பகுதி நேர பணியிலும் சாதிக்கலாம்! புதிய முயற்சியில் கலக்கும் நண்பர்கள்…

1

நீங்கள் பயணிக்கும் பேருந்து, ரயில் ஆகியவற்றில், பகுதி நேர வேலை குறித்த விளம்பரங்கள் ஏராளமாக ஒட்டப்பட்டிருப்பதைக் கவனித்திருப்பீர்கள். ஆனால் அவற்றின் நம்பகத்தன்மை எப்போதும் கேள்விக்குறிதான். ஆனால், பகுதி நேர பணியை பெற்றுத்தருவதில் கோவையை சேர்ந்த நண்பர்கள் சாதித்திருக்கிறார்கள். அவர்களுக்கு உதவியது நவீன தொழில்நுட்பம்தான்.

சாதனை நாயகர்கள் இருவரையும் பேட்டி கண்டது தமிழ் யுவர் ஸ்டோரி :

தமிழகத்தின் முக்கிய மாநகரங்களைச் சேர்ந்த மோகன் குமார் சுவாமிநாதன், அருண் டேவிட் ஆகியோர் இணைந்து தொடங்கிய "டூ பார்ட்டைம்" (DoPartTime), தற்போது இளைஞர்கள் பலரின் வாழ்விற்கு வழிகாட்டியாக இருக்கிறது. உலகலவில் பல தலைவர்கள், பெரிய நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிற்கு வந்தவர்கள் என பட்டியலிட்டு பார்த்தால், அவர்களில் பலர், படிக்கும்போதோ, வேலையின் போதோ, பகுதிநேரம் வேறு ஒரு பணியில் சம்பாதித்து முன்னேறியவர்களாக இருப்பார்கள். இதை தாரக மந்திரமாகக்கொண்டு தொடங்கப்பட்ட டூ பார்ட்டைம் இளையதளம் தற்போது சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது.

கல்லூரி நாட்களில், விடுதி வாழ்க்கை பலருக்கு மாற்றங்களைத் தரும் வாய்ப்பாக அமைவதில்லை. ஆனால், மற்ற மாணவர்களைப் போல் இல்லாமல் மோகன் குமாரும், அருண் டேவிட்டும் கல்லூரி காலம் முதலே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய முயற்சிகளை செய்து பார்ப்பதில் ஆர்வமாகவே இருந்துள்ளனர். கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் கணினி பொறியியல் பயின்ற போதே விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் தங்களுக்குள்ளாக கலந்துரையாடிக் கொள்ள ஒரு சமூக இணையதளத்தை(ஃபேஸ்புக், டுவிட்டர் போல) உருவாக்கியுள்ளனர். அது காருண்யா மாணவர்களிடையே வரவேற்பை பெற்றதையடுத்து, மற்ற மாணவர்களும் பயன்படுத்தும் வகையில் விரிவுபடுத்தியுள்ளனர். பொதுத் தளமாக இது மாரியதன் விளைவாக, நார்வே நிறுவனம் ஒன்று இவர்களின் தயாரிப்பை விலைக்கு வாங்கிக் கொண்டதாகக் கூறுகிறார் மோகன்குமார் சுவாமிநாதன். அப்போதே சுயமாக ஸ்டார்ட் அப் செய்ய வேண்டும் என்பதற்கான விதை விழுந்ததாக சொல்கிறார் அவர்.

2011ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்த போது, புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அனுபவம் இல்லை என்ற குறை இருந்ததை உணர்ந்ததால் இருவரும் தனித்தனியே நிறுவனங்களில் பணியாற்ற விரும்பியுள்ளனர். அருண் சாப்ட்வேர் டெவலப்பராக ஐதராபாத்தில் ஒரு நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார், தமக்கு பெரிய நிறுவனங்களில் சேர்ந்து பணியாற்றும் விருப்பம் இல்லாததால் பெங்களூரில் ஒரு சிறிய ஐடி நிறுவனத்தில் பணியில் சேர்ந்ததாக நினைவு கூர்கிறார் மோகன்குமார்.

வெளிநாட்டுப்பயணம் பலரது வாழ்வில் மாற்றத்தை உருவாக்கிவிடுவதில்லை. ஆனால், இவர் வாழ்வில் பெரும் மாற்றத்திற்கு பயணம் வித்திட்டிருக்கிறது. இரண்டரை ஆண்டு கடுமையான உழைப்புக்குப் பிறகு மோகன் குமாருக்கு ஹாங்காங் செல்லும் வாய்ப்பும் கிடைத்தது. அங்கு பலரும் பகுதி நேரமாக பணியாற்றுவதைக் கண்டு வியந்ததாக சொல்லும் மோகன்குமார் இது பற்றி அயல்நாடுகளில் மேற்படிப்பைத் தொடரும் நண்பர்களிடம் விசாரித்துள்ளார். அப்போது தான் இந்தியாவில் ஏன் இது போன்ற வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற எண்ணம் அவருக்கு தோன்றியுள்ளது. இது பற்றி நண்பர் அருணை தொடர்பு கொண்டு பேச இருவருக்கும் இந்தத் துறை மீதான ஆர்வம் தொற்றிக் கொண்டது.

இந்தியாவில் வசதி படைத்தவராக இருந்தாலும், அயல்நாட்டுக்கு சென்று படிக்கும் பலர் அங்கு பகுதிநேரமாக பணியாற்றுவது சகஜம் என்று கூறுகிறார் மோகன்குமார். பகுதிநேர வேலைக்கு இங்குள்ள சந்தை நிலவரம் பற்றி கேஎஃப்சி, காஃபி டே, பொழுதுபோக்கு மையங்களில் நேரடியாக கள ஆய்வு செய்துள்ளார் அவர். வேலையில் இருந்து கொண்டே இருவரும் சாப்ட்வேர் உருவாக்கம் தொடர்பான போட்டிகளில் பங்கேற்றும் உள்ளனர். 2013ம் ஆண்டு பிட்ச் ஃபெஸ்ட்டிலும், கூகுள் லாஞ்ச் பேடிலும் இவர்களது புதிய முயற்சிக்கு பாராட்டு கிடைக்க பேபால் நிறுவனம் இவர்களது சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்க முன்வந்தது.

தொடக்கத்தில் பெயர் இல்லாமலே தங்களது பழைய முயற்சியான டைனிவால் பெயரிலேயே பகுதிநேர வேலைவாய்ப்பு பதிவுகளை பெறத் தொடங்கியுள்ளனர் இவர்கள். 3 மாதங்களுக்குப் பிறகு இவர்களின் முயற்சிக்கு சூட்டப்பட்ட பெயர்தான் டூ பார்ட் டைம் (DO Part Time). பகுதி நேர வேலை தேடுபவர்கள் www.DoParttime.com என்ற இணையதள முகவரி மூலமாகவும், செல்போன் செயலி மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம். இந்த தளத்திற்கான பணிகளை மோகன்குமாரும், அருண் டேவிட்டும் பகிர்ந்து செய்கின்றனர். மார்க்கெட்டிங் மற்றும் நிறுவனங்களைத் தொடர்பு கொள்வதை மோகனும், தொழில்நுட்ப விஷயங்களை அருணும் கவனித்துக் கொள்கின்றனர்.

“டூ பார்ட் டைமில் இது வரை 35 ஆயிரம் பணி தேடுபர்வகளும், 600 வேலைவாய்ப்பை வழங்கும் நிறுவனங்களும் உள்ளன” என்கிறார் மோகன்குமார். லாபத்தை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் துவங்கப்பட்ட இந்த இணையத்தால் மாணவர்களின் வாழ்க்கை நிலை மாறுவது திருப்தி அளிக்கிறது. 3 லட்ச ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த முயற்சி எதிர்பார்த்த அளவு லாபத்தை தற்போது ஈட்டாவிட்டாலும் எதிர்காலத்தில் பல மில்லியன் டாலர் லாபத்தை ஈட்டும் என்பதில் சந்தேகம் இல்லை” என்கிறார் அருண்டேவிட்.

டூ பார்ட் டைமில் என்ன வித்தியாசம்

வேலைவாய்ப்பை வழங்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் இருக்கும் போது உங்களின் டூ பார்ட்டைம் எப்படி மற்றவர்களின் கவனத்தை ஈர்த்தது என்று அவர்களிடம் கேட்டதற்கு பதிலளித்த மோகன்குமார், பகுதிநேர வேலையில் பல்வேறு ஏமாற்று வேலைகள் இருப்பதை அனைவருமே அறிவர், குறிப்பாக பலரும் இதில் பணத்தை பறிகொடுத்துள்ளனர். பகுதிநேர வேலைவாய்ப்புகள் உண்மையிலேயே சிறந்தது, இது பற்றிய தெளிவு இல்லாதவர்களே ஏமாற்றப்படுகின்றனர் என்று கூறுகிறார் மோகன்குமார். நாங்கள் டூ பார்ட் டைமில் வேலை தேடுபவர்களிடம் பணம் பெறுவதில்லை மாறாக வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் நிறுவனங்களிடம் பணம் பெற்றுக்கொள்வதாகக் கூறுகிறார் அவர். எங்களது டூ பார்ட்டைமில் உள்ள நிறுவனங்கள் அனைத்தும் கம்பெனி விவகாரத்துறையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதையே முதலில் நாங்கள் சரி பார்க்கிறோம், அதே போன்று வேலை தேடுபவர்களில் 40% மாணவர்களும், 25%பெண்களும் இருப்பதால் அவர்களின் விவரங்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும் என்கிறார் மோகன்குமார்.

சவால்களை எதிர்கொண்ட விதம்

பகுதி நேர வேலை தேடுபவர்களின் மிகப் பெரிய குற்றச்சாட்டு, விண்ணப்பித்தும் வேலை கிடைக்கவில்லை என்பதாகவே இருந்தது. இதை நிவர்த்தி செய்ய மீண்டும் நாங்கள் தொழில்நுட்ப உதவியையே நாடினோம். ஒருவர் பணிக்காக விண்ணப்பிக்கும் போதே சம்பந்தப்பட்ட நிறுவனம் பற்றி அறிந்து கொள்ள ‘ஜாப் ஆக்டிவிட்டி மீட்டர்’ ஒன்றை அறிமுகப்படுத்தினோம். ஒரு நிறுவனம் எந்த அளவு வேலைவாய்ப்புகளை அளிக்கிறது என்பதை சதவீதத்தின் அடிப்படையில் காட்டுவதே இதன் சிறப்பு. இந்த புதிய முயற்சியும் மற்ற இணையவழி வேலை வழங்குபவர்களிடம் இருந்து தங்களை தனித்துவப்படுத்திக் காட்டுவதாக நம்புகின்றனர் அவர்கள்.

இந்தியாவில் பகுதிநேர வேலைவாய்ப்பின் எதிர்காலம்

அயல்நாடுகளைப் போலவே இந்தியாவிலும் பகுதிநேர வேலைவாய்ப்புகள் பிரகாசமாகவே இருக்கின்றன என்கிறார் மோகன்குமார். கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும்பாலும் பகுதி நேர ஊழியர்களையே விரும்புகின்றனர், அதே போன்று ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் பகுதி நேர பணியாளர்களை வைத்துக் கொள்ளவே நினைக்கின்றனர், இதனால் எதிர்காலத்தில் 30 சதவீதம் பேர் பகுதி நேரமாக பணியாற்றும் அளவுக்கு நிலைமை மாறும் என்கிறார் அவர். இது தவிர மாணவர்களும் படிக்கும் போதே பகுதி நேரமாக பணியாற்றும் மனநிலைக்கு வந்த விட்டனர் இது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றுவதோடு, சுயமாக வாழ்வதற்கான நம்பிக்கையையும் ஏற்படுத்தும் என்கிறார் அவர்.

எதிர்காலத் திட்டம்

டூ பார்ட் டைமில் 10 லட்சம் பயனாளர்களை ஈர்ப்பதே எதிர்காலத் திட்டம் என்று கூறுகின்றனர் அவர்கள். சென்னையில் ஓரளவு பிரபலமடைந்து விட்ட நிலையில், அடுத்து பெங்களூரை இலக்காக வைத்து தங்களது திட்டத்தை விரிவுபடுத்திவருகின்றனர் மோகனும், அருணும். 

“இந்தியாவின் பெருநகரங்களில் பகுதிநேர வேலைவாய்ப்பு சந்தையை ஈர்ப்பதன் மூலம் இதன் பயன் அனைவரையும் எளிதில் சென்றடையும். இதை சிங்கப்பூர், பிலிஃபைன்ஸ் போன்ற நாடுகளிலும் தொடங்க மக்கள் விருப்பம் தெரிவிப்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்கிறார்.

நண்பர் கூட்டணியின் அடுத்த முயற்சி

இனிமேல், நீங்கள் ரயில் அல்லது பேருந்தில் பயணிக்கும்போதுகூட பகுதிநேரமாக பணியாற்ற வாய்ப்பை ஏற்படுத்த இந்த நண்பர் கூட்டணி முயன்றுவருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் செல்போன் செயலியின் மூலமாக பகுதி நேர வேலையை செய்யக்கூடிய வசதி கொண்ட தொழில்நுட்பத்தை இவர்கள் முன்னெடுத்துவருகிறார்கள்.

"படித்து முடிந்துவிட்டு என்ன செய்யலாம் என முடிவெடுத்த பிறகு 5 வருடங்கள்தான் உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும் காலமாக இருக்கும்” என்று கூறும் மோகன், எதையும் சோதித்து பார்த்தால்தான் வெற்றிக்கான பாதை புலப்படும் என்கிறார். மற்றவர்களின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்திவரும் நண்பர்களுக்கு பலதிசைகளிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்துவருகின்றன. 

பகுதிநேர வேலை செய்ய- Do Part Time

Stories by Gajalakshmi Mahalingam