காய்கறி விற்பனையாளரில் இருந்து புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவர் ஆன விஜயலட்சுமி!

0
"நான் மிகவும் பின் தங்கிய ஒரு வகுப்பைச் சேர்ந்தவள். கிழிந்த செறுப்புகளை தைக்கும் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், என் அப்பா சுதந்திர போராட்ட குழுவில் இடம் பெற்றதால் சமூக முன்னேற்றத்தில் நம்பிக்கை கொண்டவர். அவர் படிப்பறிவில்லாதவர் என்றாலும், தன் ஜாதித் திரையை கிழித்து சமூகத்தில் சமமாக வாழ கற்றுக்கொண்டார்.” 

அவர் குல்பர்காவில் ஒரு சேரியில் பிறந்து வளர்ந்தார். காய்கறிகள் விற்று வருமானம் ஈட்டினார். ஆனால் கல்விக்காக திருமணம் புரியாமல் படிப்பில் தீவிரமாக கவனம் செலுத்தினார் அந்த பெண். அந்த உழைப்பின் பலனாக இன்று இந்திய அளவில் பிரபல ஆன்காலஜிஸ்ட் அதாவது புற்றுநோய் மருத்துவராக பேரும் புகழுடன் வாழ்கிறார். கர்நாடகா கேன்சர் சொசைட்டியின் துணை தலைவராகவும் உள்ளார். இவர் தான் பல விருதுகளையும், உயரிய அங்கீகாரங்களையும் பெற்றுள்ள டாக்டர்.விஜயலட்சுமி தேஷ்மனே. இவர் அண்மையில் பெங்களுரு கிட்வாய் மருத்துவமனை ஆன்காலஜி துறைத்தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். 

டைம்ஸ் ஆப் இந்தியா செய்திகள் படி,

“அன்றைய காலத்தில் ஆண்கள் மட்டுமே பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் என் அப்பா என்னையும் என் சகோதரிகளையும் பள்ளிக்கு அனுப்பி படிக்கவைத்தார். ஒரு தலித் குடும்பத்தில் பிறந்த எனக்கு அது நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒன்று. வாழ்க்கையில் சிறந்து விளங்குவது மட்டுமே எங்களின் குறிக்கோளாக இருந்தது,” என்றார் விஜயலட்சுமி. 

விஜயலட்சுமிக்கு கல்வி கடினமாகவும், அதிக செலவு பிடிப்பதாகவும் இருந்தது. அவரின் அம்மா காய்கறி விற்பனை செய்ய செல்லும் போது அவருக்கு உதவியாக செல்வார். விஜயலட்சுமிக்கு கல்விக்கட்டணம் கட்ட ஒருமுறை அவரின் தாய் தன் தாலியை விற்றுள்ளார். எத்தனையோ இடர்பாடுகளுக்கு இடையில் நன்கு படித்து, ஹூப்ளியில் உள்ள கர்நாடகா மெடிக்கல் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பை 1980-ல் முடித்தார். பின்னர் பெல்லாரியில் எம்.எஸ் முடித்துவிட்டு மார்பக புற்றுநோய் மருத்துவராக ஆனார். 

இந்த ஆண்டு ரிடையர் ஆன விஜயலட்சுமி, தன் பணியில் பாதியை மட்டுமே முடித்துள்ளதாக கருதுகிறார். மருத்துவம் தவிர பல சமூக பணிகள், விழிப்புணர்வு முகாம்கள், ஆராய்ச்சி பணிகள், கிராமங்களில் கல்வித் திட்ட நிகழ்ச்சிகள் என்று பலவற்றில் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார். இனி வரும் நாட்களில், மாதத்தில் 15 நாட்களை இந்த சமூக பணிகளுக்கும், மீதமுள்ள நாட்களை ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கவும் திட்டமிட்டுள்ளார் போற்றுதலுக்குரிய இந்த பெண்மணி. 

கட்டுரை: Think Change India

Related Stories

Stories by YS TEAM TAMIL