது அதற்கு உழைப்பு மட்டுமின்றி, திறமையும் மிக அவசியமானது என்பது உண்மை. அதற்கு எற்ப, ரஞ்சித் தனது திறமையும் உழைப்பையும் நன்கு ஒன்றிணைத்து பணிப்புரிந்தார் என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை. அத்துடன், தனக்கு கிட்டும் புகழ் மற்றும் பாராட்டு ஆகியவற்றை ஆசிர்வாதமாக ஏற்றுக்கொண்டு, அதை அள்ளித்தரும் மக்களுக்கு என்றென்றும் தனது மனமார்ந்த நன்றிகளை அவர் வெளிப்படுத்துகிறார்.

இத்தகைய திறமையும், தொலைநோக்கு பார்வையும் கொண்ட அவரின் எதிர்காலம் மிகச் சிறப்பாக அமையும். மேலும், பிற்காலத்தில், குலாம் அலி, ஜக்ஜீத் சிங்க் போன்ற மிகப்பெரிய கசல் வித்வான்களுக்குப் பிறகு, கசல் உலகின் மிகச் சிறந்த வித்வானாக திகழ்வதற்குத் தேவையான அனைத்து திறன்களும் ரஞ்சித்திடம் உள்ளது.

ரஞ்சித், ‘தேரே க்ஹயால்’ ஆல்பத்திற்கு பிறகு ‘பேகாம்’ என்ற புதிய ம்யூசிக் ஆல்பத்தை வெளியிடுவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறார். மக்கள் அதை கேட்பதற்காக, மிக ஆவலுடன் காத்துக் கொண்டு இருகின்றனர்.

ஹிந்தியில்: Dr.அர்விந்த் யாதவ் | தமிழில்: அபிலாஷ்