துயர்மிகு குழந்தைப் பருவம் முதல் இந்தியாவுக்காக களமிறங்குவது வரை: சுரேஷ் ரெய்னாவின் உத்வேகக் கதை!

0

இன்றும் கூட... சுரேஷ் ரெய்னா, கட்டிலில் படுப்பதைவிட தரையில் படுத்து உறங்குவதயே விரும்புகிறார்... அவர் வளர்ந்த முறை அப்படி!  அன்பான வீட்டைப் பிரிந்து வெகுதூரம் இருந்த ஹாஸ்டலில் வளர்ந்த ரெய்னா, தினமும் ஒரு புதுவித சவாலை சந்திக்க வேண்டி இருந்தது. ஹாஸ்டலில் அவரது சீனியர்கள் கொடுத்த கடும் தொல்லை மற்றும் ரேகிங்கை தாங்க முடியாத ரெய்னா, தற்கொலை எண்ணத்திற்கு தள்ளப்பட்டார். அண்மையில் 'தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ்' வெளியிட்ட ஒரு கட்டுரையில், சுரேஷ் ரெய்னா வளர்பருவத்தில் சந்தித்த கொடுமைகளைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளமுடியும். 

ஒருமுறை மேட்சுக்கு செல்ல ரயிலில் பயணித்த ரெய்னா, பெர்த்களின் நடுவே பேப்பரை விரித்து தரையில் தூங்கிக்கொண்டு வந்துகொண்டிருந்தார். தீடிரென அவரது மார்பில் ஒரு கனத்தவலி, அழுத்தம்... ரெய்னா கண்களை திறந்து பார்ப்பதற்குமுன் அவரின் கைகள் கட்டப்பட்டது. ஒரு பெரிய சிறுவன் ரெய்னாவின் மார்பின் மீது அமர்ந்து அவரது முகத்திலேயே சிறுநீரை கழிக்கத்தொடங்கினான்... அங்கு ஒரு சிறு கைகலப்பு ஏற்பட்டது, ரயில் நிற்கத்துவங்கும் நேரம் ரெய்னா அந்த சிறுவனை தள்ளிவிட்டு, ரயிலின் வெளியே அவனை வீசினார். சுரேஷுக்கு அப்போது 13 வயதே ஆகி இருந்தது. உத்தர பிரதேஷத்தில் லக்னோவில் அமைந்திருந்த விளையாட்டு ஹாஸ்டலில் நாட்களை கழிக்க கடுமையாக பாடுபட்டார்.

ரெய்னாவின் ஹால்டலில் இருந்த சிறுவர்கள் இரக்கமற்றவர்கள். இவர் கிரிக்கெட்டில் பெற்று வந்த வளர்ச்சியும், கோச்சுகளின் ஆதரவையும் கண்டு பொறாமையில் இருந்தனர் அந்த சிறுவர்கள். தங்களைவிட வாழ்வில் ரெய்னா முன்னேறிவிடுவார் என்ற ஆத்திரம் அவர்களுக்கு. "அந்த சிறுவர்கள் 4 ஆண்டுகள் பயிற்சி எடுத்து விளையாட்டில் சான்றிதழைப் பெற்று ரெயில்வே அல்லது வேறு நிறுவனங்களில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலையை பெறவே ஹாஸ்டலில் தங்கி இருந்தனர்."  விரைவில் நிலைமை மிக மோசமானது. பால் பக்கெட்டில் குப்பையை போடுவர்... "நாங்கள் ஒரு துணியைக் கொண்டு அதை வடிகட்டி பாலை குடுப்போம்." 

"நடுங்கும் குளிரில் அதிகாலை மூன்று மணிக்கு பக்கெட் நிறைய குளிர் தண்ணீரை, தூங்கிக்கொண்டிருக்கும் எங்கள் மீது கொட்டுவார்கள். எழுந்து அவர்களை ஓங்கி அடிக்கத்தோன்றும் ஆனால் அப்படி செய்தால், 5 பேராகக் கூடி திருப்பி அடிப்பார்கள் என்று பொறுத்துக்கொள்வோம்", இறுதியாக ஹாஸ்டலை விட்டு வெளியேறி தனது கோபத்தை நேர்மறையாக மாற்ற முடிவெடுத்தார் சுரேஷ் ரெய்னா. 

மும்பையிலிருந்து ஏர் இந்தியாவுக்கு கிரிக்கெட் விளையாடக் கேட்டு அழைப்பு வந்தது- என் வாழ்வின் திருப்புமுனை நிகழ்வு அது. "உத்தர பிரதேஷத்திலே இருந்திருந்தால் சிறிய மேட்சுகளை மட்டுமே விளையாடி வாழ்க்கை முடிவு பெற்றிருக்கும்". ஏர் இந்தியாவில், பிரவீண் ஆம்ரே ரெய்னாவை ஊக்கப்படுத்தினார்... மெல்ல மெல்ல வாய்ப்புகள் சீராகத் தொடங்கியது. 

1999 இல், ரெய்னாவுக்கு ஸ்காலர்ஷிப் ஒன்றை ஏர் இந்தியா வழங்கியது. அதில் கிடைத்த 10000 ரூபாயில், "நான் 8000 ரூபாயை வீட்டுக்கு அனுப்பிவிடுவேன். வீட்டினருடன் பேச தொலைப்பேசிக்கு 4 ரூபாய் செலவாகும், 2 நிமிடம் பேசியவுடன் இணைப்பை கட் செய்வேன். பணத்தின் மதிப்பை நான் அறிந்திருந்தேன்," என்று நினைவுகளை பகிர்ந்தார் சுரேஷ் ரெய்னா. 

ஐபிஎல் என் வாழ்வின் அடுத்த பெரிய திருப்புமுனை. முட்டியில் ஏற்பட்ட அறுவைசிகிச்சை காரணமாக அரும்பெரும் சில மாதங்களை இழந்தேன். "அது ஒரு கடினமான காலம். என் கேரியரே முடிந்துவிடும் என பயந்தேன். எனக்கு 80 லட்சம் வீட்டுக்கடன் இருந்தது." ஆனால் மீண்டு வந்தார் ரெய்னா. ஏப்ரல் 2015ல் சுரேஷ் ரெய்னா பிரியங்கா செளத்திரியை மணமுடிந்தார். அவர் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஒரு வங்கியில் பணிபுரியும் ஐடி ஊழியர். 

"திருமணம் ஒருவித ஸ்திரத்தன்மையையும், பொறுப்பையும் தந்துள்ளது. முன்பு விளையாட்டை மட்டும் விளையாடி விட்டு போய்விடுவேன். ஆனால் இப்போது, விளையாட்டு சம்மந்தப்பட்ட ஒப்பந்தங்களை  கவனமாக படிக்கிறேன். நேரத்தை எப்படி சரிவர உபயோகிக்கலாம் என்றும் வருங்காளைத்தையும் திட்டமிடுகிறேன். ஒரு கிரிக்கெட்டரின் வாழ்வைப் பற்றி உங்களுக்கே தெரியுமல்லவா?? பணி அதிகமாகவும், நேரம் குறைவாகவும் இருப்பதைப் போல் தோன்றுகிறது," என்றார்.

 அண்மையில் ரெய்னா பிரியங்காவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 

தமிழில்: இந்துஜா ரகுநாதன்