சக்கரை நோயாளிகளுக்கு ‘சக்கையிலே’ தீர்வு: அசத்திய மைக்ரோசாப்ட் முன்னாள் இயக்குனர்!

சக்கரை நோயாளிகளுக்கான சிறந்த உணவை தயாரிக்கும் முயற்சியில், மைக்ரோசாப்ட் வேலையினை உதறி தள்ளி ‘ஜாக்ப்ரூட் 365’ நிறுவனத்தை துவக்கியுள்ளார் இச்சேட்டன் தேசத்துக்காரர். 

0

மா, பலா, வாழை என்ற முக்கனியில் பிடித்த கனி என்னவென கேட்டால், பலாவுக்கே பலரும் பாஸ் மார்க் அளிப்பர். பிட் அடிப்பவன் மாட்டிக்கொள்வது கூட அரிது. ஆனால், பலா தின்னவன் பத்தே நிமிடத்தில் பஜக்னு பிடித்துவிடலாம். அந்த அளவுக்கு அதன் வாசம் முட்டு சந்து வரை வீசும். பக்சே, பலா விரும்பிகள் எம்புட்டு தான் ஆசைப்பட்டாலும் பழம் கிடைக்கிறது என்னவோ 2 மாதங்களுக்கு தான். 

மாம்பழப் பிரியர்களுக்காவது மாஸா, ஸ்லைஸ் பானங்கள் கிடைக்கிறது. ஆனால், பலா பிரியர்களுக்கு இருக்கும் ஒரே சான்ஸ் கிடைக்கும் இரண்டு மாதக் காலத்தில் மூச்சு முட்ட தின்று கொள்வது மட்டுமே. 

இதற்காகவே, பலாப்பிரியர்களுக்கு ஆண்டின் 365 நாட்களும் பலாப்பழம் கிடைக்கும் வகையில் ’ஜாக் ஃப்ரூட் 365’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறார் முன்னாள் ‘மைக்ரேசாப்ட்’ ஊழியர் ஜேம்ஸ் ஜோசப்.

’ஜாக் ஃப்ரூட் 365’ நிறுவனர் ஜேம்ஸ் ஜோசப்
’ஜாக் ஃப்ரூட் 365’ நிறுவனர் ஜேம்ஸ் ஜோசப்

‘இனி வீடு தான் உங்கள் அலுவலகம்’ மாற்று சிந்தனையில் உருவாகிய முதல் ஸ்டார்ட் அப்

கொச்சினை பூர்விகமாக கொண்ட ஜேம்ஸ் ஜோசப், ஒரு எம்பிஏ பட்டதாரி. பாரின்லே படித்து, பாரின்லே வேலைத்தேடிக்கொண்டார். கடந்த இரு தசாப்த்தத்தில் மூன்று வெவ்வேறு கண்டங்களில் உள்ள நகரங்களில் உள்ள முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களில் முக்கிய பதவி வகித்துள்ளார். ஆனால், அவர் எங்கு இருப்பினும், வாழ்க்கை எவ்வளவு அதிநவீனமானதாக இருந்தாலும், சொந்த ஊர் மீதான காதல் என்றும் நீங்காது இருந்துள்ளது. 

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இயக்குனராக நியமிக்கப்பட்ட அவருடைய பேஷனையும் புரோபஷனையும் ஒன்றாக ஆக்க எண்ணியுள்ளார். அவருடைய சொந்த ஊரான எர்ணாகுளத்தில் உள்ள ஆலுவா கிராமத்தில் இருந்தே, பெரும் கார்பரேட் நிறுவனத்துக்கான வேலையை செய்யலாம் என்பதை நிரூபிக்க தீர்மானித்தார். அவருடைய முயற்சிக்கு அவரது குடும்பமும், நிறுவனமும் ஆதரவு அளித்தது.

தொடர்ச்சியாய் மூன்று ஆண்டுகள் கிராமத்தில் இருந்து சிறப்பாக செயலாற்றியுள்ளார். கிராமங்களில் இருந்து சிட்டியை நோக்கி படையெடுத்து பணிசெய்து வருவோர், வேலையை துறந்துவிட்டு சொந்த கிராமத்தில் செட்டில் ஆகுவதற்கு மாறாக, அவர்களுடைய கிராமத்தின் அமைதியான சூழலிலே சிறப்பாக பணிப்புரிய முடியும் என்பதை உணர்ந்த அவர், இதை பிறருக்கு உணர்த்துவதற்காக ’ProfessionalBharati’ என்ற ஸ்டார்ட் அப்பை தொடங்கினார். 

அயல் நாடுகளிலும், வெளியூர்களிலும் வசித்து வேலை பார்க்கும் கார்ப்பரேட் ஊழியர்கள், வேலையை ரிசைன் செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பாமல் வீட்டிலிருந்தே அவ்வேலையை பார்ப்பதற்கு உதவும் தளமே புரோபஷனல் பாரதி.

கிராமத்திலே வேலையை தொடர்ந்தவர், இதை பிறரும் பின்பற்ற அவர் அனுபவங்களை தொகுத்து புத்தகம் எழுத விரும்பினார். அதன் காரணமாக, வேலைக்கு பிரேக் விட்டு விட்டு புத்தக வேலையில் கவனம் செலுத்தியுள்ளார். ’God's Own Office’ என்ற அவர் எழுதிய புத்தகம் கேரளாவில் உள்ள கிராமத்தில் இருந்து எப்படி ஒரு பன்னாட்டு நிறுவனத்துக்கு பணிபுரிவது என்பதை பற்றி விளக்குகிறது.

“வீட்டு பின் தோட்டத்தில் அமர்ந்து புத்தகம் எழுதி கொண்டிருக்கும் போது, கொல்லைப்புறத்தில் இருந்த பலாமரத்தை உற்று கவனித்தேன். மரத்தில் தொங்கும் பலா ஒவ்வொரு ஸ்டேஜ்ஜாக தாண்டி, பலவையும் வீணாய் போயின. கேரளாவில் மட்டுமின்றி இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் விளையும் பலாக்களில் பாதி சதவீதம் கழிவுகளாக தூக்கி வீசப்படுகின்றன,” 

என்கிறார் அவர். கேரள அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்டுரையில், ஆண்டுத்தோறும் 35 கோடி பலாபழங்கள் வீணாகின்றன. அதாவது, அறுவடை செய்யப்பட்டதில் 75 சதவீத பலாப் பழங்கள் வீணாகின்றன. மேகலாலயாவில் மட்டும் ஆண்டுக்கு ரூ400 கோடி மதிப்பிலான பலாப்பழங்கள் வீணாகின்றன. இதற்கு பல காரணங்கள் உள்ளன. 

பொதுவாக மூன்று முதல் ஐந்து கிலோ இருக்கும் பலா பழங்களை உள் நாட்டிலே பல இடங்களுக்கு ஏற்றுமதி செய்வது சிரமத்தை அளிக்கும். அதே சமயம், விரைவில் அழிந்துவிடக்கூடிய பழத்தை டன் கணக்கில் சேமித்து வைக்கவும் முடியாது. பலா பழத்தை சுத்தம் செய்வது என்பது கடினமான செயலாகும்.

பாழாகும் பலாக்களில் புதிய தொழில்!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த போது, அவர்களுடைய வாடிக்கையாளர்களுக்கு மும்பை தாஜ் ஓட்டலில் நிறுவனத்தின் சார்ப்பாக விருந்து நிகழ்ச்சி ஒன்றை ஒருங்கிணைத்துள்ளார் ஜேம்ஸ். நான்-வெஜ் உண்பவர்களுக்கு பறப்பன, ஓடுவன, நீந்துவன என அனைத்தும் விருந்தாக, வெஜ் உணவு உண்பவன் என்பவர்களுக்கோ, காளான், பன்னீர், உருளைக்கிழங்கில் பதார்த்தங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

உருளைக்கிழங்குக்கு சிறந்த மாற்றாக பலாக்கள் அமையும். ஆனால், ஏன் பலாக்களில் பதார்த்தங்கள் செய்வதில்லை என்று விழித்தவர், விடையினை அறிய தாஜ் ஓட்டலின் ஒன் ஆப் தி டாப் செப் ஒருவரிடம் வினாவியுள்ளார். அதற்கு அவர், பலாப்பழத்தின் பிசுபிசுப்பு தன்மை சமைக்க சிரமத்தை அளித்தாலும், அதன் வாசனை உணவில் சேர்க்கப்பட்டுள்ள மற்ற பொருள்களின் நறுமணத்தையும், சுவையும் மழுங்க அடித்துவிடும் என்றும், பலமும் சீசனுக்கு மட்டுமே கிடைக்கிறது என்று அடுக்கடுக்காக காரணங்களை முன் வைத்துள்ளார். அத்தனை பிரச்னைக்கும் ஒற்றை தீர்வை வழங்க வேண்டும் என்று தீர்மானித்து மைக்ரோசாப்ட் பணியை துறந்துள்ளார்.

அதற்காக பல ஆய்வுகளை மேற்கொண்டிருந்த ஜேம்ஸ், சில பகுதிகளில் பலாப்பழக்காயின் பயன்பாடு அதிகம் என்பதையும், பெருவாரியான பகுதிகளில் பலாப்பழத்துக்கே மவுசு ஜாஸ்தி. அதனால், முதலில் பலாப்பழக்காய் மற்றும் கனியிலிருந்து எத்தனை வகை ரெசிபிக்களை தயார் செய்ய முடியும் என்பதை ப்ராக்டிக்கல் முறையில் கண்டறிந்தார். இதுக்குறித்து ஜேம்ஸ் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில்,

 “‘என்னன்னா, பலாப்பழங்கள் சீக்கிரமே அழுகும் தன்மைக் கொண்டது. என்ன செய்யலாம்னு யோசித்த போது, ‘தாய் கார்பன் பிளாக்’ நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், ஆதித்யா விக்ரம் பிர்லாவின் விடுதித்தோழனுமான தாமஸ் கோஷியின் மகன் டீஹைட்ரேஷன் முறையை ஆலோசித்தார்,” என்று கூறியுள்ளார்.

இத்திட்டத்தை செயல்படுத்த கொச்சியை தலைமையிடமாகக் கொண்டு உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலைகளை அமைத்து தரும் நிறுவனத்தை அணுகி, கேரளா மற்றும் பெங்களூரில் தொழிற்சாலைகளை நிறுவி பலாப்பழங்கள் 365 நாட்களும் கிடைக்கும் வகையில் “ஜாக்ப்ரூட் 365” என்ற நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.

“ஒரு பாக்கெட்டில் முழு பலாப்பழத்தின் சுளைகளை அடக்கும் வகையில் பாக்கெட்களை தயாரித்தேன்.” என்கிறார் ஜேம்ஸ்.

அக்‌ஷய பாத்ரா தொண்டு அமைப்பின் கீழ், அவருடைய கம்பெனி புரோடெக்ட்களை ஸ்பான்சர் செய்கிறார். அக்‌ஷய பாத்ரா தொண்டு நிறுவனமானது தினமும் 13 லட்ச குழந்தைகளுக்கு சமைத்த உணவினை வழங்கி வருகிறது.

பழுக்காத பலாப்பழங்களை வாங்கி, அதன் தோல் நீக்கி ப்ரீஸ் ட்ரை முறையிl பதப்படுத்துகிறார்கள். ப்ரீஸ் ட்ரை முறையில் காய்கறி, பழங்களை அதோட சத்துகள் நீங்காதபடி பதப்படுத்த முடியும். முதலில் பழத்தில் உள்ள தண்ணீர் சத்தை முழுக்க நீக்கிவிட்டு, உறைய வைக்கின்றனர். இதன் மூலமாக பழங்களின் எடை கணிசமாக குறைந்துவிடுகிறது. பின்னர் காற்று புகாத பேக்கிங்கில், அறை வெப்ப நிலையிலயே பத்திரப்படுத்தப்பட்டு விற்கின்றனர்.

ஜோசப்பின் உலர்ந்த பலாப்பழங்களை வாங்கி குழந்தைகளுக்கு மேஜிக் செய்வது போல் வீட்டில் செய்துக்காட்டியும் அசத்தாலாம். 

ஆமாங்க, பாக்கெட்டில் உள்ள காய்ந்த பலாப்பழங்களை தண்ணீரில் போட்டு 15 நிமிடங்களுக்கு கொதிக்க வைப்பதன் மூலம் அதற்கு தேவையான நீரை உறிஞ்சிக்கொண்டு ப்ரெஷ்ஷான பலாச்சொளையாக மாறிவிடுகிறது. பலாப்பழம் வீணாகுவது குறைப்பதுடன் பளப்பள பலாக்கள் தரும் பலன்கள் பலபல!

கலாம் சொன்னார்... ஜேம்ஸ் முடித்தார்

சிட்னி பல்கலைகழகத்தின் கிளைசெமிக் இன்டெக்ஸ் ஆராய்ச்சி சேவையை அணுகிய ஜேம்ஸ், பலாக்காயில் உள்ள கிளைசெமிக் இன்டெக்ஸ்- ஐ கண்டறியுமாறு (குளூக்கோஸ் அளவு) கூறியிருக்கிறார். அதன்படி, மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், 

பலாக்காய் உயர் ரத்த சக்கரை அளவை எதிர்த்து போராட உதவும் என்பது தெரியவந்தது. டீஹைட்ரேட் செய்யப்பட்ட பலாக்காய்களில் ஒரு கப் சாதத்தில் இருக்கும் கார்போஹைட்ரைட் அளவில் பாதியே உள்ளது. அதே சமயம் நார்சத்து மிகுந்தும் காணப்படுவதால், சக்கரை நோயாளிகள் டெய்லி டயட் லிஸ்டில் கோதுமைக்கு சிறந்த மாற்றாக பலாக்காய் அமையும் என்றுள்ளது  அவ்வாராய்ச்சியின் அறிக்கை.

அதுவரை, பலாப்பழத்தை வீணடிக்கப்படுவதை தடுப்பதை பற்றி சிந்தித்த அவர் சக்கரை நோயுக்கான மருந்தாக பலாக்காயை மாற்ற நினைத்தது அப்துல்கலாம் கூறிய வார்த்தைகளுக்கு பிறகே. 

2014ம் ஆண்டு முன்னாள் குடியரசுத் தலைவரை அவருடைய இல்லத்தில் சந்தித்தபோது அவர் ஜேம்சிடம் பகிர்ந்து கொண்ட வார்த்தைகள் இவை...

“ஜேம்ஸ், நீங்கள் கேரளாவின் பராம்பரிய உணவான பலாக்காய் உணவை இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் உண்பார்கள் என்பதை எதிர்பார்க்கக் கூடாது. இந்தியா முழுவதும் நீரிழிவு நோய் பெரும் பிரச்னையாக உள்ளது. மக்கள் பொதுவாக சாப்பிடும் உணவாக பலாக்காய்கள் அமைய நீங்கள் ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும்,” என்றார்.

பலமாத ஆராய்ச்சிக்கு பின் அப்துல்கலாமின் வார்த்தைகளுக்கு வடிவம் கொடுத்துள்ளார் ஜேம்ஸ். அன்றாட பிரேக்பாஸ்ட்களான இட்லி, தோசை, மாவுகளில் கலந்து சமைக்கக்கூடிய ’ஜாக்ப்ரூட் மாவை’ தயாரித்து சக்கரை நோயாளிகளை சென்றடைய சந்தைப்படுத்தி வருகிறார். 

ஆனால் அதை எப்படி சமைப்பது? அதற்கான தீர்வையும் ஜேம்சே வழங்குகிறார். ஜாக்ப்ரூட் 365 வெப்சைட்டில் பதார்த்தங்களின் பட்டியலுடன், செயல்முறை வீடியோக்களும் உள்ளன. 

ஜேம்சின் தயாரிப்புகளை அங்கும் இங்கும் தேடி அலைய வேண்டாம், அமேசானிலே கிடைக்கிறது. வாங்குங்கோ, டிபரண்டா சமைத்து உண்ணுங்கோ...

இணைதள முகவரி : Jackfruit365

Related Stories

Stories by jaishree