மும்பை ரயிலில் பெண் பயணிகள் டாக்டருடன் பார்த்த பிரசவம்: கோச்சில் பெண் குழந்தையை பெற்று எடுத்த சுல்தானா! 

0

22 வயது கர்பிணிப் பெண் சுல்தானா காட்டுனுக்கு, மும்பை உள்ளூர் ரயிலில் பயணித்துக் கொண்டிருக்கும் போது பிரசவ வலி எடுத்தது. ஆம்பிவில்லியில் இருந்து சயனில் உள்ள மருத்துவமனைக்கு ரயிலில் சென்றுக் கொண்டிருந்தார் அவர். அப்போது இரவு 10.15 மணி இருக்கும், ரயில் தாதர் ஸ்டேஷனில் 30 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. அங்குள்ள டாக்டர் அவசரமாக அழைக்கப்பட்டு சுல்தானாவுக்கு பிரசவம் பார்த்ததில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. 

லேசான வயிறு வலி ஏற்பட்டதால் தன் கணவர் மற்றும் மாமியாருடன் உள்ளூர் ரயிலில் சயனில் உள்ள நாயர் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த சுல்தானவுக்கு கடுமையான பிரசவ வலி ரயிலில் ஏற்பட்டது. தானேவில் தொடங்கிய வலி, தாதர் வருவதற்குள் ஜாஸ்தியாகி, அவரால் வலியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அப்போது சுல்தானாவின் கணவர் மொஹமத் பதட்டத்தில் அங்குள்ள பயணிகளிடம் உதவி கேட்டார்.

இது பற்றி மிட் டே இடம் பேசிய மொஹம்மத், 

“என் மனைவிக்கு மார்ச் 5-ம் தேதி பிரசவத்துக்கு நாள் குறித்திருந்தனர். ஆனால் திடீரென புதன் மதியம் அவருக்கு வலி வந்தது. ரயிலில் தாதர் ஸ்டேஷன் அடைவதற்குள் வலி பொறுக்க முடியாமல் போனது. அங்குள்ள பெண் போலீஸ் அதிகாரி ஒருவரிடமும், சக பெண் பயணிகளிடமும் உதவி கேட்டேன். அந்த அதிகாரி ரயில் செயினை இழுத்து நிறுத்தினார். தாதரில் டாக்டர் வந்து என் மனைவிக்கு பிரசவம் பார்த்தார். பெண் குழந்தை பிறந்துள்ளது,” என்றார். 

தாதர் ஸ்டேஷனில் இருந்த ஆர்பிஎஃப் அதிகாரிகள் சுல்தானாவை பின்னர் சயனில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையும் அவரும் தற்போது நலமாக இருக்கின்றனர். 

சுல்தானாவின் பிரசவம் மாற்றுத்திறனாளிகளுக்கான கோச்சில் நடைப்பெற்றது. ரயில் பயணிகள் எவரும் தாமதத்திற்கு குறை சொல்லாமல் அவருக்காக பொறுமையாக காத்திருந்தனர். இது பற்றி ஆர்பிஎப் அதிகாரி சதீஷ் மேனன் கூறுகையில்,

“ப்ளாட்பாரம் எண் 3-ல் நின்ற ரயிலில் இந்த பிரசவம் நடந்தேறியது. எங்கள் ஊழியர்கள் சூழ்நிலையை நன்றாக சமாளித்தனர். பெண் பயணிகள் மற்றும் ஸ்டேஷனில் உள்ள டாக்டரின் உதவியுடன் இதை செய்தோம்,” என்றார்.

பிரசவம் நடந்த பரப்பரப்பில் மொஹமத் தன் தாயை ப்ளாட்பாரத்திலேயே விட்டுவிட்டு மனைவியுடன் மருத்துவமனை சென்று விட்டார். பின்னர் தெரிந்தவுடன் மீண்டும் தாதர் ஸ்டேஷனுக்கு சென்று அவரை அழைத்து வந்தார்.

பரப்பரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரும், இது போன்ற சம்பவங்களின் போது தங்களின் நேரத்தை பொருட்படுத்தாது உதவிக்கரம் நீட்டுவது, மனிதநேயத்தின் சக்தியை உறுதிப்படுத்துகிறது என்றே சொல்லவேண்டும். 

கட்டுரை: Think Change India